free website hit counter

இலங்கையின் புதிய மீட்பரா பஷில் ?

பார்வைகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பஷில் ரோஹண ராஜபக்ஷ தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக இன்று புதன்கிழமை காலை சபாநாயகர் முன்னிலையில் பதவியேற்றார். அவர், நிதியமைச்சராகவும் சற்று முன்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்றுள்ளார்.

அரசியலில் ராஜபக்ஷ சகோதர்களில் இளையவரான பஷில் ராஜபக்ஷ, தற்போதையை ஆட்சி அதிகார கட்டமைப்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஈடான ஆதிக்கத்தைச் செலுத்தும் அளவுக்கு தன்னை நிலைப்படுத்திக் கொண்டிருக்கிறார். ராஜபக்ஷக்களின் தற்போதைய அரசியல் முன்னோடியான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவைத் தாண்டிய ஆதிக்கத்தை கட்சிக்குள் அவர் செலுத்திக் கொண்டிருக்கிறார்.

முள்ளிவாய்க்கால் இறுதி மோதல்களுக்குப் பின்னரான மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக பஷில் ராஜபக்ஷ பதவி வகித்திருக்கின்றார். அன்றைய அரசாங்கமும் மஹிந்த, கோட்டா, பஷில் என்று ராஜபக்ஷ சகோதர்களைச் சுற்றியே சுழன்றது. அமைச்சுக்கள் தொடங்கி அனைத்து அதிகாரக் கட்டமைப்பும் அவர்களைச் சுற்றியயே உருவாக்கப்பட்டது. ஆனால், அந்தக் கட்டமைப்பின் ஆட்டம் அதிகரித்த போது, ராஜபக்ஷக்களின் வீழ்ச்சி ஆரம்பித்தது. 2015 ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைவதற்கு பஷில் ராஜபக்ஷ காரணம் என்ற எண்ணம் தென் இலங்கை பூராவும் இருந்தது. ஏனெனில், ராஜபக்ஷக்களில் அதிக ஊழல் பேர்வழியாக பஷில் ராஜபக்ஷ அடையாளப்படுத்தப்பட்டிருந்தார். அதனை, ராஜபக்ஷ சகோதரர்களே கூட தங்களுடைய குடும்ப உரையாடல்களில் ஒப்புவித்தும் இருப்பதாக ஊடகங்கள் அப்போது வெளிப்படுத்தின.

ஆனால், ராஜபக்ஷக்களின் மீள் எழுச்சி என்பதும் மஹிந்த ராஜபக்ஷவின் முகத்தை முன்னிறுத்தி நிகழ்தப்பட்டாலும், அதனை திட்டமிட்டு ஒருங்கிணைத்து நிறைவேற்றியது பஷில் ராஜபக்ஷவே. பொதுஜன பெரமுன என்கிற கட்சியை கட்டமைக்கும் பொறுப்பும், அதனை கிராம மட்டங்களில் இருந்து வளர்த்தெடுக்கும் பொறுப்பும் மஹிந்த ராஜபக்ஷவினால் நம்பிக்கையுடன் பஷில் ராஜக்ஷவிடமே வழங்கப்பட்டது. அவர் அந்தப் பொறுப்பை ஏற்று ஐந்து வருடங்களுக்குள் ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் பெரு வெற்றி பெற்றார்கள்.

பஷில் ராஜபக்ஷ ஆட்சியொன்றை தக்க வைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்வதில் வல்லவர். மூன்றில் இரண்டு பெரும்பான்மை வேண்டுமா, பஷிலை அழைத்தால் போதும், தேவையான பாராளுமன்ற உறுப்பினர்களை அவர் அரசாங்கத்துக்கு ஆதரவாக அழைத்துவருவார். எதிர்க்கட்சிகளை உடைக்க வேண்டுமா, அதற்கும் பஷிலையே ராஜபக்ஷக்கள் அழைப்பார்கள். இன்றைக்கு பொதுஜன பெரமுனவின் பங்காளிக் கட்சிகளை பலமிழக்கச் செய்து, பங்காளிக் கட்சிகளின் தலையீடுகள் அற்ற ஒற்றைக் கட்சியாக ஆட்சி செலுத்த வேண்டும் என்கிற எண்ணப்பாட்டினை பஷில் ராஜபக்ஷ நடைமுறைப்படுத்தி வருகிறார். அதன் போக்கில்தான், விமல் வீரவங்ச, உதய கம்மன்பில உள்ளிட்ட பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் ஆளுங்கட்சியினாலேயே விமர்சிக்கப்படுகிறார்கள். அவர்களின் அமைச்சுக்களின் அதிகார எல்லைகள் குறைக்கப்படுகின்றன.

தற்போதுள்ள அரசாங்கத்தின் அமைச்சரவையின் காரண கர்த்த பஷில் ராஜபக்ஷவும், முன்னாள் நிதி அமைச்சின் செயலாளருமான பி.பி.ஜயசுந்தரவும் ஆகும். ஆனால், அரசாங்கத்தின் மீதான அதிருப்தி தென் இலங்கையில் அதிகரித்திருக்கின்ற நிலையில், அரசாங்கத்தின் புதிய நம்பிக்கையாக தன்னை முன்னிறுத்திக் கொண்டு பஷில் ராஜபக்ஷ பாராளுமன்றம் வந்திருக்கின்றார். அவர், தன்னுடைய மூத்த சகோதரரான மஹிந்த ராஜபக்ஷவிடம் இருந்து நிதி அமைச்சினைக் கோரி பெறறிருக்கிறார். 

பஷில் ராஜபக்ஷ அமைச்சராக பதவி ஏற்பதன் மூலம் வீழ்ந்து கொண்டிருக்கின்ற இலங்கையின் பொருளாதாரத்தை செங்குத்தாக தூக்கி நிறுத்துவார் என்ற பிம்பங்கள் திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றன. அத்தோடு, அவர்தான் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் என்கிற விடயமும் பெரமுனவில் உள்ள அவரது ஆதரவாளர்களினால் ஆட்களினால் முன்வைக்கப்படுகின்றது.

ராஜபக்ஷக்களின் அரசியல் வரலாற்றிலேயே அவர்கள் தென் இலங்கையில் அதிக அதிருப்தியை சந்தித்திருப்பது தற்போதுதான். அந்த அதிருப்தியை ‘பஷில்’ என்கிற பிம்பத்தை முன்னிறுத்தி கடந்து விடலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால், அது அவ்வளவு இலகுவான ஒன்றல்ல. ஏனெனில், நாட்டின் பொருளாதார வீழ்ச்சி என்பது தனி ஒருவரால் தூக்கி நிறுத்தக்கூடிய அளவுக்கானது அல்ல. அது, அதனையும் தாண்டிய பாரிய வீழ்ச்சியை சந்தித்து நிற்கின்றது.

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula