free website hit counter

ஜஹனாரா பேகம் எனும் பெண்... 

Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஒரு கதையோ, நாவலோ, திரைப்படமோ, ஒருவரிடத்தில் தாக்கம் ஏற்படுத்துகின்றது என்றால், ஒவ்வொருத்தருக்கும் பல்வேறு தெரிவுகள் இருக்கலாம். ஆனாலும் அவை எல்லாவற்றுக்குமான அடிப்படை கதையாடலாகவே இருக்க முடியும்.

சுகுமாரனின் கதையாடலில் 2017ல் முதற்பதிப்புக் கண்ட'பெருவலி' நாவல் 2024ல் ஏழாவது பதிப்புக் கண்டிருக்கிறது என்றால், வாசித்தவர்கள் எல்லோரையும், ஏதோ ஒரு வகையில் பாதித்திருக்கிறது என்பதே உண்மை. ஆனால் வாசித்தவர்கள் எல்லோரிடத்திலும் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பவள்
ஜஹனாரா பேகம்.

ஜஹனாராவின் ' பெருவலி' யை, சுகுமாரனின் கதையாடல் எழுத்தாக வாசிப்பதற்கு எனக்கு இப்போதுதான் முடிந்தது.ஒரு புத்தகத்தை வாசிக்கத் தொடங்கி, முதல் இருபது பக்கங்களுக்குள்ளோ அல்லது இரண்டு அத்தியாயங்களுக்குள்ளோ அந்தப் புத்தகம் என்னைப் பற்றிப் படர்ந்து விட்டால், முற்றாக வாசிக்கும் வரை அதை மூடிவைக்க மனம் எத்தனிப்பதில்லை. அதற்காக நான் வேக வாசிப்பாளனுமில்லை. நின்று நிதானித்து காட்சிவிபரிப்புக்களில் ஆழ்ந்து, அவற்றைக் கற்பனையில் ரசித்து, அனுபவித்து நகர்பவன்தான். 'பெருவலி' அவ்வாறு என்னைப் பற்றிக் கொண்ட நாவல். 

சுகுமாரனின் கதையாடலில் காட்சிப்படுத்தல்கள் பல கவிதையாகவும், சில அனுபவங்களாகவும் எம்மை ஆகர்சிக்கின்றன. ஜஹனாரா பேகத்தின் கதை சொல்லியாக இருக்கையில் சுகுமாரனின் வரிகள் கவிதையாகவும், வலிநிறைந்த ஜஹனாராவாக நின்று பேசுகையில் அனுபவமாகவும் வெளிப்படுகிறது என நினைக்கின்றேன். ஆனால் கவிதையிலும் சிறந்து நிற்பதாகத் தெரிகிறது ஜஹனாராவின் அனுபவத்தைச் சொல்லும் வரிகள். 

அம்பாரி மேலிருந்து கண்ட காட்சி ஜஹனாராவை அதிரவைத்தது எனத் தொடங்கும்  ஒரு காட்சி அனுபவம் கதையில் இவ்வாறு வெளிப்படுகிறது.

\\  உடல் வற்றிய மாடு ஒன்று சாணமிட்டு நகர்வதற்குள் இரண்டு பேர் ஒடிவந்து அதை விரட்டிணார்கள். மண்ணில் விழுந்திருந்த சாணத்தை சுள்ளியால் கிளறிவிட்டு, அதிலிருந்த எதையோ பொறுக்கி மேலாடையில் முடிந்து கொண்டிருக்கையில், ஒருவன் கத்திக் கொண்டு இன்னொருவனைத் தாக்கினான். அடிபட்டவன் ஊளையிட்டபடி திருப்பதித் தாக்கினான். அவர்கள் மேலாடையில் முடிந்திருந்தவை நிலத்தில் சிதறி விழுந்தன 

இந்தக் காட்சிக்கான விளக்கத்தை ஜஹனாராவின் உதவியாள், பகல் உணவுநேரத்தில்  விவரிக்கின்றான்.

அவர்கள் இருவரும் அடித்துக் கொண்டது தானியத்துக்காக. நிலத்தில் விளைச்சல் இல்லாமல் போனதிலிருந்து தின்னத்தகுந்ததாக எது கிடைத்தாலும் அதை விழுங்கி  பசி அடக்கப் பார்க்கிறார்கள்.  கால்நடைகள் விழுங்கிச் செரிக்காமல் எச்சத்துடன் விழும் வித்துக்களைச் சேகரித்தும் பசியடக்கப் பார்க்கிறார்கள். அவ்வாறான சந்தர்ப்பத்திலேயே அந்த இருவருக்கும் சண்டை ஏற்பட்டது என்கிறான். 

இதைக்கேட்டதும் ஜஹனாராவுக்கு விழுங்கிக் கொண்டிருந்த நெய்சோற்றில் முடைநாற்றம் வீசுவதாகத் தோன்றியது. குடல்கள் தீய்ந்து, வெளியேறத் திணறுவதாக உணர்ந்த ஜஹனாரா வாயைப் பொத்திக் கொண்டு எழுந்து ஓடினாள்.." பசிதான் எல்லாக் கடவுள்களையும் விடப் பெரிய கடவுள்" என்ற வாசகம் ஞாபகத்துக்கு வந்தது. பசி எனும் பெருவலியை   உணர்கையில் துடிக்கின்றாள் ஜஹனாரா பேகம். \\

இந்தப் பகுதியை வாசித்ததும் அந்தக் காட்சி துயர்படிந்த ஒரு சித்திரமாக என் மனத்திரையில் விரிந்தது. அது அப்படியே புழுதிப் படலத்தில் மெல்ல மறைந்து பின் தெரிகையில், இரண்டு சிறுவர்கள் காசாவில் உணவுக்காக அல்லல்படும் சமகாலக் காட்சி விழித்திரையில் நகர்கிறது. " பசிதான் எல்லாக் கடவுள்களையும் விடப் பெரிய கடவுள் மட்டுமல்ல, எக்காலத்திலும்  மிகப்பெரிய கடவுள்" எனச் சொல்லத் தோன்றுகிறது. 

பசி வலி அறிந்து ஜஹனாரா துடித்ததுபோல், கதை நகர்வில் அவளின் துயரங்கள் 'பெருவலி 'யாக  சுகுமாரனின் எழுத்தின் வழி, எம்மைத் தாக்குகின்ற தருணத்தில் வாசிக்கும் நாம் அவளாகிவிடுகின்றோம். 

மன்னர்கள் வாழ்வு மகத்தானது. அரண்மனை வாழ்வு அற்புதமானது என்பதெல்லாம் உண்மையாக இருந்தால், ஷாஜகான் எனும் முகாலயப் பேரரசனுக்கும், 'தாஜ்மஹால்' எனும் காதல் மாளிகையின் நாயகியான மும்தாஜுக்கும் பிறந்த முதல் மகளான ஜஹனாரா பேகம் ஏன் பெருவலிக்கு சொந்தக்காரியானாள். சுகுமாரன் அதை இப்படிச் சொல்கின்றார்..

ஜஹனார பேகம் !

அவளிடம் யானைகளும் குதிரைகளும் ஒட்டகங்களும் இருந்தன. அடிமைகள் இருந்தனர். கப்பல்கள் இருந்தன. செல்வக்களஞ்சியம் இருந்தது. அதிகாரம் இருந்தது. எனினும் எது இருந்தால் இவை மேன்மை பெறுமோ அந்தச் சுதந்திரம் இல்லாமல் இருந்தது. காரணம் ஜகானாரா பெண்ணாக இருந்தாள்.

சக மனிதனை அழித்து, அடிமை கொள்ளும் இடங்களிலெல்லாம், கடவுளின் கருணை நிறைவதில்லை.  மாறாக பெருவலியும் பெருந்துயருமே எஞ்சும் என்பதை சுகுமாரன் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்.

- 4தமிழ்மீடியாவுக்காக : மலைநாடான்

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula