free website hit counter

அமைதி..!

செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

அமைதி வேண்டின் பற்றின்றி உள்ளம் படிந்து, இறையருளைப் போற்றித் துதித்தல் என்பது எத்துனை சிறப்பானது எனச் சொல்லும் ஒரு பாடல் இது.

பற்றின்றி உள்ளம் படிந்து பரனருளைப்
பற்றி யிருந்து பழகிவரின் - முற்றியபேர்
ஆனந்தம் அங்கே அமைந்துவரும் எவ்வழியும்
மோனந் ததும்பும் முதிர்ந்து. 978

- தனிமை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
இதேபொருளை விளக்கும் ஒரு ஆன்மீக சிந்தனையைத் தரும் உவமைக்கதை ஒன்றினை இங்கே காணலாம்.

ஒரு நாட்டிலே ஒரு துறவி ஒருவர் இருந்தார். அந்த நாட்டு அரசன் அவரிடம் அடிக்கடி சென்று அவரை சந்தித்து சில ஆலோசனைகளை பெறுவான். ஒரு நாள் " சுவாமி நான் உங்களை எனது அரண்மனைக்கு அழைத்துப்போக வந்திருக்கிறேன்" எனக் கூறினான். துறவி வரமாட்டார் நான் எளிமையானவன் எனக்கு அரண்மனை வாசம் வேண்டாம் என்று சொல்லிவிடுவார் என்று நினைத்துத்தான் அவரை அரசன் அழைத்தான். ஆனால் அவரும் சரி போகலாம் போய் ரதத்தை கொண்டு வா! அரண்மனைக்குச் செல்வதற்கு எனக்கு ஆடம்பரமான ஆடைகளை கொண்டு வா எனக் கூறினார்.

மன்னனுக்கு தூக்கி வாரிப்போட்டது. உண்மையிலேயே இவர் துறவிதானா? என்ற சந்தேகம் ஏற்பட்டது. ஆனாலும் அவர் கேட்டபடியே ரதத்தைக் கொண்டுவந்தான். துறவி ரதத்தில் ஏறி உட்கார்ந்தார். அருகிலே அரசன். துறவி மிகவும் உற்சாகமாக இருந்தார். இவனோ சோர்ந்து போயிருந்தான்.

துறவி மரத்தடியிலே வாழ்ந்து பழக்கப்பட்டவர் எளிமையாக அரண்மனையில் ஓரிடத்திலேயே உட்கார்ந்து கொள்வார் என்று நினைத்தான். ஆனால் அரண்மனைக்கு வந்த உடனே துறவி அதைக் கொண்டு இதைக் கொண்டு வா என்ற அரசனுக்கு கட்டளைகளைப் பிறப்பித்துக் கொண்டிருந்தார். இரவில் சுகமாக உறங்கினார். பகலில் அரண்மனைத் தோட்டத்தில் உலாவினார். நீச்சல் குளத்தில் நீராடினார் இப்படியே பொழுதைப் போக்கினார். ஆனால் அரசனால் அவ்வாறு மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை.

துறவி இப்படி இருப்பதை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை ஒருநாள் அவரிடம் போய் நான் உங்களிடம் சிறிது பேச வேண்டும் என்றான். துறவியோ மரத்தடியில் இருக்கும் போது அடிக்கடி என்னை வந்து சந்தித்து ஏதாவது விளக்கம் கேட்பாய் ஆனால் இங்கே வந்த பிறகு என்னை சந்திப்பது கூட அபூர்வம் என்ன கேட்க வேண்டும் கேள் என்று சொன்னார்.

வேறு ஒன்றுமில்லை சுவாமி உங்களுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்? இரண்டு பேரும் அரண்மனையில் தான் இருக்கிறோம். நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்னால் அப்படி இருக்க முடியவில்லை. இவ்வளவுக்கும் நீங்கள் முதல் இருந்தது போல் இப்போது இல்லை. தினமும் தங்கத்தேர் , தரமான ஆடைகளை அணிகிறீர்கள், சுவையான சாப்பாடு இப்படி இருக்கையில் உங்களுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்? என்று மன்னன் கேட்டான்.

இதற்கு பதில் சொல்கிறேன் என்கூட புறப்பட்டு வா என்று நகரத்திற்கு வெளியே அழைத்துக்கொண்டு போனார்.
அங்கே போய் நான் திரும்பி வரப்போவதில்லை நீ என்னோடு வருகிறாயா? திரும்பி போகிறாயா? என்று கேட்டார்.
அதற்கு மன்னன் அதெப்படி உங்களுடன் வர முடியும். என்னுடைய நாட்டினுடைய சொத்துக்கள் மனைவி மக்கள் எல்லாத்தையும் விட்டுவிட்டு என்னால் வர முடியாது என்று சொன்னான்.

இப்போது வித்தியாசத்தை தெரிந்து கொண்டாயா? என்றார் துறவி.

நான் அரண்மனையிலிருந்து எல்லாவித பொருள்களும் உடையவனாக இருந்தேன். ஆனால் ஒன்றையும் சொந்தம் கொண்டாடுகிறவனாக இருக்கவில்லை. நீ எல்லாத்தையும் சொந்தம் கொண்டாடுகிறாய். இதுதான் நமக்குள் உள்ள வித்தியாசம் என்று கூறிவிட்டு அரண்மனை ஆடைகளை களைந்து உன்னுடைய ஆடைகளை நீயே வைத்துக்கொள் என்று கூறிவிட்டு திரும்பிப் பார்க்காமல் அவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அரசனுக்கு அப்போதுதான் அவனுடைய தன் அறியாமை புரிந்தது. இந்த உலகத்தில் எத்தனையோ பொருள்கள் இருக்கின்றன அதை எல்லாம் முறையாக பயன்படுத்தினால் மகிழ்ச்சியாக இருக்கலாம். அதை விட்டுவிட்டு அதை நாம் சொந்தம் கொண்டாட எப்போது ஆரம்பிக்கிறோமோ அப்போதுதான் கவலைகள் நம்மை சுற்றி வளைத்து கொள்கின்றன.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction