free website hit counter

சுவிஸ் அரசியலில் ஒரு ஈழத்து முகம் - ஜெயகுமார் துரைராஜா !

பார்வைகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

1988 ம் ஆண்டு சுவிற்சர்லாந்துக்கு இலங்கையிலிருந்து வந்த ஒரு ஈழத்து அகதி. வாழ்வின் எந்த நம்பிக்கைகளும் தொற்றிக் கொள்ளாத நிலையிலிருந்த ஒரு ஈழத் தமிழ்மகன், இன்று சுவிற்சர்லாந்தின் ஒரு பெருநகரின் அதி உயர்பதவியான தலைவர் பதவியில் அமர்ந்திருக்கின்றார்.

ஒருகாலத்தில் எந்த அதிகாரப்பூர்வ ஆவணங்களும் இல்லாத ஒருவர், தன் சுயமுயற்சியில் உயர்ந்து,  நேற்று செவ்வாய்க்கிழமை, செங்காலன் நகர பாராளுமன்றத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சுவிற்சர்லாந்தில் ஈழத்தமிழர்கள் அகதியாக தஞ்சம் கோரிய நான்கு தசாப்தகாலங்களில் நிகழ்ந்திருக்கும் ஒரு முக்கியமான மாற்றம். சுவிஸ் வாழ் தமிழ் மக்களின் இரண்டாம் தலைமுறையினர் இங்கு கல்வி கற்று உயர்பதவிகளில் இடம் பிடித்து வரும் சூழலில், அகதியாகப் புலம் பெயர்ந்த முதற் தலைமுறையைச் சேர்ந்த ஒருவர், தன் வாழ்வாதாரப் போராட்டங்களையும் கடந்து, உள்ளூர் அரசியலில் அக்கறையுடன் செயற்பட்டு, ஒரு நகரத்தின் தலைவராகியிருப்பது முக்கியமானது. முதல் தலைமுறைத் தமிழர்கள் பலரும் உள்ளூர் அரசியலில் அங்கம் கொண்டிருந்த போதும், ஒரு நகரத்தின் தலைவராக உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்க மாற்றம்.

செங்காலன் நகர பாராளுமன்றத்தில் புதிய ஆண்டின் முதல் அமர்வில், பசுமைக் கட்சி (Grüne) சார்ந்த ஜெயகுமார் துரைராஜா,  புதிய தலைவராக, செங்காலன் நகரின் உயரிய பதவிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2011ஆம் ஆண்டு சுவிஸ் குடியுரிமை பெற்ற அவர், 2016ஆம் ஆண்டு முதல் செங்காலன் நகர பாராளுமன்றத்தில் பசுமைக் கட்சியின் சார்பில் அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். 

இவரது தெரிவு குறித்து, பசுமைக் கட்சி மற்றும் இளைய பசுமைக் கட்சியின் பிரிவு தலைவர் கிறிஸ்டியான் ஹூபர், கூறுகையில், "செங்காலன் நகரில் நிரந்தரமாக வசிக்கும் மக்களில் மூன்றில் ஒருபங்கிற்கும் அதிகமானோர் சுவிஸ் குடியுரிமை இல்லாதவர்கள். 15 வயதுக்கு மேற்பட்ட மக்களுள் பாதிக்கும் மேற்பட்டோருக்கு குடியேற்றப் பின்னணி உள்ளது. எனவே இன்று ஒரு ‘கெல்லர்’ அல்லது ‘முல்லர்’ அல்லாமல், ஒரு ‘துரைராஜா’ செங்காலனின் உயரிய பதவிக்குத் தேர்வாகுவது விசேஷமானது. இது இந்த நகரத்தின் மற்றும் இந்த நாட்டின் உண்மையான யதார்த்தத்தை வெளிப்படுத்துகிறது. இந்த யதார்த்தம் எளிதாக உருவானதல்ல; அது முன்பும் இன்றும் போராட்டங்களுக்கு உள்ளாகி வருகிறது "  என்று குறிப்பிட்டார். 

நேற்றைய (20.01.2026 ) தினம் பதவியேற்றுக் கொண்ட ஜெயகுமார் துரைராஜா, தனது  உரையில், பயிற்சி பெற்ற செவிலியராக இருந்து  சமூக ஆலோசகராக புதிய பாதையில் பயணிக்கும், தன்னுடைய கதை,  உள்நாட்டுப் போர் நிலவிய தனது தாயகத்திலிருந்து தப்பியோடிய ஒரு இளைஞனின் கதை என  அவர் இளமையில் அனுபவித்த தனது சொந்தக் கதையையைக் குறிப்பிட்டார்." நான் என் குடும்பத்தை, நண்பர்களை, எனக்குத் தெரிந்த அனைத்தையும் விட்டுவிட்டு புறப்பட்டேன். பெற்றோர்களும் இல்லை, உடன் பயணிக்க யாருமில்லை. என் இலக்கு ஒரு பதவி அல்லது தொழில்முறை வாழ்க்கை அல்ல; உயிர் தப்பிப்பதே என் ஒரே நோக்கம்.» என்ற அவரது கூற்றின் பின்னால் மறைந்திருப்பது, தன் தாயக மண்ணில் ஏற்பட்ட கசப்பான அனுபவமும், உயிர் அச்சமும். 

"போரின் நடுவிலும், தப்பியோடும் பயணத்திலும், அறியாத எதிர்காலத்தை நோக்கிச் சென்ற வழியிலும், நான் 20 முறை இறந்திருக்கலாம். இருந்தும் உயிர் தப்பினேன்" எனும் அவரது   உணர்ச்சியும், வலியும் மிகுந்த வார்த்தைகள் பாராளுமன்ற உறுப்பினர்களின் மனங்களை ஆழமாகத் தொட்டன. அவர் உரையை நிறைவு செய்கையில், தமிழ்மொழியின் தனித்துவச் சிறப்பு மிக்கத் திருக்குறளில் "எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு " எனும் குறளையும், அதன் பொருளையும், ஜேர்மன் மொழியில் எடுத்துக் கூறி, " நன்றி உணர்வு கொண்டவர்களே முன்னேற முடியும்; மற்றவர்கள் முன்னேற முடியாது. இந்த நாட்டிலும், இந்த நகரமான செங்காலனிலும் வாழ முடிவது ஒரு பெரும் பாக்கியம். உங்கள் இந்தத் தேர்வின் மூலம், நீங்கள் எனக்கு ஒரு பெரிய மரியாதையை மட்டுமல்ல, ஒரு பொறுப்பையும் ஒப்படைத்துள்ளீர்கள். செங்காலன் ஒரு குடும்பநேய நகரம் , சமூக உணர்வும், விளையாட்டு-பண்பாட்டு சங்கங்களும், புதுமை, பசுமை, நிலைத்தன்மை ம, மற்றும் பல்வகைத் தன்மையும் கொண்ட நகரம். இந்த பல்வகைச் சிறப்புக்கள் பொருந்திய  செங்காலனையும், செங்காலனுக்குள் உள்ள பல்வகைத் தன்மையையும் முறைமையாகப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக நான் ஆவலுடனும், நன்றியுடனும்,  காத்திருக்கிறேன்" என்று கூறி நிறைவு செய்தார்.

சொந்த நாட்டிலிருந்து உயிர் பயத்துடன் ஒடிவந்து தஞ்சம் புகுந்த நாட்டின் ஒரு பெருநகரத்தின் தலைவனாக ஒரு ஈழத்தமிழ் மகன் உயர்ந்திருப்பது என்பது,  அகதிகளாக இந்த நாட்டிற்கு வந்து, உழைப்பால் உயர்ந்து நிற்கும் தமிழ்மக்களின் உன்னதமான அடையாளம். அகதியாக இந்த நாட்டிற்கு வந்த ஒரு தமிழனை அரசியல் அதிகாரத்தில் ஏற்றிப் பார்க்கும் இந்த ஜனநாயகப் பண்பும், அதற்கான அர்ப்பணிப்பினை வழங்கியிருக்கும் ஜெயக்குமாரும் கொண்டாடப்பட வேண்டியவர்கள். கொண்டாடுவோம் !

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula