free website hit counter

மனம் என்பது.. !

Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மனம் என்பது அருமையான விளை நிலம். அந்த விளை நிலத்தில் எதைப் பயிரிட்டாலும் அமோக வளர்ச்சி பெறும். நிலத்தன்மையினை தமிழில் ஐவகை நிலங்களாக வகைப்படுத்தியுள்ளனர் எம் முன்னோர். அதுபோலவே மனமென்னும் தன்மையிலும் ஐவகை தளம் உண்டு.

1. மேல் மனம் - புலன் சார்ந்தது [ Periphery ]
2. நடு மனம் - சிந்தனையும் ஆராய்ச்சியையும் சார்ந்தது [ Conscious ]
3. ஆழ் மனம் உணர்வின் அனுபவத்தை சார்ந்தது [ Sub Conscious ]
4. ஆழ் மனதின் அடித்தளத்தில் போகத்திற்கு வராத மனமென்று ஒரு தளம் உண்டு [ Super Conscious ]
5. மற்றுமொரு தளம் இயக்கமற்ற தளம் [ Un Conscious ]
இப்படி மனதிற்கும், நிலத்திற்கும் தொடர்பு இருக்கிறது என்பது போல், நிலத்தில் ஒரு பகுதியை புறம்போக்கு பகுதியாக ஒதுக்கி அதில் தேவையற்ற கழிவுகளின் கிடங்காக வைத்து, அதில் கழிவுகளைச் சேர்த்து, விளை நிலத்திற்கு உரமாக்குவது போல மனமென்னும் விளை நிலத்திற்கும் ஒரு பகுதியை ஒதுக்கி வைத்து அதில் நமக்குத் தேவை இல்லாத அல்லது அளவுக்கு மிஞ்சியதை எல்லாம் போட்டு வைத்தால், அதனையே உரமாக்கி நம்மை உறுதி செய்து கொள்ளலாம் .

இப்போது நமக்கு முக்கியமானதொரு கேள்வி தொன்றலாம். எது தேவை இல்லாதது ? எது மிதமிஞ்சியது?.இதற்கான விடைகாணல் மிகச் சுலபமே. நம்மைத் தேடி வரும் போட்டியும் பொறாமை நமக்கு தேவை இல்லாதது. நம்மைத் தேடி வரும் மித மிஞ்சிய பாராட்டுகளும், புகழும் நமக்கு மிதமிஞ்சியது. இந்த இரண்டையும், மனத்தின் புறம்போக்கிடத்தில் போட்டுவிடலாம். இதனால் போட்டியாலும், பொறாமையாலும் நாம் பாதிப்பிற்கு ஆட்படமாட்டோம். பாராட்டுகளும், புகழும் நம்மை போதைக்கு ஆட்படுத்தும் ஆபத்தில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் .

புறம்போக்கு மன நிலத்தில் போட்டு வைத்த இவற்றால் என்ன பயன். நிலத்தில் எதைப் போட்டாலும் அதை ஈர்த்துக் கொண்டு, அழகிய மலராகவோ, அற்புத கனியாகவோ, நிலம் எப்போதும் நல்லதை மட்டுமே வெளிப்படுத்துவது போல், மனமென்னும் புறம்போக்கு நிலத்தில் நாமிட்டது அனைத்தையும் ஈர்த்து, அவைகளையே உரமாக்கிக் கொண்டு அன்பின் உயிர்த்தெழுதல் மட்டுமே நிகழும் நிகழ்வாக மாற்றியமைக்க முடியும்.

மனம் நிலத்தைப் போல தின்மையாக இருந்தால், நல்லது, கெட்டது என்ற பாகுபாடு இல்லாமல்
அத்தனையும் ஈர்த்துக் கொண்டு, வெளிப்படுவது நமக்கும், நம்மை சார்ந்தவர்களுக்கும் நலம் பயக்கும் என்பதில் ஐயமில்லை. மனதை வளம் கொழிக்கும் விளை நிலம் ஆக்கி மனதைக் கொண்டே மனதைக் கடந்து அன்பின் ஆழ் தளத்தில் அமர்ந்து, ஆரோக்கிய வாழ்வை ஆனந்தமாக வாழ்வோம்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula