சிறைச்சாலையின் சுவர்களுக்கும் நினைவாற்றல் உண்டு. ஜூலை மாதம் இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஒரு காலண்டர் மாதம் மட்டுமல்ல. அது ஒரு மனநிலை. ஒரு காயம். ஒரு குற்றச்சாட்டு. ஒரு தேசத்தின் மனச்சாட்சியின் மீது இன்னும் உலராத இரத்தக் கறை.
1983 ஜூலையில் நாடெங்கும் பற்றியெரிந்த இனவெறித் தீ, தெருக்களில் மட்டுமல்ல; அரசின் பாதுகாப்பின் அடையாளமாக இருக்க வேண்டிய சிறைச்சாலையின் இரும்புக் கதவுகளையும் தாண்டி நுழைந்தது. வெலிகடை சிறைச்சாலை படுகொலை அந்தத் தீயின் உச்சக்கட்டச் சின்னமாக மாறியது. நீதிமன்றங்களால் அரசின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்ட தமிழ்க் கைதிகள், அதே அரசின் கண்முன்னே கொலை செய்யப்பட்டார்கள். அவர்கள் குற்றவாளிகளாக இருந்தார்களா, அரசியல் கைதிகளாக இருந்தார்களா என்பது கூட அன்றைய கொலைவெறிக்குப் பொருட்டாகவில்லை. அவர்கள் தமிழர்கள் என்பதே அவர்களுக்கெதிரான மரணத் தீர்ப்பாக மாறியது.
அந்த நாளில் கொல்லப்பட்டவர்கள் மட்டுமல்ல இறந்தது. "அரசு பாதுகாப்பு" என்ற நம்பிக்கையும் இறந்தது. "சட்டத்தின் ஆட்சி" என்ற கொள்கையும் காயமடைந்தது. "சிறை" என்ற சொல்லின் அர்த்தமே மாற்றமடைந்தது.
நாற்பத்து மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டன.
அதே ஜூலை மீண்டும் வந்திருக்கிறது.இந்த முறை நீர்கொழும்புச் சிறைச்சாலை வன்முறையின் செய்தியோடு.
இம்முறை தாக்கப்பட்டவர்களும் தாக்கியவர்களும் பெரும்பாலும் சிங்களவர்களாகவே இருக்கலாம். இனத்தின் முகம் மாறியிருக்கலாம். ஆனால் அரசின் பொறுப்பில் இருந்த மனிதர்களின் உயிர்கள் மீண்டும் ஆபத்துக்குள்ளானது என்ற அடிப்படை உண்மை மாறவில்லை. சிறைச்சாலைக்குள் வன்முறை வெடிக்கிறது என்றால், அது கைதிகளின் தோல்வி மட்டுமல்ல; காவல்துறையின், பாதுகாப்புத்துறையின் தோல்வி மட்டுமல்ல, அரசின் தோல்வியும் ஆகும்.
வெலிகடையையும் நீர்கொழும்பையும் ஒரே தராசில் எடைபோட முடியாது. வெலிகடை என்பது திட்டமிட்ட இனவெறியின் வரலாற்றுக் குற்றம். நீர்கொழும்பு என்பது சிறை நிர்வாகம், பாதுகாப்பு, அதிகாரப் பொறுப்பு ஆகியவற்றின் மீதான தீவிரமான கேள்விகளை எழுப்பும் நிகழ்வு. இரண்டின் வரலாற்றுப் பின்னணியும் வேறுபட்டவை. ஆனால் இரண்டையும் இணைக்கும் ஒரு ஆழமான உண்மை இருக்கிறது.
இலங்கை அரசு, காலம் மாறினாலும், சிறைச்சாலைக்குள் ஒப்படைக்கப்பட்ட உயிர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் தனது அடிப்படைப் பொறுப்பை முழுமையாக நிறைவேற்றியதா என்ற கேள்வி இன்னும் உயிருடன் இருக்கிறது.
வெலிகடைப் படுகொலைக்கு நீதி கிடைத்ததா? பொறுப்புக்கூறல் முழுமையாக நடந்ததா? அந்தக் கொடூரம் மீண்டும் நிகழாத வகையில் சிறை நிர்வாகம் அடிப்படையில் மாற்றப்பட்டதா? இந்தக் கேள்விகளுக்கு நேர்மையான பதில் "ஆம்" என்று சொல்ல முடியாத வரை, ஒவ்வொரு புதிய சிறை வன்முறையும் வெலிகடையின் எதிரொலியாகவே கேட்கப்படும்.
ஒரு ஜனநாயக அரசில் சிறை என்பது பழிவாங்கும் இடமல்ல. அது நீதியின் கடைசி எல்லை. நீதிமன்றம் விதித்த தண்டனையைத் தாண்டி ஒரு கைதி கூடுதல் தண்டனையை அனுபவிக்கக் கூடாது. அவரது உயிரைப் பாதுகாப்பது அரசின் மாற்ற முடியாத கடமை. அந்தக் கடமை தோல்வியடையும் ஒவ்வொரு தருணமும், அரசின் ஒழுக்க அதிகாரமும் சிதைகிறது. 1983ல் தமிழ் கைதிகள் மீதான தாக்குதலுக்கு முறையான நீதியும், பொறுப்புக் கூறலும் நிகழ்ந்திருந்தால், 43 வருடங்களின் பின் தன் சொந்த இனத்தையே பலியாக்கிய துயரம் நிகழாதிருந்திருக்க கூடும்.
கறுப்பு ஜூலை தமிழர்களின் வரலாற்றுத் துயரம் மட்டுமல்ல; அது இலங்கையின் ஜனநாயகத்தின் தோல்விக்கான நிரந்தர சாட்சியும் ஆகும். அந்த வரலாற்றை சிலர் மறக்க முயலலாம். சிலர் மறைக்க முயலலாம். ஆனால் வரலாறு மறப்பதில்லை. குறிப்பாக சிறைச்சாலையின் சுவர்கள் மறப்பதில்லை. அவை இரத்தத்தின் மணத்தை ஆண்டுகள் கடந்தும் சுமந்து நிற்கின்றன.
இன்று நீர்கொழும்பில் சிந்தப்பட்ட இரத்தம், நேற்று வெலிகடையில் சிந்தப்பட்ட இரத்தத்தை நினைவூட்டுகிறது. அது இனங்களை ஒப்பிடுவதற்காக அல்ல; அரசின் பொறுப்பை நினைவூட்டுவதற்காக. ஏனெனில், பாதுகாப்பு வழங்கத் தவறும் அரசு, பாதிக்கப்பட்டவரின் இனத்தைத் தேர்ந்தெடுத்து தோல்வியடைவதில்லை; தனது கடமையிலேயே தோல்வியடைகிறது.
வரலாறு ஒரு நாட்டிற்கு இரண்டு வாய்ப்புகளை மட்டுமே தருகிறது. ஒன்று; தவறிலிருந்து கற்றுக்கொள்வது. மற்றொன்று ; அதே தவறை மீண்டும் மீண்டும் செய்வது.
இலங்கை எந்தப் பாதையில் பயணிக்கிறது? இந்தக் கேள்விக்கான பதிலை அரசியல்வாதிகள் அல்ல, சிறைச்சாலைகளே எழுதிக்கொண்டிருக்கின்றன.
வெலிகடை இன்னும் முடிவடையவில்லை. அது ஒவ்வொரு ஜூலையிலும் உயிர்ப்பெறுகிறது. சிறைச்சாலைகளுக்குள் சட்டம் தோற்கும் ஒவ்வொரு நாளிலும், கறுப்பு ஜூலையின் நிழல் மீண்டும் இலங்கையின் மீது விழுகிறது.
