free website hit counter

உலக அரசியலில் ஒரு மைய நிகழ்வு !

பார்வைகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இந்தப் பத்தி எழுதிக்கொண்டிருக்கும் நேரத்தில், சுவிற்சர்லாந்தின் சர்வதேச நகரான ஜெனிவாவின், முக்கிய பாலத்தில், அழகிய ஜெனீவா ஏரியின் கரைகளில், அமெரிக்க மற்றும் ரஷ்ய கொடிகள் பறந்து கொண்டிருக்க, உலகின் இருபெரும் அரசியற் தலைவர்களது சந்திப்பு நடைபெறுகிறது.

36 ஆண்டுகளுக்கு முன், அப்போதைய அமெரிக்கத் தலைவர், ரீகனுக்கும் இரஷ்யத் தலைவர் கோர்பச்சேவிற்கும் இடையிலான சந்திப்புக்குப் பின், ஜெனீவா ஏரியின் கரையில் நடைபெறும் வரலாற்று முக்கியத்துவம் மிக்கச் சந்திப்பு இதுவாகும்.

அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் ரஷ்யத் தலைவர் விளாடிமிர் புடினுக்கும் இடையிலான இன்றைய சந்திப்பு, இன்று பிற்பகல் ஜெனிவா வில்லா லா கிரெஞ்சில், நிகழ்கிறது. அமெரிக்கா-ரஷ்யா உச்சி மாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளும் கடந்த சிலவாரங்களுக்கு முன்னதாகவே ஆரம்பமாகிவிவட்டன. ஜெனீவாவின் சில பகுதிகள் போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளன. மேலும் நகரம் இன்று கடுமையான பொலிஸ் மற்றும் இராணுவ பாதுகாப்பில் உள்ளது

ஜெனீவாவில் பாதுகாப்பு நடவடிக்கைகள் யாவும் பலப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், நேற்று பிற்பகல் கோயிண்ட்ரினில் அமெரிக்க ஜனாதிபதியின் விமானம் தரையிறங்கியது. அதே இடத்தில் இன்று கிரெம்ளின் தலைவர் வருகை தந்துள்ளார்.

கடந்த மார்ச் மாதத்தில் தற்போதைய அமெரிக்கத் தலைவர் பைடென் ஒரு நேர்காணலில், ரஷ்யத் தலைவர் புடினை ஒரு கொலைகாரன் எனக் கடுமையாக விமர்சித்திருந்தார். அதனைத் தொடர்ந்து அமெரிக்காவிலிருந்து தனது தூதுவர்களை கிரெம்ளின் திரும்ப அழைத்தது. புட்டினின் செய்தித் தொடர்பாளர் எந்தவொரு அமெரிக்க ஜனாதிபதியும் இதுபோன்ற கடுமையான கருத்துக்களை முன்வைக்கவில்லை எனத் தெரிவித்திருந்தார்.

இதேவேளை அமெரிக்க உள்கட்டமைப்பு, அதிகாரிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மீது ரஷ்ய ஹேக்கர் தாக்குதல்கள் பல நடைபெற்றதாக சமீபத்தில் தலைப்புச் செய்திகள் தெரிவித்திருந்தன. அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகளுக்கு, அமெரிக்க அரசாங்க பிரதிநிதிகள் ரஷயாவிற்குள் நுழைவதைத் தடை செய்வதன் மூலமும், பத்து அமெரிக்க இராஜதந்திரிகளை வெளியேற்ற ஏற்பாடு செய்வதன் மூலமும் புடின் பதிலளித்தார். கடந்த மே மாதம், மாஸ்கோவும் அமெரிக்காவை ரஷ்யாவிற்கு விரோதமான நாடு என்று அறிவித்திருந்தது.

இது ஒன்றும் புதிதான விடயமல்ல. உலகில் இந்த இரு பெரும் நாடுகளும், தங்களுக்கான முகாம்கள் உருவாக்குதிலும், உள் மறைந்திருந்து தாக்குவதிலும், காலம் காலமாகச் செயற்பட்டு வருபவைதான். வழமை போலவே தற்போதும் இந்த இரு நாடுகளுக்கும் இடையிலான போர் ஆதரவுகளில், சிரியா அல்லது கிழக்கு உக்ரைனில் போர் போன்ற புவிசார் நிலப்பரப்புக்களில் அரசியல் மற்றும் ஆயத மோதல்கள் ஏற்படுகின்றன. அமெரிக்காவும் ரஷ்யாவும் சர்வதேச ஒப்பந்தங்களை மீறுவதாக ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டுகின்றன.

இவ்வளவும் நிகழ்ந்திருக்கையில், 1985 ஆம் ஆண்டு, ஜெனீவாவில், ரீகனுக்கும் கோர்பச்சேவிற்கும் இடையில் நடந்ததைப் போன்ற இன்றைய சந்திப்பினால் இரு வல்லரசுகளையும் நெருக்கமாகக் கொண்டுவர முடியுமா? எனும் கேள்வி இயல்பாகிறது.

கிரெம்ளினுக்கு நெருக்கமான ரஷ்ய செய்தித்தாள் இந்த உச்சிமாநாட்டை "உலக அரசியலில் ஒரு மைய நிகழ்வு" என்று வரையறுத்துள்ளது. சுவிஸ் வெளியுறவு அமைச்சர் இக்னாசியோ காசிஸ் தலைமையிலான மத்திய வெளியுறவுத் துறை, "ஆக்கபூர்வமான உரையாடலை எதிர்பார்க்கிறது" எனத் தெரிவித்துள்ளது.

எல்லோரும் ஒரு அதிசயத்திற்காக காத்திருக்கக் கூடிய நிலையில், கோவிட் - 19 தாக்கங்களால் ஏற்பட்டிருக்கும், பொருளாதார வலுவிழப்பின் மத்தியில், மேலும் போர் பதற்றங்களை அதிகரிக்க முடியாது என்பதை புடினும் பைடனும் புரிந்திருப்பதாகவே அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

புடினின் வெளியுறவுக் கொள்கை செய்தித் தொடர்பாளர் நிலைமை சிக்கலானது. எனவே ஏதாவது செய்ய வேண்டும். இந்த உச்சிமாநாடு இதன் முதற் படியாக இருக்கும் என நம்பிக்கை வெளிப்படுத்தியிருக்கின்றார். ரஷ்யாவுடனான கடினமான உறவை மேம்படுத்த அமெரிக்கா தயாராக இருப்பதாக சுவிஸ் முன்னாள் இராஜதந்திரி மேக்ஸ் ஸ்வைசர் குறிப்பிடுகிறார்.

பைடனுக்கும் புடினுக்கும் இடையிலான இந்த சந்திப்பு வெற்றிகரமாக நடந்தால், உக்ரைன் மீது ரஷ்யாவின் அழுத்தம் குறையலாம். ரஷ்ய மற்றும் அமெரிக்க தூதர்களின் பரஸ்பர வருகையை எதிர்பார்க்கலாம் என்பன மேலோட்டமாகத் தெரியக் கூடிய மாற்றங்களாச் சொல்லப்படுகின்றன. ஆயினும் இங்கே காணப்படும் உடன்பாடுகள் ஒருவகையில், தனிப்பெரும் ஏகாதிபத்தியமாக மாறி வரும் சீனாவை எதிர் கொள்வதற்கான ஒரு கைகுலுக்கலாகவும் இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.

எதுவாயினும், இரு பெருந்தலைவர்களது சந்திப்பு, இந்த உலகில் கந்தகப் புகையின் பரவலைக் குறைக்குமாயின், அதுவே பல இலட்சம் மக்களுக்கான உயிர்சுவாசத்தை உறுதி செய்வதாக அமையும். அவ்வாறே அமையட்டும்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula