உலகம் இன்று தகவல் வெடிப்பின் காலத்தை எதிர்கொள்கிறது. சமூக ஊடகங்கள், டிஜிட்டல் செய்தி தளங்கள், தொலைக்காட்சி, வானொலி, அச்சு ஊடகம் என பன்முக வாயில்களில் தகவல் விரைந்து பரவுகிறது. இந்நிலையில், ஊடகத்தின் தேவை, பொறுப்பு மற்றும் அவசியம் குறித்து சிந்திப்பது காலத்தின் கட்டாயமாகிறது.
ஊடகம் என்பது வெறும் செய்தி பரிமாற்றக் கருவி அல்ல; அது பொதுமக்கள் மற்றும் அதிகார அமைப்புகளுக்கு இடையிலான உயிர் பாலமாக விளங்குகிறது." ஒரு, சுதந்திரமான மற்றும் விமர்சன ரீதியான புலனாய்வு, பத்திரிகை எந்தவொரு ஜனநாயகத்திற்கும் உயிர்நாடியாகும்.A critical, independent and investigative press is the lifeblood of any democracy.” என்கிறார் நெல்சன் மண்டேலா. மக்கள் உண்மையை அறியவும், தங்கள் உரிமைகளை புரிந்துகொள்ளவும், சமூக மாற்றத்தில் பங்கெடுக்கவும் ஊடகம் இன்றியமையாதது.
செய்திகளை பரப்புவது மட்டுமே ஊடகத்தின் பணி அல்ல; அதை சரிபார்த்து, துல்லியமாக, நியாயமாக வழங்க வேண்டும். மகாத்மா காந்தி தனது ஹரிஜன் பத்திரிகையில் “The sole aim of journalism should be service.” செய்தித்துறையின் ஒரே நோக்கம் சேவையே ஆக வேண்டும் என எழுதுகின்றார். பொறுப்பற்ற செய்தி, தவறான புரிதல்களையும் சமூக விரிசல்களையும் ஏற்படுத்தும். எனவே, நெறிமுறைகளும் மனிதநேயமும் ஊடகத்தின் அடிப்படை தூண்களாக இருக்க வேண்டும்.
இன்றைய காலத்தில் “பொய்த்தகவல்கள்” (Fake News) மின்னல் வேகத்தில் பரவுகின்றன. அதனால் உண்மைச் சரிபார்ப்பு, பொதுநல பார்வை, சமூக ஒற்றுமை ஆகியவை அதிக அவசியம் பெற்றுள்ளன. “A newspaper is the public’s watchdog, the guardian of their rights.” ஒரு பத்திரிகை என்பது மக்களின் காவல்நாய்; அவர்களின் உரிமைகளின் காவலன் என்கிறார் ஜோசப் புலிட்சர். இந்தக் காவல் பணி என்பது, அரசியல், பொருளாதாரம், சுற்றுச்சூழல், மனித உரிமைகள் போன்ற துறைகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதாகும்.
சமகால ஊடகப் பரப்பு, ஜனநாயகத்தின் சக்கரத்தைச் சுழலச் செய்யும் முக்கிய இயந்திரம். தகவல் பெருக்கம் உள்ள இந்தக் காலத்தில், உண்மையையும் நியாயத்தையும் காக்கும் பொறுப்பு ஊடகத்திடம் உள்ளது. ஊடகம் தேவைப்பட்டாலும், அது பொறுப்புடன் செயல்படாவிட்டால் அதன் அவசியம் களையப்படும். ஆகவே, ஊடகம் தனது பங்கை நேர்மையுடன், தெளிவுடன், நியாயத்துடன் நிறைவேற்ற வேண்டும்.
4தமிழ்மீடியா’ ஊடக தர்மத்தின், மேற்குறித்த அடிப்படைகளோடு ஆரம்பித்து இன்றோடு பதினேழு ஆண்டுகள் நிறைவடைகிறது. சில அசாத்திய நம்பிக்கை மனிதர்களோடு நான்காம் தமிழ் ஊடகமாக இணையத்தில் வலம் வரத் தொடங்கிய நாம், எம்மை வளர்த்துக் கொள்வதற்காக, என்றைக்குமே சமூகத்தை வீணடிக்கும் அல்லது தப்பாக வழிகாட்டும் செயல்களில் (எம்மை அறிந்து) ஈடுபட்டதில்லை என்கிற மனத்திருப்தியோடு பயணிக்கின்றோம் என்பதை மீண்டும் மீண்டும் சொல்லித் திருப்தி கொள்வோம். இந்த மனத்திருப்தியும், நம்பிக்கையுமே எங்கள் பலத்தின் ஆதாரம் .
ஒரு தவம் போல் தொடரும் எமது ஊடகப் பயணத்தினை, எவ்வளவோ இடர்களைச் சந்தித்தே கடந்திருக்கிறோம். இனியும்அவைகளை எதிர்கொண்டு வெற்றி கொள்வோம். புதிய யோசனைகளைச் செயலாக்க முனைகின்றோம். அதற்கான ஆதாரமாக, எமைத் தொடரும் வாசகர்களாகிய நீங்கள் இருக்க வேண்டும். எமது, படைப்புக்கள், ஊடக நடவடிக்கைகளில் தவறுகள், கருத்துக்கள் இருப்பின் எந்தவித தயக்கமும் இன்றி சுட்டிக்காட்ட வேண்டும். அதுவே, எம்மை இன்னும் வளப்படுத்த உதவும்.
எமது வளர்ச்சிப் பயணத்தில் உடன் வரும் அனைவர்க்கும் நன்றிகளும், வணக்கங்களும் !
- என்றும் மாறா இனிய அன்புடன்
4தமிழ்மீடியா குழுமத்தினர்