free website hit counter

சுவிற்சர்லாந்து திரைப்பட விழாவில் ஈழத்து அகதி முகம் !

பார்வைகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

 அகதியாய் இருந்து பார் ஒடுங்குதலின் வலி புரியும் எனச் சொல்லும் அளவிற்கு, புலம் பெயர் தேசங்களில் அகதிகளாக தமது வாழ்நிலையைத் தொடங்கியதமிழர்களின் அனுபவங்கள் உண்டு.

இது தமிழர்களுக்கான தனி அனுபவம் எனச் சொல்ல முடியாவிடினும், உணர்வு வயப்பட்ட மாந்தர்களாக வாழ்ந்து சொந்த நிலம் பிரிந்த மனிதர்களின் பெருந்துயரம் எனச் சொல்லலாம்.

காலவோட்டத்தில் அகதிமுகம் கலைந்து, புலம் பெயர் தேசங்களின் வாழ்நிலை மாந்தர்களாக மாறிவிட்டாலும், அவ்வப்போது தோன்றும் அந்த வலிக்கு மருந்தாக அமைந்திடும், சமகாலத்தின் சில மாற்றங்கள். அவற்றை நம்மவர்களின் சாதனைகள், வெற்றிகள் எனவும் கொள்ளலாம், கொண்டாடி மகிழலாம்.

அவ்வாறான அகதி முகம் கலைந்து, இந்த மண்ணில் ஒரு திரைக்கலைஞனாக தன் முகம் காட்ட முனையும் கீர்த்திகன் சிவகுமாரின் குறுந்திரைப்படம் "தூஸ்ரா" (Doosra) , சுவிற்சர்லாந்தின் நிகழும் திரைப்பட விழாக்களில் முக்கியமான 'சொலர்த்தூன் திரைப்படவிழா' (solothurn film festival) வில் பங்கு கொள்கிறது. இன்று ஜனவரி 21 மாலை 6.15க்கு Capitol சினிமா திரை அரங்கிலும், ஜனவரி இரவு 9.00 மணிக்கு Canva திரையரங்கிலும், என இரு தடவைகள் பொதுமக்களுக்கான காட்சிப்படுத்தல்களாகத் திரையிடப்படுகின்றன.

தமிழ் மற்றும் பிரெஞ் என இரு மொழிப்படமாக அமைந்த " தூஸ்ரா" படத்தின் கதைக்கரு, ஒரு அகதி இளைஞனின் ஏக்கத்தை மையப்படுத்தியதே. மலையாளம் மற்றும் வங்கத் திரைப்படங்களைத் திரைப்படவிழாக்களில் காண்கையில், அதன் இயல்பான கதையமைப்பும், கதை மாந்தர்களும் நமக்கு மிக நெருக்கமாக இருக்கும். இந்தப் படத்தினைப் பார்க்கையில் எம்மை நாமே கண்ணாடியில் பாரத்துக் கொள்ளும் அந்த அனுபவம் கிடைக்கிறது. அதை மெல்லிய எள்ளல் தன்மையுடனும், இயல்பான காட்சிகளுடனும், சிறந்த கலைஞர்களுடனும், இணைந்து இயக்கியிருக்கும், கீர்த்திகன் சிவகுமார் சுவிற்சர்லாந்து வோ மாநிலத்தில் உள்ள நுண்கலைக்கல்லூரியில், திரைத்துறையில் படித்து, இளங்கலைமானி பட்டம் பெற்றிருப்பவர். 4தமிழ்மீடியாவில் சார்பில் திரைப்படவிழாக்களில் செய்தியாளராகவும், பல்வேறு உலகத் திரைப்படங்கள் குறித்த சினிமா விமர்சனக் கட்டுரைகளையும் 'ஸாரா' எனும் பெயரில் எழுதி வருபவர் என்பதில் 4தமிழ்மீடியா குழுமத்திற்குப் பெருமை.

உடல், உள, வலிகள் கடந்து, சாதிக்க முனையும் ஒரு ஈழத்து இளைய தலைமுறைக் கலைஞனின் கனவு மெய்ப்பட வாழ்த்தலாம். வாய்ப்புள்ளவர்கள் பெருந்திரையில் "தூஸ்ரா"வை இன்றும், வரும் ஞாயிறும் நேரில் காணலாம்.

இத் திரைப்பட விழா மற்றும் திரையிடப்படும் விபரங்களை கீழ்வரும் இணைப்பில் அழுத்திக் காணலாம்.

https://www.solothurnerfilmtage.ch/fr/soleure-2022/programme/doosra

- 4தமிழ்மீடியாவிற்காக : மலைநாடான்

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula