free website hit counter

பஜனை பாடுவது பழைய நம்பிக்கையா...?

Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பஜனை என்றால் கூட்டுப்பிரார்த்தனை அல்லது கூட்டு வழிபாடு என்பது பொருள். நம் சமய மரபில் இந்தக் கூட்டுவழிபாடு முக்கியத்துவம் இழந்து வெகுகாலமாகிற்று. ஆங்காங்கே ஆலயங்களில் ஒருசிலரின் முன்னெடுப்பில் நிகழும் பஜனைகளிலும் பலரும் பங்கு கொள்வதில் ஆர்வமாக இல்லை.

பெரும்பாலும் ஆலயங்களில் நிகழும் பஜனைக் கூட்டு வழிபாடுகளின் போது, ஆலய நிர்வாகிகள் உட்பட பலரும் தங்களுடைய கதைகள் பேசுபவர்களாகவே இருப்பது கண்கூடு.  மொத்தத்தில் அது ஒரு பழைய சம்பிரதாயமாகப் பார்க்கப்படுவது தொடர்கிறது..

மக்கள் சேர்ந்து கூட்டு வழிபாடியற்றும்போது எழக் கூடிய இறையருளும், ஆன்மநிறைவும் குறித்து, எத்தனை முறை எடுத்துரைத்தாலும், அதன் மீதான பற்றுதலும் ஈடுபாடும், புரிதலும் நம்மவர்களிடத்தில் ஏற்படுவது குறைவாகவே உள்ளது. பெரியவர்களிடத்திலேயே இந்த ஈடுபாடு அரிதாகையில், இளையவர்களிடம் சொல்லவே தேவையில்லை. இந்த ஈடுபாட்டுக் குறைவுக்கான காரணங்களில், பஜனை பாடுந்தரப்புக்களில் இருக்கக் கூடிய குறைபாடுகளும் இல்லாமலில்லை. பாடும் பாடல்கள், பாடும் இசைமுறை, எனப் பல்வேறு காரணிகளும் இந்த வழிபாட்டு முறைமையை வலுவிழக்கச் செய்கின்றன.

சம்பிரதாய பஜனைகளில், உடையலூர் கல்யாணராம பாகவதர், விட்டல்தாஸ் மகராஜ், செங்கோட்டை ஹரிஹர சுப்ரமண்யபாகவதர், சிவஶ்ரீ ஸகந்தப்பிரசாத் எனப் பலரது பஜனைகளும் மனம் நிறைந்தவை. இவர்களது பஜனைகளில் அதிகமானோர் கலந்தும் வருகின்றார்கள்.  ஆனால் இதே காலப்பகுதியில் தமிழகத்தில் சம்பிரதாய பஜனைகளிலும், கூட்டுவழிபாடுகளிலும், Who said bhajans are old school? Gen Z is tuning in, and the divine vibes are stronger than ever என நுனி நாக்கு ஆங்கிலம் பேசியபடி, ஆர்வமாக பஜனைகளில் பங்கு கொள்பவர்களாக மட்டுமன்றி, பஜனைகளை இசையரங்குகள் போல் செய்கின்ற இளைஞர்களும் அதிகரித்து வருகின்றார்கள். அன்மைக்காலத்தில் youtube ல்  நாம் மிகவும் இரசித்துப் பார்க்கும் பஜனைகள் இரண்டு.

Nandagovindam Bhajans குழுவினர் சம்பிரதாய பஜனைகள் முதல் பல்வேறு இசைவடிவங்களுடன், அருமையான கச்சேரிகள் போல் பஜனைகள் பாடிவருகின்றார்கள். பஜனைகளின் நடுவிலே பங்கேற்பாளர்களுடன் இணைந்து பேசுகின்றார்கள். வேட்டி சால்வை எனப் பாரம்பரிய உடையிலும், நாகரீகமான உடைகளிலும், இடத்துக்கு ஏற்றார்போல் தங்களை தகவமைத்துக் கொள்ளும், இந்த பஜனைக்குழுவின் பிரதான பங்காளர்கள், பல்வேறு முக்கியதுறைசார் பதவிகளை வகிக்கும், இசைஞானம் மிக்க இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கேரளத்தையும் தாண்டி, துபாயிலும், கனடாவிலும் கூட, இவர்களது பஜனைக்குழு இயங்குவதாகச் சொல்கின்றார்கள்.

Radhika Das கடந்த 15 ஆண்டுகளாக, வெளிநாட்டவர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட பஜனையாளர். ஒரு ஆர்கெஸ்ட்ரா நிகழ்ச்சி போல நடைபெறும் இவரது பஜனைகளில் பல்லாயிரக் கணக்கானவர்கள் கலந்து கொள்கின்றார்கள்.

உலகின் பல்வேறு நாடுகளிலுமுள்ள மிகப்பெரிய மண்டபங்களில், சிறப்பான ஒலியமைப்புக்களுடன் நடைபெறுகின்ற இவரது பஜனைகள்வோர் தொகை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமேயுள்ளது.

இந்தப் பஜனைகளில் கலந்து கொள்வோர் எல்லோரும், " மனச்சோர்வினை அகற்றி, புத்துணர்ச்சி பெறச்செய்கின்றன பஜனைகள் "  என்று  கூட்டாகச் சொல்கின்றார்கள். அந்த ஆத்ம திருப்தியை ஏன் எம்மவர்களால் மட்டும் பெற்றுக் கொள்ள முடியாமற்போகிறது....?

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula