இலங்கை இனப்பிரச்சனை என்பது 1983ல் உருவானதல்ல. 1948ல் சுதந்திரம் பெற்றதிலிருந்தே இனப்பிரச்சனைக்கான இனத்துவேச விதைகளை சிங்கள அரசியற் தலைவர்களும், பௌத்த மதத் தலைவர்களும், சிங்கள மக்கள் மத்தியில் விதைத்து வந்தார்கள் என்பதே உண்மை.
அந்த விதைப்பினை காலத்துக்காலம் உரமூட்டி வந்தார்கள் என்பதற்கான சாட்சியங்கள் 58 முதல் அவ்வப்போது நடைபெற்ற இனக்கலவரங்கள். இந்த இனக்கலவரங்கள் நடைபெற்ற எல்லாச் சந்தர்பங்களிலும், பாதிக்கப்பட்ட மக்களாக இருந்தவர்கள் தமிழ்மக்கள்.
கல்வியும், தொழில் முனைவும், என இருந்த தமிழ்மக்கள் மீதான தொடர்ச்சியான இன முரண்பாட்டுத் தாக்குதல்கள், அவர்களின் இளைய தலைமுறையினரை ஆயுதப் போராட்டத்தின் வழியில் செல்லத் தூண்டியது. அப்போதும் சிறுபாண்மைச் சமூகத்தின் நியாயமான சுதந்திர வேட்கையினை இனமுரணாகப் பகைமுடித்து வைத்தவர்கள் சிங்கள அரசியற் தலைவர்களும், பௌத்த மதத் தலைவர்களுமே. இந்த இனவாதப் பகைமுரனை வளர்த்ததில் பலியாகிப் போனவர்கள், தமிழ்மக்கள் மட்டுமல்ல, சராசரியான வாழ்நிலை கொண்ட சிங்கள மக்கள் சமுதாயமும்தான். ஆக இனத்துவேசம் பேசிய, தங்கள் சுயலாப, சுகபோக, அரசியல் செய்தவர்கள் யாபேரும், தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல, சிங்கள மக்களுக்கும் துரோகம் இளைத்தவர்களே.
ஒரு ஏழைத் தமிழ்த்தாயின் கண்ணீருக்கும், சிங்களத்தாயின் கண்ணீருக்குமான துயர்நிலையில் பெரிதும் வேறுபாடிருக்க முடியாது. இந்தத் துயரநிலை மாறி, பரஸ்பர சுமுகமான உறவுநிலை சகல மக்களிடத்திலும் ஏற்பட வேண்டுமாயின், இலங்கை இனப்பிரச்சினையில் மூலவேர்கள் முற்றாக அகற்றப்பட வேண்டும். அதேவேளை இனப்பகை முரனற்ற வாழ்வின் பெரு மகிழ்வும், அதன் பயன்பாடும் எத்துனை சிறப்பானது என்பதனை எல்லா மக்களும் புரிந்திடும் வகையிலான நல்லாட்சியினை, இந்த ஆட்சியின் காலத்துக்குள் அரசு வழங்கிட வேண்டும். அவ்வாறு நடைபெறுமானால் இலங்கைத்தீவின் நாளைய சமூகம் நம்பிக்கையுடன் புத்தூக்கமுடன் கிளர்தெழும். நாடு நலம் பெறும்.
அவ்வாறான ஒரு சூழலில் மக்கள் 83ன் கறுப்பு ஜுலை நாட்கள் நினைவு கூரலை ஒரு கால மன்னிப்பாகக் கருதிக் கடப்பார்கள். இல்லையேல் வலி நிறைந்த நாட்களின் வடுவாக, கறுப்பு ஜுலையின் கறைபடிந்த நாட்களாகவே நினைவு கொள்வார்கள் தமிழ்மக்கள். அது தொடருமாயின், தமிழ்மக்களுக்கு அது தீராத துயரம். சிங்கள மக்களுக்கு அது நீங்காத பழி !.
மாற்றலாம் எனும் நம்பிக்கையுள்ள போதும், நடந்தவைகள் யாவும் மாறலாம் எனும் எதிர்பார்ப்பாகவே இப்போதும் இருக்கிறது.