free website hit counter

டெடி விமர்சனம்

திரைவிமர்சனம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சூர்யாவைத் தொடர்ந்து தனது படத்தை ஓடிடியில் தைரியமாக வெளியிட்டிருக்கும் மற்றொரு மாஸ் ஹீரோ ஆர்யா! கடைசியாக ஆர்யா நடிப்பில் ‘மகாமுனி’, ‘காப்பான்’ ஆகிய படங்கள் வெளிவந்து எந்த விளைவையும் ரசிகர்களிடம் ஏற்படுத்தவில்லை.

ஆனால் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கும் ‘டெடி’ ஆர்யாவின் இயல்புக்கு அற்புதமாகப் பொருந்தியிருக்கிறது.

மனிதர்களின் வாழ்க்கையில் ஒரு அங்கமாகிவிட்ட கரடி பொம்மைகளுக்கு உயிர்வந்தால் என்னவாகும் என்ற கருத்தாக்கத்தில் கடந்த 2012-ல் ஹாலிவுட்டில் வெளியாகி ஹிட்டடித்த படம் ‘TED'. அதன் இரண்டாம்பாகமும் வெளியாகி ஹிட்டடித்தது. அந்த கருத்தாக்கத்தை எடுத்துக்கொண்டு, தமிழ்ச் சூழலுக்கு ஏற்ப, விலை மதிக்கமுடியாத மனிதர் உறுப்புகளைத் திருடும் கும்பலை மையமாக வைத்தஉ ‘டெடி’ கதையை எழுதியிருக்கிறார் சக்தி சௌந்தர்ராஜன். இது இவருக்கு ஐந்தாவது படம். ஆனால் இவர் இதுவரை எடுத்துள்ள ஒவ்வொரு கதையுமே ஏற்கெனவே வெளியான படங்களின் ஐடியாக்களை அப்படியே திருடி எடுக்கப்பட்டவைதான்.

ஆர்யா தூய்மை மற்றும் ஒழுங்கை விரும்பும் ஒரு இளைஞர். 3 வருடம் செலவழித்து படிக்கும் பட்டப்படிப்பை இவர் 3 மாதத்தில் படித்துவிடுகிறார். 1000 பக்க புத்தகங்களை அரை மணிநேரத்தில் படித்துவிடுகிறார் அவ்வளவு திறமையானவர். அப்படிப்பட்டவர் தற்காப்புக் கலைகளையும் வேகமாக கற்றுக்கொண்டு உடல் வலிமையுடன் இருக்கிறார்.

இச்சமயத்தில் கல்லூரியில் படிக்கும் சாயிஷா, விபத்தொன்றில் சிக்கி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். அங்குள்ள கேடாவேர் மாபியா கும்பல் (உறுப்புகள் திருடும் மருத்துவ கும்பல்) சாயிஷாவின் உடலில் ஊசி ஒன்றைச் செலுத்தில் அவரைக் கோமா நிலையில் வைத்திருக்கிறது. இதில் சாயிஷாவின் உடலிருந்து செல்லும் அவரது எனர்ஜி, ஒரு உயிர்போல செயல்பட்டு, அந்த மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துவரும் சிறுவன் ஒருவனின் பெரிய கரடி பொம்மைக்குள் நுழைந்து கொள்ள, அந்த பொம்மைக்கு உயிர்வந்துவிடுகிறது (இதை அவுட் ஆஃப் பாடி எக்ஸ்பீரியன்ஸ் என்று நவீன அறிவியல் சொல்கிறதாம்). இப்போது அந்த பொம்மை வழியாக தனது உடல் கோமா நிலையில் இருப்பதை பார்க்கிறார் சாயிஷா. தனது உடலை மீட்டு, அதைக் காப்பாற்ற ஆர்யாவிடம் பேசும் டெடி பொம்மையாக தஞ்சமடைகிறார். டெடியின் உயிராக இருக்கும் சாயிஷாவின் உடலை ஆர்யா கண்டுபிடித்தாரா? உறுப்பு திருடும் கும்பலை ஆர்யா கண்டுபிடித்து வேட்டையாடினாரா, சாயிஷாவின் உடலுக்குள் அவரது உயிர் மீண்டும் சென்றதா இல்லையா? இந்த கேள்விகளுக்கெல்லாம் விடை சொல்கிறது மீதிக் கதை.

ஆர்யாவை இயக்குநர் அறிமுகப்படுத்தும் விதம் அழகு. ‘என் இனிய தனிமையே’ என்ற பாடலில் அவர் இன்றைய நவீன இளைஞர்களின் குறியீடாக வருவதை ரசிக்க முடிகிறது. அதேபோல நச்சென்ற ஆக்‌ஷன் காட்சிகளில் அபாராமான வேகம் மற்றும் புத்திசாலித்தனத்துடன் சண்டை காட்சிகளிலும் மிளிர்கிறார். நடிப்பைப் பொறுத்தவரை அதே காதல் மன்னன் ஆர்யாவை நீண்ட இடைவெளிக்குப் பிறகு காணலாம்.

சாயிஷா பேரழகின் பெட்டகம்போல் வருகிறார். அவரது நெஞ்சைக் கிழித்து உறுப்பு எடுப்பதுப்போன்ற காட்சியெல்லாம் டூ மச்! இயக்குநர் மகிழ்திரு மேனி ‘வரதராஜன்’ என்ற பெயரில் மனித உறுப்புகளைத் திருடும் டாக்டராக வந்து கதி கலங்க வைக்கிறார். அவரது தோற்றத்துக்கும் குரலுக்கும் பக்காவாக செட் ஆகியிருக்கிறது அந்த அசால்ட் கேரக்டர்!

தோற்றத்தில் கிட்டத்தட்ட ஒரேமாதிரியிருக்கும் சதீஷ், கருணாகரன் கதைக்கு தேவையான அளவுக்கு மட்டும் அவர்களைப் பயன்படுத்தியிருப்பதை பாராட்டலாம். அதேபோல் டெடி பொம்மையாக நடித்திருக்கும் ஈ.பி.கோகுலனையும் பாராட்டாமல் இருக்கமுடியாது. மனிதர் டெடி பொம்மைக்குள் புகுந்துகொண்டு நடித்திருந்தாலும் அவரிடம் திறம்பட வேலை வாங்கத் தவறிவிட்டார் இயக்குநர். கிராஃபிக்ஸும் கோலிவுட் ரகம் என்று பல் இளிக்கிறது.

இமான் இசையில் மதன் கார்க்கியின் வரிகளில் ‘என் இனிய தனிமையே பாடல் மட்டும் ஈர்க்கிறது’. கதையாகக் கேட்பதற்கு சூப்பர் என்று சொல்லத் தோன்றும் இந்தப் படத்தில் தயவு செய்து ‘லாஜிக்’ எதிர்பார்த்துச் சென்றால் அதற்கு 4 தமிழ் மீடியா எந்த விதத்திலும் பொறுப்பல்ல. அதேபோல் இது சர்வ நிச்சயமாக குழந்தைகளுக்கான படமும் அல்ல. எனினும் பெரியவர்கள், ஆர்யா, சாயிஷா நடிப்புக்காக ஒருமுறை பார்க்க ஏதுவான படம்.

 

- 4தமிழ்மீடியா விமர்சனக் குழு

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction