free website hit counter

உதவி கேட்ட ஒய்.ஜி.மகேந்திரா... உதறியெழுந்த ரஜினி !

பார்வைகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சிறந்த நாடகக் கலைஞர், சிறந்த குணச்சித்திரம் மற்றும் நகைச்சுவை நடிகர், நடிகர் திலகம் சிவாஜியின் தீவிர பக்தர் என ஒய்.ஜி.மகேந்திராவுக்கு பல அடையாளங்கள் உண்டு. அதேபோல, ரஜினியின் வாழ்க்கையில் லதா ரஜினிகாந்தை நுழைய வைத்தவரும் இவர்தான் என்று கூறும் மயிலாப்பூர் மற்றும் கோலிவுட் வாசிகள் இன்றைக்கும் கதை, கதையாகச் சொல்லக் கூடியவர்கள் இருக்கவே செய்கிறார்கள்.

சினிமா, நாடகம் என்கிற அடையாளங்களுக்கு அப்பால், இவருக்கு இருந்த இன்னொரு அடையாளம் ‘கல்வித் தந்தை’. அது இவரது அம்மா உருவாக்கிக் கொடுத்த பத்மா சேஷாத்திரி பால பவன் பள்ளியால் விளைந்தது. 60 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட தங்கள் பள்ளிக்கு இப்படியொரு சிக்கல் வந்து சேருமென்று கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள் ஓய்.ஜி.எம் குடும்பத்தினர். சென்னையின் மிக முக்கிய கல்வி அடையாளங்களில் ஒன்றாக விளங்கி வந்த கே.கே.நகர் பத்மா சேஷாத்ரி பள்ளியில் பெரும்பாலும் திரையுலகத்தைச் சேர்ந்தவர்களின் பிள்ளைகளே படித்து வந்தார்கள். இந்தப் பள்ளியின் ஆசிரியரான கோவிந்த வரதாச்சாரி ராஜகோபால் என்பவர் மீது ஒரே நாளில் அடுக்கடுக்காக எழுந்த பாலியல் சீண்டல் புகார்கள் வரிசையாக சமூக வளைதளங்களில் பாதிக்கப்பட்ட மாணவர்களால் பகிரப்படவும் ஒட்டுமொத்தமாக அதிர்ந்து போயிருக்கின்றனர் ஓய்.ஜி.எம் குடும்பத்தினர்.

 

ஊடகங்களில் இந்தச் செய்தி வெளியனவுடன் தன்னளவில் தனிப்பட்ட முறையில் இதை விசாரித்த நடிகர் ஓய்.ஜி.மகேந்திரா, இது ஒரு நீண்ட நாள் சிக்கல் என்றும், ஒரு சில ஆசிரியர்கள் தாங்கள் குறிவைக்கும் மாணவிகளுக்கு வசதி படைத்த மாணவர்களை காதல் கடிதம் கொடுக்க வைத்து, ஸ்பெஷல் கிளாஸ் என்று விடுமுறை நாட்களில் பள்ளிக்கு வரவழைத்து அவர்கள் அசந்தர்ப்பமாக இருக்கும் நேரத்தில் படம் பிடித்து மிரட்டி தங்கள் பாலியல் தேவைகளை தணித்துக் கொண்டதையும், அப்படியான சில படங்களையும் வீடியோக்களையும் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டதையும், புகாரளிக்க முயற்சிக்கும் மாணவிகளின் அக்கா, அம்மா ஆகியோருக்கு வீடியோக்களை அனுப்பி மிரட்டியதையும் உறுதி செய்துக்கொண்டப் பின்னர், தனக்கும் பள்ளிக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லையென்ற அறிவிப்பை வெளியிட முடிவு செய்தாராம் ஒய்.ஜி.மகேந்திரா.

கல்வியாளர் ஒய்.ஜி.பார்த்தசாரதியின் மறைவுக்குப் பிறகு குடும்ப பாகப்பிரிவினையில் பள்ளியின் உரிமம் முழுவதும் தன் தம்பிக்கு போய்விட்டாலும் தான் அதில் ஒரு டிரஸ்டியாக மட்டுமே தொடர்வதாக தற்போது கூறியிருக்கிறார் ஒய்.ஜி.மகேந்திரா.ஆனால் குடும்ப உறவுகள் தன்னை முற்றுகையிட நம்ம குடும்பத்துக்கு என்று இந்த சமூகத்தில் இருந்த மதிப்பை இந்நிகழ்வு சிதைந்துவிட்டது எனப் பொரிந்து தள்ளியிருக்கிறார் ஒய்.ஜி.எம். தன்னுடைய அணுகுமுறைகளுக்கு மாறாக, ‘இது அரசியல் பழிவாங்கல்’ என்று மகள் மதுவந்தி சொன்னதும் அவரிடம் சீறியிருக்கிறார் மகேந்திரா. மகளிடம் ‘அது உண்மையல்ல என்றும் புகார்களை நானே விசாரித்து விட்டேன் இதன் பின்னரும் என்னிடம் பொய் சொல்வதில் அர்த்தமில்லை’ என்றும் மகளின் வாயை அடைத்திருக்கிறார். தனக்கென இருந்த சர்வகட்சி தொடர்புகள் மற்றும் தோழமையை மகளுடைய நேரடி பாஜக சார்பு நடவடிக்கைகள் கெடுத்து விட்டதையும் ரஜினியிடம் சொல்லி புலம்பியிருக்கிறார் மகேந்திரா.

கிணறு தோண்ட பூதம் கிளம்பிய கதையாக , கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்துவந்த இந்த பாலியல் மோசடியில் 30-க்கும் அதிகமான மாணவிகளும் பல மாணவர்களும் புகார் கொடுக்கத் தொடங்கியது ஒய்.ஜி.மகேந்திராவுக்கு பெரும் பேரிடியாக அமைந்துபோக, இதிலிருந்து பெரும் சிராய்ப்புகள் இல்லாமல், தனது பள்ளியின் செல்வாக்கை மீட்டுவிட முடியுமா என நண்பர்கள் பலரிடம் கலந்தாலோசித்த ஒய்.ஜி.மகேந்திரா, நேரடியாக தான் தலையிடாமல் யார் மூலம் பேசலாம் என்று தவித்தவருக்கு அதிமுக ஆட்சியில் தலைமைச் செயலாளராக இருந்த கிரிஜா வைத்தியநாதன் நினைவு வந்திருக்கிறார். இரவோடு இரவாக அவரை தொடர்பு கொண்ட போது, ‘தனக்கும் புதிய அரசுக்கும் தொடர்பே இல்லை என்றும் தன்னால் ஆகப்போவது ஏதுமில்லை’ என்று கைவிரித்திருக்கிறார்.

கிரிஜா வைத்தியநாதன் கைவிட்ட நிலையில் இருக்கவே இருக்கிறார் நம் சகலபாடி சூப்பர் ஸ்டார் ரஜினி என்று அவரை இரவோடு இரவாக போயஸ் தோட்டம் சென்று ரகசியமாக சந்தித்து உதவி கேட்டியிருக்கிறார். ஆனால், ‘இப்போது தான் நிம்மதியாக இருப்பதாகவும், இனி எதற்காகவும் யாருக்காகவும் எந்த அரசியல் கட்சித் தலைவரையும் தொடர்பு கொள்ளும் மனநிலையில் இல்லை என்றும், குறிப்பாக ஆட்சியமைத்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் மு.க.ஸ்டாலினுடன் பேசுவது முறையாக இருக்காது’ என்று கூறு எழுந்து சென்றுவிட்டாராம் ரஜினி. ஏமாற்றத்துடன் திரும்பி மகேந்திரா, இதன் பின்னரே தன்னை தற்காத்துக் கொள்ளும் பொருட்டு, பள்ளியின் நிர்வாக தலைமையில் இருப்பவர்களுக்கு குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை தன்னுடைய கோரிக்கையாக வைத்து நள்ளிரவில் மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார். இதற்குள் தன்னுடைய பாஜக வட்டாரத்தை தொடர்புகொண்ட மதுவந்தி, பாதிக்கப்பட்ட மாணவிகளில் பெரும்பான்மையானோர் பிராமண மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்த மாணவிகள் என்பதை மேற்கோள் காட்டி அவர்களை தங்கள் சமூகத்து முக்கியப் பிரமுகர்கள் மூலம் சமாதானப்படுத்தும் முயற்சியை தற்போது மேற்கொண்டிருக்கிறார். ஆனால், அதற்குள் விவகாரம் முற்றிவிட்டது. முதல் கட்டமாக பாதிக்கப்பட்டவர்களில் 20 பேரிடமிருந்து வீடியோ வாக்குமூலமும் பல அழுத்தமான ஆதாரங்களையும் காவல்துறைக் குழு விரைந்து பெற்றிருக்கிறது. தற்போது இந்த வழக்கை விசாரிக்க தனி குழுவை அமைத்திருக்கிறது சென்னை மாநகர, பாலியல் குற்றத்தடுப்பு காவல் பிரிவு.

-4தமிழ்மீடியாவுக்காக: மாதுமை

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula