நீண்டகாலமாகவே பயனாளர்களுடனான நேரடித் தொடர்பில் கல்வி கற்றலுக்கான உதவிகளைச் செய்து வருகின்றது'4தமிழ்மீடியா' குழுமம். ஆயினும் அவை பற்றி ஒருபோதும் வெளிப்படுத்துவதில்லை. இம்முறை இலங்கையில் பேரிடர் அனர்த்தங்கள் ஏற்பட்ட வேளையில், மலையகத்தின் பெருந்துயர் மனத்தினை அழுத்தியது.
முன்பொருமுறை கோரப்பட்டிருந்த கற்றலுக்கான உதவிகோரலை நினைவிருத்தித் தொடர்பு கொண்ட போதுதான், நாவலப்பிட்டி. கந்தலோயா தமிழ் மகா வித்தியாலய அதிபர் கருணாகரன், இயற்கை அனர்த்தம் காரணமாக, மலையகத்தின் நாவலப்பிட்டிக்குச் சமீபமாகவுள்ள, கந்தலோயா எனும் மலைத்தோட்டப்பகுதியைச் சேர்ந்த 162 அன்றாடக் கூலித் கூலித் தொழிலாளர்கள் குடும்பங்கள், அனைத்துத் தொடர்புகளும் துண்டிக்கப்பட்ட நிலையில் துன்பப்படும் தகவலறிந்தோம்.

அந்தப் பகுதிக்கான சகல போக்குவத்துப் பாதைகளும், தொடர்பாடல்களும் துண்டிக்கப்பட்ட நிலையில், அரச உதவிகள் அவர்களை நாடிச்செல்ல நாளெடுக்கும் என்பதை உணர்ந்து, முதற்கட்ட உதவிகளுக்கு முன்முனைந்தோம். வேறு சில நண்பர்களும் உதவிட முன் வந்த நிலையில், அனைத்தையும் சேர்த்து, 162 குடும்பங்களுக்கும் 10 கிலோ அரிசியுடன், மேலும் சில அத்தியாவசியப் பொருட்களையும் வழங்குவதற்கு, வேண்டிய ஏற்பாடுகளை தன் பழைய மாணவர்களையும், நண்பர்களையும் சேர்த்து ஒருங்கமைத்தார் அதிபர் கருணாகரன். இதனைச் செய்வதற்காக தொடர்புகளற்ற அந்த உயர் மலைக்கிராமத்திலிருந்து 15 கிலோ மீற்றர்கள் வரை நடந்தே வந்திருந்தார் அதிபர்.
ஒருங்கமைத்த உதவிப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு, ஏனையவர்களிடமிருந்து இருந்து சேகரித்த ஒரு தொகைப் பணத்துடன் மேலதிகமாகத் தேவைப்பட்ட2 இலட்சத்து 45 ஆயிரம் ரூபாய்களை 4தமிழ்மீடியா குழுத்தின் சார்பில் வழங்கியிருந்தோம். இவை அணைத்தையும் செயலாக்கி, கந்தலோயாவுக்கு சீரற்ற பாதைகளின் வழியே, பெரும் சிரமத்தின் மத்தியில் உதவிப் பொருட்களை எடுத்து வந்து சேர டிசம்பர் 4ந் திகதி மாலை ஆகியது. மறுநாள் 5ந்திகதி காலை அனைத்துக் குடும்பங்களுக்குமான உதவிகளை சீரான முறையில், அதிபரும், மாணவர்களும், இளைஞர்களும், இணைந்து வழங்கியுள்ளார்கள்.

இது இவ்வாறிருக்க, சக்தி, சிரச ஊடக வலையமைப்பின் ஊடாக, புலத்கொஹுபிட்டிய பிரதேச செயலகத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்த நிவாரண பொருட்களின் ஒரு தொகுதியை, கந்தலோயா மக்களுக்கு, அரசாங்கத்தின் சார்பாக, புலத்கொஹுபிட்டிய பிரதேச செயலகம், கந்தலோயா தோட்ட மக்களுக்கு டிசம்பர் 4ந் திகதி வழங்கியிருந்தார்கள். அதில் 5 kg அரிசி உட்பட சில அடிப்படை உலர் உணவு பொருட்கள் காணப்பட்டன. இவை தவிர வேறு எந்தவிதமான அரசாங்க நிவாரணமும் கந்தலோயா தோட்ட மக்களுக்கு இன்று (08.12.2025) வரை கிடைக்கவில்லை எனக் கந்தலோயா தோட்ட மக்களின் சார்பில் எமக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் மக்களுக்கான உதவிகளை தாரளமாக அறிவிக்கலாம். வெளிநாடுகளிளிருந்து பெருமளவிலான உதவிகள் தாராளமாகக் கிடைக்கலாம். ஆனால் அவை உரியவர்களுக்கு முறையாகச் சென்று சேர்வதில், பிரதேச அலுவலகர்கள் பாரபட்சமின்றிச் செயற்பட்டால் மட்டுமே அது சாத்தியமாகும். பொதுத் தொடர்புகள் வலுப்பெற்றிருக்கும் இக்காலத்தில், அதிகாரிகளின் முறையற்ற செயற்பாடுகளை அரசு அறிந்து கொள்வதென்பதோ, கண்காணிப்பதென்பதோ ஒன்றும் சிரமமில்லை. ஆதலால் துயருற்ற மக்களுக்காக வாரி வழக்கப்படும் கொடைகள் அம் மக்களுக்குச் சென்று சேர்வதை அரசு ஒவ்வொரு பிரதேசத்திலும், ஒவ்வொரு துறைகளிலும், உறுதி செய்து கொள்ள வேண்டும்.
உயிர் இழப்புக்களுக்கு மட்டுமே நிவாரணம் எனும் கருதுகோள் கடந்து துயரப்படும் மக்கள் அனைவருக்குமாதாக நிவாரணங்கள் கிடைக்கவேண்டும். எப்போதும் மலையக மக்களின் பெருந்துயரம் கண்டுகொள்ளப்படுவதேயில்லை. இப்போதாயினும் அது மாறிடவேண்டும்.
- 4தமிழ்மீடியாவிற்காக : மலைநாடான்
