free website hit counter

மக்கள் ஜனநாயகத்தின் உயிர்த்துடிப்பு சுவிஸ் மக்கள் வாக்கெடுப்பு !

Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

2026 மார்ச் 8 அன்று சுவிற்சர்லாந்தில் நடைபெற்ற தேசிய மக்கள் வாக்கெடுப்புகள், இந்த நாட்டின் தனித்துவமான அரசியல் முறைமைக்கு மீண்டும் உலக கவனத்தை ஈர்த்தன. அரசியல் கட்சிகள், அரசு மற்றும் பாராளுமன்றம் மட்டுமல்லாமல், நேரடியாக மக்கள், தாங்களே முக்கிய தேசிய முடிவுகளை எடுக்கும் அமைப்பு . இதுவே சுவிற்சர்லாந்தின் “நேரடி ஜனநாயகம்” (Direct Democracy).

இந்த முறைமை, பல நூற்றாண்டுகளாக வளர்ந்து வந்த சுவிஸ் அரசியல் கலாச்சாரத்தின் முக்கிய அடையாளமாகக் கருதப்படுகிறது. 

மக்கள் நேரடியாக முடிவெடுக்கும் அரசியல்

பெரும்பாலான நாடுகளில் மக்கள் தேர்தலில் அரசியல்வாதிகளை தேர்ந்தெடுத்து, பின்னர் அவர்கள் சட்டங்களை உருவாக்குகின்றனர். ஆனால் சுவிட்சர்லாந்தில் அது முடியாது.  மக்கள் தாமே சட்டங்கள் மற்றும் அரசியல் அமைப்பு மாற்றங்கள் குறித்து நேரடியாக வாக்களிக்கும் உரிமையை பெற்றுள்ளனர்.

இந்த அமைப்பில் மூன்று முக்கிய கருவிகள் உள்ளன:

1. மக்கள் முன்மொழிவு (Popular Initiative)
மக்கள் அரசியல் அமைப்பில் (constitution) மாற்றம் செய்ய விரும்பினால், அவர்கள் ஒரு முன்மொழிவை உருவாக்கி கையொப்பங்களை சேகரிக்கலாம்.

18 மாதங்களுக்குள் 100,000 கையொப்பங்கள் சேகரிக்கப்பட்டால், அது தேசிய வாக்கெடுப்புக்கு செல்லும்.

2. கட்டாய வாக்கெடுப்பு (Mandatory Referendum)
அரசியல் அமைப்பில் மாற்றம் செய்யும் எந்த சட்டமும் கட்டாயமாக மக்களிடம் வாக்கெடுப்புக்கு செல்ல வேண்டும்.

3. விருப்ப வாக்கெடுப்பு (Optional Referendum)
பாராளுமன்றம் நிறைவேற்றிய ஒரு சட்டத்தை மக்கள் எதிர்க்க விரும்பினால்:

100 நாட்களுக்குள் 50,000 கையொப்பங்கள் சேகரித்தால் அந்த சட்டம் மீண்டும் மக்களிடம் வாக்கெடுப்புக்கு வரும்.

இதனால் சுவிற்சர்லாந்தில் அரசியல் அதிகாரம் பாராளுமன்றத்தில் மட்டும் இல்லாமல் மக்களிடமும் உள்ளது.

2026 மார்ச் 8: மக்கள் தீர்மானித்த முக்கிய கேள்விகள்

இந்த ஆண்டு வாக்கெடுப்பில் பல முக்கிய தேசிய முன்மொழிவுகள் குறித்து மக்கள் தீர்மானித்தனர்.

திருமண வரி தண்டனைக்கு முடிவு
திருமணமான தம்பதிகள் தனிநபர் அடிப்படையில் வரி செலுத்தும் முறை (individual taxation) ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது பல ஆண்டுகளாக “marriage penalty” என்று அழைக்கப்பட்ட பிரச்சினைக்கு தீர்வு தரும் ஒரு முக்கிய அரசியல் மாற்றமாகக் கருதப்படுகிறது.

பொது ஒளிபரப்பு கட்டண குறைப்பு நிராகரிப்பு
சுவிஸ் பொது ஒளிபரப்பு அமைப்பான SRG SSR க்கான கட்டணத்தை 200 சுவிஸ் ஃப்ராங்காக குறைக்கும் முன்மொழிவை வாக்காளர்கள் நிராகரித்தனர். இதன் மூலம் பொதுச் சேவை ஊடகங்களுக்கு மக்கள் ஆதரவு தொடர்கிறது என்பதுடன், ஒரு நாட்டின் ஜனநாயகத் தன்மையை நிலை நாட்ட, பொது ஊடகம் எவ்வளவு முக்கியமானது என்பதில் அக்கறையாக உள்ளனர் என்பது தெளிவானது.

பணம் (cash) பற்றிய சமரச தீர்வு
“Cash initiative” நிராகரிக்கப்பட்டாலும், அரசின் counter-proposal ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதன் மூலம் பணம் பயன்படுத்தும் உரிமை அரசியல் அமைப்பில் பாதுகாக்கப்படும்.

காலநிலை நிதி திட்டம் நிராகரிப்பு
காலநிலை மாற்றத்தைக் கையாள பெரிய அளவிலான தேசிய நிதி உருவாக்கும் முன்மொழிவு பெரும்பான்மையால் நிராகரிக்கப்பட்டது. இது தொடர்பில் பல்வேறு அரசுகளும் மேற்கொள்ளக் கூடிய வேலைத்திட்டங்கள் மீதான நம்பிக்கையீனமே  சுவிஸ் மக்கள் இந்த முன்மொழிவை நிராகரித்திருப்பதாகக் கருதுகின்றேன். 

இந்த வாக்கெடுப்பில் எந்த கட்சிகளின் கூற்றுக்கள் வென்றன?

இந்த வாக்கெடுப்பு முடிவுகள் அரசியல் கட்சிகளுக்குள் வெற்றி மற்றும் தோல்விகளை கலந்த ஒரு நிலையை உருவாக்கின.

பொருளாதார லிபரல் கொள்கைகளை ஆதரிக்கும் FDP.The Liberals மற்றும் Green Liberal Party of Switzerland ஆகிய கட்சிகள், தனிநபர் வரி முறை ஏற்றுக்கொள்ளப்பட்டதால் முக்கிய அரசியல் வெற்றியை பெற்றன.

மத்திய அரசியல் சமரசங்களை வலியுறுத்தும் The Centre கட்சியும் cash counter-proposal வெற்றியடைந்ததால் அரசியல் பலம் பெற்றதாக பார்க்கப்படுகிறது.

மாறாக, Swiss People's Party ஆதரித்த SRG கட்டண குறைப்பு போன்ற முன்மொழிவுகள் தோல்வியடைந்ததால் அந்தக் கட்சிக்கு ஒரு அரசியல் பின்னடைவு ஏற்பட்டது.

இதே நேரத்தில், Social Democratic Party of Switzerland மற்றும் Green Party of Switzerland ஆகிய இடதுசாரி கட்சிகள் கலப்பு முடிவுகளை சந்தித்தன. பொதுச் சேவை ஊடகங்களுக்கு ஆதரவு கிடைத்தாலும், காலநிலை நிதி முன்மொழிவு நிராகரிக்கப்பட்டது இவர்களுக்கான பின்னடைவு.

சுவிஸ் வாக்காளர்களின் அரசியல் மனநிலை

இந்த வாக்கெடுப்பின் முக்கிய செய்தி என்னவெனில், சுவிஸ் வாக்காளர்கள் பெரும்பாலும் மிதமான மாற்றங்களை விரும்புகின்றனர். அவர்கள் தேவையான இடங்களில் சீர்திருத்தங்களை ஏற்கத் தயாராக உள்ளனர். ஆனால் மிகப் பெரிய அல்லது தீவிரமான மாற்றங்களுக்கு எச்சரிக்கையாக அணுகுகின்றனர். அரசியல் சமரசங்களை பெரும்பாலும் ஆதரிக்கின்றனர். இதுவே சுவிற்சர்லாந்தின் அரசியல் நிலைத்தன்மைக்கு ஒரு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.

ஜனநாயகத்தின் வாழும் ஆய்வகம்

சுவிற்சர்லாந்தின் நேரடி ஜனநாயக முறை உலக அரசியல் ஆய்வாளர்களுக்கு ஒரு “வாழும் ஆய்வகம்” போல உள்ளது. ஆண்டுக்கு பல முறை மக்கள் தேசிய, மாநில மற்றும் உள்ளூராட்சி மட்டங்களில் வாக்கெடுப்புகளில் பங்கேற்கின்றனர்.இதனால் அரசியல் அதிகாரம் மக்களிடமே இருப்பது மட்டுமல்லாமல், அரசியல்வாதிகளும் பொதுமக்களின் கருத்துகளை தொடர்ந்து கவனிக்க வேண்டிய நிலை உருவாகிறது.

2026 மார்ச் 8 வாக்கெடுப்பு முடிவுகள் மீண்டும் ஒரு முறை இதையே நினைவூட்டுகின்றன. சுவிட்சர்லாந்தில் அரசியல் என்பது வெறும் அரசாங்கத்தின் செயல் அல்ல . அது மக்களால் தொடர்ந்து வடிவமைக்கப்படும் ஒரு செயலில் இருக்கும் ஜனநாயகம்.

- 4தமிழ்மீடியாவிற்காக : மலைநாடான்

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula