free website hit counter

எரியும் மருத்துவமனைகள் -  யார் பயங்கரவாதம் ?

பார்வைகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

உலக அரசியல் மொழியில் “பயங்கரவாதம்” என்பது ஒரு ஆயுதமாகவே பயன்படுத்தப்படுகிறது. அதைக் குறிக்கும் போது, பெரும்பாலும் அரசுகள் தங்களுக்குப் புறம்பான ஆயுதக் குழுக்களை மட்டுமே சுட்டிக்காட்டுகின்றன. ஆனால், அதே அளவிலான வன்முறையை அரசுகள் தாங்களே நிகழ்த்தும் போது, அந்தச் சொல் ஏன் மௌனமாக்கப்படுகிறது?

“பயங்கரவாதம்” என்ற சொல்லை யார் வரையறுக்கிறார்கள்?. அதை யார் பயன்படுத்துகிறார்கள்?. அதை யாருக்கு மட்டும் பயன்படுத்துகிறார்கள்?. இந்த மூன்று கேள்விகளுக்கும் ஒரே பதில்தான் உள்ளது. அது; அரசியல் அதிகாரம் கொண்டவர்கள்.

அதனால் தான், அரசுகள் பயங்கரவாதம் செய்யாது; பயங்கரவாதம் செய்பவர்கள் எப்போதும் ‘மற்றவர்கள்’ மட்டுமே எனும்  ஒரு நிரந்தர பொய்யை உலக அரசியல் உருவாக்கியுள்ளது. 

மருத்துவமனை மீது குண்டு வீசுவது: தவறா, திட்டமா?

ஆப்கானிஸ்தானில், காசாவில், புதுக்குடியிருப்பில், யாழ்ப்பாணத்தில் , மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது, ஒவ்வொரு முறையும் தரப்படும் ஒரே விளக்கம்; “தவறான தகவல்” , “எதிரி மறைவிடம்” ,“துணை சேதம்”. ஆனால், இந்த விளக்கங்கள் மீண்டும் மீண்டும் தோன்றும் போது, அது தவறுகளின் தொடர்ச்சி அல்ல , அது ஒரு அமைப்பின் செயல் முறை (pattern).

ஒரு அமைப்பு தொடர்ந்து பொதுமக்கள் பாதுகாப்பு இடங்களைத் தாக்கி, பின்னர் அதை நியாயப்படுத்திக் கொண்டே இருந்தால்,
அது தவறுகளைச் செய்கிறது என்று சொல்ல முடியாது. அது தன் அரசியல் நோக்கத்தை பயங்கரவாதமாக நிறைவேற்றுகிறது.

மருத்துவமனைகள் மீது குண்டுகள்: “பயங்கரவாதம்” என்ற சொல்லின் அரசியல் இரட்டை நிலை
 
ஆப்கானிஸ்தான், காசா, புதுக்குடியிருப்பு, யாழ்ப்பாணம், என வெவ்வேறு காலங்களில்   மருத்துவமனைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள்  அனைத்தும் ஒரே கேள்வியை எழுப்புகின்றன. பயத்தை உருவாக்கும் வன்முறை “பயங்கரவாதம்” என்றால், அதைச் செய்பவர் அரசு என்றால் அது என்ன?

மருத்துவமனை: பாதுகாப்பின் சின்னமா, இலக்கா?

சர்வதேச மனிதாபிமான சட்டத்தில், மருத்துவமனைகள் தாக்குதலுக்கு அப்பாற்பட்ட இடங்களாகத் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன. அவை போரின் நடுவிலும் உயிர் காப்பதற்கான கடைசி தங்குமிடங்கள். ஆனால், சமீபத்திய மற்றும் வரலாற்றுச் சம்பவங்கள் வேறொரு உண்மையை வெளிப்படுத்துகின்றன:
மருத்துவமனைகள் இப்போது “பாதுகாப்பு மண்டலம்” அல்ல , பல நேரங்களில் அவை “இலக்கு”.

ஒரே கதை, பல நாடுகள்

ஆப்கானிஸ்தானில் பாக்கிஸ்தான் மேற்கொண்ட தாக்குதல்கள் “எதிர்-பயங்கரவாத நடவடிக்கை” என்று விவரிக்கப்படுகின்றன. காசாவில் இஸ்ரேல் தாக்குதல்கள் “தற்காப்பு” என்ற பெயரில் விளக்கப்படுகின்றன. இலங்கையில் புதுக்குடியிருப்பில் நடந்த தாக்குதல்கள் “போரின் அவசியம்” என்று கூறப்படுகின்றன. யாழ்ப்பாணத்தில் இந்திய அமைதிப்படை நடவடிக்கைகள் “அமைதி நிலைநாட்டல்” என்ற போர்வையில் நிகழ்ந்தன. 

வார்த்தைகள் மாறுகின்றன ஆனால் விளைவுகள் மாறுவதில்லை. சிதைந்த கட்டிடங்கள், காயமடைந்த நோயாளிகள், உயிரிழந்த பொதுமக்கள், பதில் கூறாத அதிகாரங்கள், “மறைவிடம்” என்ற நிரந்தர காரணம்.

இந்தச் சம்பவங்களில் அரசுகள் பொதுவாக முன்வைக்கும் காரணம் ஒன்றேயொன்று. “எதிரிகள் மருத்துவமனைகளை மறைவிடமாகப் பயன்படுத்துகின்றனர்.” இந்த வாதம், இராணுவ ரீதியில் சில சமயங்களில் உண்மையாயிருக்கலாம். ஆனால் கேள்வி வேறு. அந்தக் காரணம், ஒரு மருத்துவமனையை தாக்குவதற்கு முழுமையான நியாயமா? இநத்க் கேள்விக்கு ஆம் எப் பதிலளித்து இந்த வாதம் ஏற்றுக்கொள்ளப்பட்டால், உலகின் எந்த மருத்துவமனையும் பாதுகாப்பானதாய் இருக்காது.

இரட்டை அளவுகோல்: யார் “பயங்கரவாதி”?

ஒரு ஆயுதக் குழு மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தினால், அது உடனடியாக “பயங்கரவாதம்” என அழைக்கப்படுகிறது.
ஆனால், அதே செயலை ஒரு அரசு மேற்கொண்டால்; “குறிக்கோள் தவறியது”, “தவறான நுண்ணறிவு”, “துணை சேதம்” (Collateral damage). இந்த மொழி மாற்றம் சாமான்யமல்ல. இது அரசியல் அதிகாரத்தின் பிரதிபலிப்பு. சொற்களை கட்டுப்படுத்தும் ஆற்றல், உண்மையையும் கட்டுப்படுத்துகிறது.

பயம்: ஒரு திட்டமிட்ட அரசியல் கருவி ?

பயங்கரவாதத்தின் மைய நோக்கம்  பயத்தை உருவாக்குவது. அந்த அளவுகோலில் பார்க்கும்போது, மருத்துவமனைகள் மீது தாக்குதல், பொதுமக்கள் பாதுகாப்பு இடங்களை அழித்தல், சமூகத்தை அச்சுறுத்தும் இராணுவ நடவடிக்கைகள், இவை அனைத்தும் ஒரு சமூகத்தில் ஆழமான மனஅழுத்தத்தையும் பயத்தையும் உருவாக்குகின்றன. அப்படியானால், இந்த விளைவுகள் திட்டமிட்டவையா அல்லது தவிர்க்க முடியாத பக்கவிளைவுகளா?

பயத்தை உண்டாக்கும் விளைவுகளை அறிந்தே மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், அரசுகளின் பயங்கரவாதமாகவே கருதப்பட வேண்டுமல்லவா? 

சர்வதேச அமைப்புகள் காண்பிக்கும் மௌனம் நியாயமானதா? அல்லது மந்தமான நீதியா?

இந்தச் சம்பவங்கள் நடந்த  பிறகு, கண்டனங்கள் வெளியாகின்றன. விசாரணைகள் அறிவிக்கப்படுகின்றன. ஆனால் அரிதாகவே பொறுப்பேற்பு நிகழ்கிறது. அரசியல் மற்றும் இராணுவ சக்தி அதிகமுள்ள நாடுகள், சர்வதேச சட்டத்தின் விளைவுகளைத் தவிர்க்கும் திறனைப் பெற்றுள்ளன. இதனால் ஒரு ஆபத்தான முன்னுதாரணம் உருவாகிறது. அதுதான் 
சட்டம் பலவீனருக்கு மட்டுமா?

சொல்லப்படாத உண்மையைச் சொல்ல வேண்டிய நேரம்

மருத்துவமனைகள் மீது குண்டுகள் வீசப்படும் உலகில், “பயங்கரவாதம்” என்ற சொல்லை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் உள்ளது.அதை யார் செய்கிறார்கள் என்பதைக் கருத்தில் கொள்ளாமல், அது என்ன செய்கிறது என்பதையே அடிப்படையாகக் கொள்ள வேண்டிய நேரம் இது. பொதுமக்கள் மீது பயத்தை உருவாக்கும் வன்முறை ; அது எந்தக் கையிலிருந்தும் வந்தாலும்  பயங்கரவாதமே. அதை ஒப்புக்கொள்ளாத வரை, உலக அரசியல் மொழி உண்மையை மறைக்கும் ஒரு கருவியாகவே தொடரும்.

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula