"உலகத்தை மாற்ற நீங்கள் பயன்படுத்தக்கூடிய மிக சக்திவாய்ந்த ஆயுதம் கல்வி." என்றார் நெல்சன் மண்டேலா. இது உலகப்பொதுமைக்கான கூற்றே ஆயினும், சிறுபான்மைச் சமூகங்களாக, இனங்களாக வாழும், நம் ஈழத் தமிழ் சமூகம் போன்றவர்களுக்கு இது இன்னும் ஒரு படி மேலென்போம்.
புலம்பெயர் ஐரோப்பியச் சூழலில் சிறுபான்மைச் சமூகமாகவும், இரட்டைக் கலாச்சாரச் சூழலுக்குள் வாழ்பவர்களுமாகவுள்ள எமது பிள்ளைகளின் கல்வி உயர்வு என்பது சாதாரணமானது அல்ல. அதில் வெற்றிகரமாகப் பயணித்து, உயர்வுகளைப் பலரும் தொட்டுவருவது, தொடர்ந்து வருவதென்பது ஈழத்தமிழ்சமூகத்தின் சமகால அற்புதமான அறுவடைகளில் விளைவு எனலாம்.
சுவிற்சர்லாந்தின் சூரிச் ETH பல்கலைக்கழகம் என்பது , உலகின் முதல்தரப் பல்கலைக்கழகங்களில் முக்கியமானது. இதில் கல்வி பயிலும் வாய்ப்பு என்பதே பெருவரம். சுவிற்சர்லாந்திலுள்ள ஈழத் தமிழர்களின் இரண்டாம் தலைமுறை, தம் திறமைகளின் வழியே, இந்தப் பெருங்கல்விக் கூடத்தின் கதவுகள் திறந்து உள்நுழைந்து வருகிறார்கள் என்பது அவர்கள் திறமைக்கான அங்கீகாரம் மட்டுமல்ல. முதல் தலைமுறைத் தமிழர்களின் அர்ப்பணிப்பான வாழ்வியலுக்கான சான்றுகளுமாகும்.

பெருமைக்குரிய இந்தப் பல்கலைகழகத்தில், மருத்துவத் தொழில்நுட்பத்தில், இளங்கலை, முதுகலைப் பட்டங்களை முடித்த சகானா சிவச்செல்வம் அவர்கள், தனது பல்துறை சார் அறிவை, சுவிற்சர்லாந்தின் செங்காளன் பல்கலைக்கழகத்தில் (University of St. Gallen) Digital Health தொழில்முனைவு மற்றும் நீண்ட ஆயுள் (Longevity) ஆகிய துறைகளிலான ஆராய்ச்சியில் ஈடுபட்டு, அதற்கான ஆய்வேட்டை வெற்றிகரமாகச் சமர்ப்பித்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.
ஏதுமற்ற ஏதிலிகளாக, சுவிற்சர்லாந்து மண்ணில் அரசியல் வாழ்நிலை தஞ்சம் பெற்ற சகானாவின் பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளுக்கான, கல்வி, சுதந்திரம், என்பவற்றில் மிகுந்த கவனம் கொண்டவர்கள். இலக்கிய ஆர்வமும், தாயகம் மீதான பற்றுதலும், மிக்க அவர்களின் கல்வி மீதான கரிசனையின் நிறை தகவுதான், கலாநிதி சகானா சிவச்செல்வம் என்றால் மிகையல்ல.
சகானாவின் இந்த உயர்வுச் சிறப்பானது, அவரது பெற்றோர்களுக்கு மட்டுமானதல்ல. புலம் பெயர் தமிழ் சமூகத்திற்கும், தாயகத்தின் கல்விசார் சமூகத்திற்கும், என்பதற்கும் அப்பால், மனித சமூகத்திற்குமானது என்றால் அதுவும் மிகையல்ல. ஏனெனில் சகானாவின் அறிவாராய்ச்சி, இந்த மனித சமூகத்தின் வாழ்தரத்துக்கானது. இது இன்னும் பல உயர்வுகளுக்கும், புதுமைகளுக்குமான தொடக்கமாகவே நிச்சயம் இருக்கும். ஆதலால் ' மானுடம் வெல்க' என மனந்திறந்து சகானாவிற்கு வாழ்த்துக்களைக் கூறலாம்.
- 4தமிழ்மீடியாவிற்காக : மலைநாடான்