free website hit counter

யாழ் நூலகம் - எரித்தார்கள் !

பார்வைகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

…நேற்று என் கனவில் 

புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது…!

பேராசிரியர்- கவிஞர் எம்.ஏ.நுஃமான் எழுதிய ‘புத்தரின் படுகொலை’ கவிதை இப்படித்தான் ஆரம்பிக்கும். யாழ். பொது நூலகத்தின் மீது இனவாதம் தீமூட்டி கருக்கிய கோபத்தை அவரின் கவிதை எந்தவித விட்டுக் கொடுப்புமின்றி பதிந்திருக்கும்.

இன்றைக்கு இந்த பகுதி எழுதப்பட்டுக் கொண்டிருக்கிற நேரத்தைப் போன்றதொரு காலை நாளில் 1981 (யூன் 01) யாழ்ப்பாணம் முழுவதும் ஸ்தம்பித்துப் போய்க்கிடந்தது. அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் அமைச்சர்கள் காமினி திஸ்ஸநாயக்க உள்ளிட்டவர்களின் ஆணையுடன் யாழ்ப்பாணத்தின் விலை மதிப்பற்ற சொத்து எரித்துச் சாம்பலாக்கப்பட்டது. மே 31, 1981 எல்லோருக்கும் நினைவுகளின் படிகளில் அடிக்கோடிடும் என்று யாரும் நினைத்திருக்கவில்லை. அதை அந்த பின்னிரவு சிலரின் தீயா தீய்ந்த எண்ணங்களுக்கூடாக செய்தது. தமிழர்களின் அடையாளமாக- ஆசியாவின் அசைக்க முடியாத நூல்களின் கூடமாக- கல்வியின் திமிராக நிமிர்ந்து நின்ற புத்தகங்களின் ஆலயம் எரியூட்டப்பட்டது. அது, மறுநாள் வரை எரிந்து புகைந்து கொண்டிருந்தது.

இலங்கையில் 1940களில் ஆரம்பித்த ‘அரசியல் பிணக்குகள்’ நாற்பது வருடங்களின் பின்னர் இனப்பிரச்சினைகள்- ஆயுத மோதல்களாக வெடிக்க காரணமான காரணங்களில் முக்கிய காரணம் யாழ். பொது நூலகத்தின் மீதான இலங்கை அரசின் வன்முறை. 1981 மே 31, யூன் 01 என்று இரண்டு நாட்கள் யாழ். நூலகம் எரிந்து அடங்கியது. அதற்குள்ளிருந்த 97000க்கும் அதிகமான புத்தகங்கள்- வரலாற்று சிறப்பு மிக்க ஓலைச்சுவடிகள் என்பன கொடுந்தீயில் எரிந்து சாம்பலாகின.

யாழ் நூலகம் எரிந்து இன்று 42 வருடங்கள் கடந்து விட்டது. அதற்குள் இன விடுதலை வேண்டிய ஆரம்பித்த போராட்டம் வீறுகொண்டு எழுந்து கோலொச்சி- ஒட்டுமொத்த வல்லரசுகளின் ஒத்துழைப்புடன் இலங்கை அரசினால் கருவறுத்தும் முடிக்கப்பட்டுவிட்டது. ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மக்களின் படுகொலை, ஒரு மில்லியன் மக்களுக்கும் அதிகமானவர்களின் புலம்பெயர் வாழ்க்கை, இலட்சக்கணக்கானவர்களின் இடம்பெயர்- வாழ்விடங்களை தொலைந்த அலைக்கழிவு என்று செல்கிறது அவலங்களின் பின்னணி.

யாழ். பொது நூலக எரிப்பு என்பது ஒரு இனத்தின் மீதான வன்முறையின் அழிக்க முடியாத அடையாளம். தமிழர்களின் புலமைச் சொத்தின் மீதான அதிகாரவர்க்கத்தின் அசிங்கமான ஆத்திரம் இப்படி நீண்டு செல்கிறது. மிகுதியை பேராசிரியர்- கவிஞர் எம்.ஏ.நுஃமானின் கவிதைகளிலேயே கண்டுவிடலாம்.

புத்தரின் படுகொலை!

நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது.

இரவில் இருளில்
அமைச்சர்கள் வந்தனர்.
'எங்கள் பட்டியலில் இவர்பெயர் இல்லை
பின் ஏன் கொன்றீர்?'
என்று சினந்தனர்.

'இல்லை ஐயா,
தவறுகள் எதுவும் நிகழவே இல்லை
இவரைச் சுடாமல்
ஓர் ஈயினைக் கூடச்
சுடமுடியாது போயிற்று எம்மால்
ஆகையினால்......
என்றனர் அவர்கள்.

'சரி சரி
உடனே மறையுங்கள் பிணத்தை'
என்று கூறி அமைச்சர்கள் மறைந்தனர்.

சிவில் உடையாளர்
பிணத்தை உள்ளே இழுத்துச் சென்றனர்.
தொண்ணூறாயிரம் புத்தகங்களினால்
புத்தரின் மேனியை மூடி மறைத்தனர்
சிகாலோவாத சூத்திரத்தினைக்
கொழுத்தி எரித்தனர்.
புத்தரின் சடலம் அஸ்தியானது
தம்ம பதமும்தான் சாம்பல் ஆனது.

- எம்.ஏ.நுஃமான்

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula