கடந்த ஒரு மாதகாலமாக தமிழக அரசியல் களத்தில் நடைபெற்று வரும் காட்சிகளை, கதையளப்புக்களைத் தொடர்ச்சியாகப் பார்த்து வருகையில் பல வேடிக்கை மனித முகங்களையே காணமுடிந்தது. இந்த மனிதர்கள் பேசுகின்ற அரசியல், ஆளாளுக்கு மாறி மாறி வைக்கின்ற குற்றச்சாட்டுக்கள், முதலமைச்சர் மீடியாவைச் சந்திப்பதில்லை கோபக் குரல்கள் என நிறைந்திருக்கின்றது.
தேர்தலுக்கு முன் "கண்பிடென்டா இருங்க..." எனக் கூறி அவர் தனது பேச்சுக்களை நிறைவு செய்யும் போதெல்லாம், அது அவரது சினிமாக்களில் வரும் ஒரு 'பஞ்ச் டயலாக்' என்றும், அவர் வெறும் சினிமா நாயகன் என்றுமே எண்ணத் தோன்றியது.ஆனால் அவர் தான் சொன்ன வார்த்தைகளிலும், சொல்லிய விடயங்களிலும், மற்றவர்களை விட அதிகமாகவே நம்பிகை வைத்திருந்ததன் பலன் மே மாதம் 4ந் திகதி தமிழகம் கண்டது போலும்.
தேர்தலுக்குக் முன் கூட்டணிக்கு ஆட்கள் இல்லை, வாக்குச் சாவடி செயற்பாட்டாளர்கள் இல்லை, முறையான பிரச்சாரம் இல்லை, செய்தியாளர் சந்திப்பு இல்லை என எண்ணற்ற பேச்சுக்கள். 234 தொகுதிகளுக்கும் வாக்காளர்களை நியமித்த பொழுதில் முகம் தெரியாத வாக்காளர்கள் எப்படி மக்களிடம் சென்றடைவார்கள் எனும் கேலிகள். இவற்றில் சில உண்மைகளும் இருந்தன. ஆட்சியில் பங்கு, அதிகாரத்திலும் பங்கு, என முதற்கூட்டத்திலேயே வெளிப்படையாக அறிவித்த போதும், கூட்டணிக்கு எந்தக் கட்சியும் வரவில்லை எனபதும், எந்தவித பிரபலமுமற்ற முகம் தெரியாத வேட்பாளர்கள், என்பதும் அவற்றில் முக்கியமானவை.
இவையெல்லாவற்றையும் மீறி, எதிர்த்து நின்ற பலவருட அரசியல் பாராம்பரியம் மிக்க கட்சிகளையும், அரசியற்கூட்டுக்களையும் எதிர்த்து நின்று, மூன்றாண்டுகளேயான தமிழக வெற்றிக் கழகம் எனும் தன் கட்சியை முதலிடத்தில் வெற்றி பெற வைத்தது மட்டுமல்லாமல், பெரும்பாண்மையற்ற நிலையில் கூட்டணி ஆட்சி ஒன்றினை அமைத்து, தேர்தலுக்கு முன்னர் சொன்னது போன்றே ஆட்சியதிகாரத்திலும் பங்கு கொள்ளச் செய்து, தமிழக முதல்வர் ஜோசப் விஜய் என உயர்ந்து நிற்பதற்குக் காரணம், மற்றவர்களிடம் அவர் 'கண்பிடென்டா இருங்க.." என விதைத்த நம்பிக்கையின் மேல் மற்றவர்கள் வைத்தார்களோ இல்லையோ, அவர் முழுமையாக நம்பிக்கை வைத்திருந்தது எனலாம்.
தொடர்ச்சியான அரசியற் பேட்டிகளைப் பார்த்தச் சலித்திருந்த நிலையில், Behindwoods Air வலைக்காட்சியில், நிதியியல் ஆளுமை திரு. B.ராமகிருஷ்ணன் அவர்களது, தமிழக நிதிநிலைமை தொடர்பான பேட்டி கவனத்துக்குரியதானது. தமிழகநிதி நிலைமை மற்றும் தீர்வுகள் தொடர்பான இந்த உரையாடலின் கேள்விகளை படிப்படியாக நெறியாளர் மஞ்சுளா கோவிந்தன் முன் வைக்க, ஒவ்வொரு படிநிலைக்கும் மிக நிதானமான தெளிவான பதில்களை ராமகிருஷ்ணன் அளித்து வந்தார்.

நிதிநிலைமை சீராக்கும் உடனடித்திட்டம், நீண்டகால திட்டம், பற்றிக் குறிப்படும் போது, உடனடித்திட்டத்தில் மத்திய அரசிடம் சுமுகநிலை பேணுதலையும், அரச வருமானங்களைக் கூட்டுதலையும் குறிப்பிட்டார். அரச வருமானங்களை அதிகரித்தல் எனும் வகையில் வருகையில், வரி, குற்றப்பணம் அறவிடல் என்பவற்றைக் குறிப்பிட்டார்.
இலங்கையில் அநுர அரசு, பதவியேற்ற போதிருந்த நிதிநிலைமையை முன் வைத்து, அந்த அரசு ஆறுமாதங்களுக்குள்ளாகவே கவிழ்ந்து விடும் எனப்பலரும் கூறியிருந்தார்கள். ஆனால்புதிய அரசு நட்பு நாடுகளுடனான நல்லுறவைப் பேணுவதன் மூலம் கடன் உதவிகளையும், உள்ளகத்தில், வரிஏய்ப்பு, இலஞ்சம் என்பவற்றை ஒருங்கமைத்ததின் மூலம் அரச வருமானத்தை ஒரு ஆண்டுக்குள் அதிகரித்திருந்தது. அதேபோல் போதைப்பொருள் கடத்தல், ஊழல்வாதிகளின் சொத்துக்கள் முடக்கம் என்பவற்றின் மூலமும் கணிசமான தொகையினை அரசு பெற்றுக்கொண்டது. இவை மூலம் திறைசேரியின் வருமானம் கணிசமாகப் பெருகியது. ஆனால் ஆரம்பத்தில் அரச அலுவலகங்களில் நிறைந்திருந்த இலஞ்ச ஊழல்களை மட்டுப்படுத்துவதில் மிகுந்த சிரமப்படவேண்டியிருந்தது. ஆனால் தன் சொந்தக்கட்சி உறுப்பினர்களையே இலஞ்ச ஊழல்களுக்காகத் தண்டிக்கத் தொடங்கிய போது ஏனையோர்களும் வழிக்கு வந்ததைக் காணமுடிந்தது.
https://www.youtube.com/watch?v=eBM0XAVdXs8
பேட்டியின் நிறைவுப்பகுதியில், நேர்மையான அரசும், சீரான அரச இயந்திரமும் இருந்தால், ஐந்து வருடங்களுக்குள்ளாகவே தமிழகத்தின் நிதிநிலைக் கடன்களையெல்லாம் அடைத்துவிடலாம் எனக்கூறும்போது, நெறியாளர் "அது எப்படி சாத்தியம் ? " எனக் கேட்க, " சாத்தியம்தான்.." நிதியாளர் ராமகிருஷ்ணன் கூற, எதிர்பார்ப்பின் மகிழ்ச்சியோடு பேட்டியை நிறைவுசெய்யும் நெறியாளரின் முகமலர்ச்சியைப் போன்றதுதான் இளைய தமிழகத்தின் இயல்பான எதிர்பார்ப்பு என எண்ணத் தோன்றும். இவ்வாறான கேள்விகளுக்கும், எதிர்பார்ப்புக்களுக்குமான நம்பிக்கையூட்டல்தான் தேர்தலுக்குப் பின்னும் தமிழக முதல்வரின் "கண்பிடென்டா இருங்க..." எனும் குரல் போலும்.
- மாதுமை
