free website hit counter

வடக்கு கடல் அன்னை மீதான அச்சுறுத்தலை தடுத்தல்! (புருஜோத்தமன் தங்கமயில்)

பதிவுகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

வடக்கு கடற்பரப்பில் இந்திய மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிப்பது தொடர்பிலான நடவடிக்கைககளில் கடற்றொழில் அமைச்சு ஈடுபட்டிருக்கின்றது. இந்திய மீனவர்களின் 50 குதிரை வலுவுக்கும் குறைவான இயந்திரப் படகுகளை வாரத்தில் இரண்டு நாட்களுக்கு வடக்கு கடலில் மீன்பிடிக்க அனுமதிப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டு, அதனை செயற்படுத்தும் வேலைகளில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஈடுபட்டு வருகின்றார்.

இதன் ஒருகட்டமாக கடந்த நாட்களில், பாரதிய ஜனதாக் கட்சி, திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் மீன்பிடித்துறை பிரதிநிதிகள் யாழ்ப்பாணம் வந்து, டக்ளஸ் தேவானந்தாவுடனான சந்திப்புக்களை நடத்தியிருக்கிறார்கள்.

வடக்கு கடற்பரப்பில் இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல்களினால் வடக்கு மீனவர்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். தொழில் இழப்பு, உடமைகள் இழப்பு தொடங்கி உயிரிழப்புக்கள் வரையில் நிகழ்ந்து விட்டமைக்கான சாட்சிகள் உண்டு. யாழ்ப்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு கடற்பகுதிகளில், கடற்கரைக்கு ஒரு சில மீற்றர் வரையில் அண்மையாக வந்து பாரிய இழுவை மடிகளைக் கொண்டு வடக்கின் கடல் வளங்களை இந்திய இழுவைப்படகுகள் வாரி சுருட்டிச் செல்லும் காட்சிகளை நாளாந்தம் காண முடியும். சட்ட நடவடிக்கைகள் என்று பெயருக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக இந்திய இழுவைப்படகுகளுக்கு எதிராக நடவடிக்கைகள், கைதுகள் முன்னெடுக்கப்பட்டாலும், அதனால் பயன் இல்லை. ஏனெனில், கடற்படையோ, இலங்கை அரசோ வடக்கு மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து அக்கறை கொள்வதைக் காட்டிலும் இந்திய இழுவைப் படகுகளின் பெரு முதலாளிகளையும், அவர்களின் அரசியல் தொடர்பாளர்களையும், முகவர்களையும் குளிர்விக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதிலேயே கவனமாக இருக்கின்றது. அதன் தொடர்ச்சியாகவே, வடக்கு கடலில் இந்திய மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிப்பது என்கிற விடயம் முன்னெடுக்கப்படுகின்றது.

வடக்கு கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் அத்துமீறி மீன்பிடிப்பது என்பது காலங்காலமாக நடைபெறுகின்றது. அது, வடக்கு மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாரியளவில் சூறையாடி வருகின்றது. இந்த பிரச்சினைகளை ஒவ்வொரு கட்டமாக எடுத்துச் சென்று தீர்வினைக் காணுவதில் வடக்கு மீனவர்களும், அவர்களின் பிரநிதிகளும் அர்ப்பணிப்போடு செயற்பட்டிருக்கிறார்கள். ஆனால், இலங்கை அரசோ, சொந்த மக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதைக் காட்டிலும் இந்திய பெரு முதலாளிகளின் தேவைகளை பூர்த்தி செய்தில் கவனமாக இருக்கின்றது. இலங்கையில் ஆயுதப் போராட்டம் நிகழ்ந்து கொண்டிருந்த காலத்தில், குறிப்பாக வடக்கு கடலில் புலிகள் ஆதிக்கம் கொண்டிருந்த காலப்பகுதியில் இந்திய இழுவைப்படகுகள் அத்துமீறல்களை மேற்கொண்ட காட்சிகளை காண முடியாது. ஆனால், ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்ததும், வடக்கு கடலின் ஆதிக்கம் புலிகளிடம் இருந்து இலங்கைக் கடற்படையிடம் சென்றதும் எந்தவித தயக்கமும் இன்றி இந்திய இழுவைப் படகுகள் ஆயிரக்கணக்கில் வடக்கு கடற்பரப்பை ஆக்கிரமித்தன. இந்த ஆக்கிரமிப்புக்கு எதிரான போர்க்கொடி எழுப்பிய வடக்கு மீனவர்களை இந்திய இழுவைப்படகுகள் வன்முறை வழியில் தாக்கி நோகடித்திருக்கின்றன. இந்த கடல் ஆக்கிரமிப்புக்கு எதிராக வடக்கு மீனவர்கள் ஒன்றிணைந்தார்கள். அதன்பொருட்டு தமது கடற்பரப்பில் பாரிய இழுவை மடிகளைக் கொண்டு தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தடுக்கும் சட்டமொன்றைக் கொண்டு வருவதற்காக ஒருங்கிணைந்தார்கள். அதன் முதற்கட்டமாக, வடக்கு மீனவர்கள், பாரிய இழுவை மடிகளைக் கொண்டு தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது என்ற நடைமுறையை மீனவ சங்கங்கள், சமாசங்கள் ஊடாக நடைமுறைக்கு கொண்டு வந்தார்கள். அதன்மூலம், வடக்கு கடல் வளம் பாதுகாக்கப்படுவது உறுதி செய்யப்பட்டது.

வடக்கு மீனவர்களுக்கு பாரிய இழுவை மடிகளைக் கொண்டு தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடத் தெரியாது, அதனால்தான் அந்த தொழில் முறைக்கு எதிராக செயற்படுகிறார்கள் என்ற விமர்சனம் இந்திய இழுவைப் படகுகளை ஆதரிக்கும் தரப்புக்களினால் முன்வைக்கப்படுகின்றது. வடக்கு மீனவர்களினால் இழுவை முடிகளைக் கொண்ட தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட முடியும், வல்வெட்டித்துறையிலும் குருநகரிலும் இன்னும் சில பகுதிகளிலும் அந்தத் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்ட பாரிய படகுகள் இருந்தன. ஆனால், அதனை தொடர்ந்து முன்னெடுப்பதால், வடக்கு கடல் வளம் அழிக்கப்படும் அபாயத்தை உணர்ந்துதான், அந்தத் தொழில் முறையை தடுக்கும் நடவடிக்கைகளில் வடக்கு மீனவர்கள் ஈடுபட்டார்கள். ஏனெனில், வடக்கு கடற்பரப்பு என்பது ஆழம் குறைந்த கடற்பரப்பு. அங்கு சூரிய ஒளி இலகுவாக கடல் அடிப்பரப்பை எட்டும். அதனால், மீன்களுக்கான உணவான பிளாந்தன்களின் உற்பத்தி அதிகம். அத்தோடு, வடக்கு கடற்பரப்பில் மீன்களின் இனப்பெருக்கத்திற்கான இயற்கை அமைவிடம் என்பது சிறப்பான நிலையில் காணப்படுகின்றது. இந்த இரண்டு விடயங்களையும் பாதுகாப்பது தொடர்பில் வடக்கு மீனவர்கள் கவனமாக இருக்கிறார்கள். அதனால்தான், பாரிய (கடல் நிலப்பரப்பை தோண்டி அழிக்கும்) இழுவை மடி தொழில் முறையை வடக்கு மீனவர்கள் நிராகரிக்கிறார்கள். ஏனெனில், தங்களின் வாழ்வாதாரமாக விளங்கும் கடல் அன்னையின் கருப்பையை அழிக்கும் வேலைகளில் எந்த மகனும் ஈடுபடமாட்டான். ஆனால், இந்திய இழுவைப் படகுகளுக்கு எந்தவிதமான அக்கறையும் இல்லை. பாரிய பாரமான மடி வலைகளைக் கொண்டு கடலின் அடி மட்டம் வரையில் வாரி அள்ளிச் செல்கின்றன. இதனால், வடக்கு கடலின் இயற்கைக் கட்டமைப்புக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்படுகின்றது. ஏற்கனவே, இந்திய கடற்பரப்பை இவ்வாறான தொழில் நடவடிக்கைககளினால் அழித்துவிட்டர்கள், இப்போது வடக்கு கடலையும் அப்படியான ஆக்கிரமிப்புக்காக கோருகிறார்கள். அதற்கு ஒத்திசையும் வேலைகளில் இலங்கை அரசு ஈடுபடுகின்றது.

இந்திய மீனவர்களுக்கு இலங்கைக் கடற்பபரப்பில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கான தடை நடைமுறையிலுள்ள நிலையிலேயே, இவ்வாறான இழுவைப் படகுகளில் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து சென்றிருக்கின்றது. அவ்வாறான நிலையில், இலங்கைக் கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் படகுகளை அனுமதித்தால், அந்த நிலைமையை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஏனெனில், குறைந்த வலுக் கொண்ட படகுகளை அனுமதிப்பது என்ற போர்வையில், உண்மையில் இந்திய இழுவைப் படகுகளே வடக்குக் கடலை ஆக்கிரமிக்கப்போகின்றன. மாறாக, தமிழகத்தின் சாதாரண மீனவர்கள் அதன் பயனை அனுபவிக்கப் போவதில்லை.

தமது பிரச்சினைகளை உணர்ந்த ஒருவர் கடற்றொழில் அமைச்சர் ஆனால் அது நல்லது என்பது வடக்கு மீனவர்களின் எதிர்பார்ப்பு. ஆனால், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழில் அமைச்சர் ஆனது முதல், வடக்கு கடற்பரப்பில் வெளிநாட்டு நிறுவனங்களினதும், இந்திய இழுவைப்படகுகளினதும் அத்துமீறல் என்பது அதிகரித்துவிட்டது. ஏற்கனவே கடல் அட்டை பிடிப்புக்காக சீனா நிறுவனங்களை டக்ளஸ் அழைத்து வந்திருக்கின்றார் என்கிற குற்றச்சாட்டு உண்டு. அந்தத் தொழில் நடவடிக்கைகளுக்கு எதிராக வடக்கு மீனவர்கள் குரல் எழுப்பி வரும் நிலையில், அதனைச் சமாளிப்பதற்கான ஒருசில மீன சங்கப் பிரதிநிதிகளை தனது கைக்குள் போட்டுக்கொண்டு, வெளிநாட்டு நிறுவனங்களின் தொழில் நடவடிக்கைகளை டக்ளஸ் தேவானந்தா, காப்பற்றி வருகின்றார். இப்போது, அவர், இந்திய பெரு முதலாளிகளின் எதிர்பார்ப்புக்களைப் பூர்த்தி செய்யும் மனிதராக, செயற்படுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார்.

வடக்கு கடல் அன்னையைக் காப்பாற்ற வேண்டியது வடக்கு மீனவர்களின் கடமை மாத்திரமல்ல, அது ஒட்டுமொத்த வடக்கு மக்களினதும் கடமை. அதனை, பிராந்திய வல்லரசின் எதிர்பார்ப்புக்களுக்காக தட்டிக்கழித்துவிட்டு செயற்படுவார்களாக இருந்தால், வடக்கின் கடல் அன்னை முழுவதுமாக அந்தியர்களினால் ஆக்கிரமிக்கப்பட்டு அலங்கோலமாக்கப்படுவாள். அப்போது, அழுது புலம்புவதால் எந்தப் பயனும் இல்லை. அதனால், நில ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டம் போல, கடல் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் வடக்கு மக்கள் எழுந்து வர வேண்டும்.

*தமிழ்மிரர் பத்திரிகையில் நேற்று வியாழக்கிழமை வெளியான எனது பத்தி இது. இந்தப் பத்தி வெளியானதும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஊடாக இணைப்பாளர் என்னைத் தொடர்பு கொண்டு சில விடயங்களை முன்வைத்தார். அதில், முதலாவது விடயம் “50 குதிரை வலுக்கொண்ட இந்திய மீன்பிடிப் படகுகளை வடக்கு கடலில் அனுமதிப்பது தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா எந்த முடிவினையும் எடுக்கவில்லை. அந்த குற்றச்சாட்டு பொய்யானது” என்பது. இரண்டாவது விடயம், “சீன நிறுவனங்களை கடலட்டை வளர்ப்பிற்காக டக்ளஸ் தேவானந்தா வடக்கிற்கு அழைத்து வரவில்லை” என்பது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction