சில தினங்களுக்கு முன் ஜேர்மனியில் அகதித் தஞ்சம் கோரியிருந்த ஒரு தமிழ் இளைஞன், மன உளைச்சல் காரணமாக தன்னுயிரை மாய்த்துக் கொண்டான் எனச் செய்திகளில் படிக்க முடிந்தது. ஒருவேளை அவன் ஃபிரான்ஸ் காஃப்காவின் எழுத்துக்களைப் படித்திருந்தால், இவ்வாறான ஒரு மனநிலைக்குச் சென்றிருக்க மாட்டானோ என எண்ணத் தோன்றிது.
20ம் நூற்றாண்டின் மிக முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவர் ஃபிரான்ஸ் காஃப்கா (Franz Kafka). இப்போதை செக் குடியரசின் ( முன்னைய ஆஸ்திரிய-ஹங்கேரி பேரரசு) பிராக் (Prague) நகரில் பிறந்தவர். ஜேர்மன் மொழியில் புனைவுகளை எழுதியவர். தமிழில் உருமாற்றம் என்னும் தலைப்பில் மொழிமாற்றம் செய்யப்பட்டிருக்கும் (The Metamorphosis) எனும் அவரது பிரபலமான புனைவினை வாசிக்கையில், இந்த மனிதனுக்கு எப்படி இவ்வாறெல்லாம் யோசிக்க முடிந்தது என ஆச்சரியம் எழுந்தது. ஒரு வகையில் காஃப்காவின் வாழ்க்கை அனுபவம் அதுவென அறிய முடிகிறது.
நம் வாழ்க்கையில் காரணமே இல்லாமல் சில காரியங்கள் நடைபெறும். அது ஏன்? எதற்கு ? நடைபெறுகின்றது. எவ்வாறு நாம் அதற்குள் சிக்கிக்கொள்கின்றோம் என்பதெல்லாம் புரியாத ஒரு குழப்பநிலை தோன்றும். அவ்வாறான குழப்பநிலையை, விபரிப்பதற்கு "காஃப்காஎஸ்க்" (Kafkaesque) எனும் வார்த்தையைப் பயன்படுத்துவதாகவும், அந்த வார்த்தைக்கு, ஃபிரான்ஸ் காஃப்காவின் எழுத்துக்கள் ஒரு எண்ணக்கருவூலமாக இருந்தமையால், அவரது பெயருடன் இணைந்து அந்தச் சொல்லடுக்கு உச்சரிக்கப்படுவதாகவும் சொல்கின்றார்கள்.
சுவிற்சர்லாந்தில் மேல்நிலைக் கல்வி பயிலும் நம் இரண்டாம் தலைமுறைப் பிள்ளைகளில் பலரும், உளவியல் கற்கைநெறியை அதிகம் தேர்வு செய்திருப்பதை அவதானிக்க முடிந்தது. அவ்வாறு அந்தக் கற்கை நெறியினைத் தெரிவு செய்தவர்கள் சிலரிடத்தில் பேசும் போது, உளவியலில் ஏன் இந்த நாட்டம் எனக் கேட்ட போது, " நிறைய வேலை வாய்ப்புக்கள் உள்ளது " எனச் சொல்லிச் சிரிப்பார்கள். அது உண்மையா என்பது எமக்குச் சரிவரத் தெரியவில்லை. ஆனால் அவர்கள் தங்கள் வாழ்கையில் சரியானதொரு தேர்வினைச் செய்திருக்கின்றார்கள். அதனால் அவர்கள் வாழ்க்கையின் பாதையிலுறையும் குழப்ப நிலைகளிலிருந்து, முறையான தெளிதலைத் தரும் என்ற நம்பிக்கை பிறக்கிறது. இதை மேலும் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டுமாயின் தேடலும், வாசிப்பும், நிறைந்தவர்கள் நிச்சயம் ஃபிரான்ஸ் காஃப்காவின் எழுத்துக்களை வாசித்திருக்க வேண்டும். இல்லையெனில் கண்டிப்பாகத் தேடி வாசிக்க வேண்டும். ஆசைகள். கனவுகள், ஏமாற்றங்கள், குழப்பங்கள் நமக்குள்ளும் இருக்கின்றன. அவற்றின் சுழலுக்குள் சிக்கிக்கொள்ளாமல் மீளெழுவதுதான் வாழ்க்கையின் சுவாரஸ்யம்.
வாழ்வில் நெருக்குதல்களுக்கும், துன்பங்களுக்கும் உள்ளாகியபோதும், ஃபிரான்ஸ் காஃப்கா மற்றவர்களுக்கு எவ்வாறு நம்பிக்கைளித்தார் என்பதற்கு அவரின் வாழ்க்கைக் குறிப்பிலிருந்து, ஒரு சம்பவத்தைப் பார்க்கலாம்.
பெர்லின் நகரப் பூங்கா ஒன்றில் தனது பொம்மையை தொலைத்து விட்டு அழுது கொண்டிருந்த போதுதான் அவரைப் பார்த்தாள் அந்தச் சிறுமி. அவருக்கு சுமார் இருபது வயது இருக்கலாம்.
"ஏன் அழுகிறாய்.?" என்று கேட்டுத் தெரிந்தவர், அப்படியே விட்டுச் செல்லாமல், "வா.. அந்த பொம்மையைத் தேடலாம்.." என்று சிறுமியையும் கூட்டிக் கொண்டு தேடினார். தேடுவதற்குள் இருட்டிப் போய்விடவே, "நாளை வருகிறேன். நாளையும் நாம் இருவரும் சேர்ந்து தேடலாம்.." என்று தேற்றி அந்தச் சிறுமியை அனுப்பி வைத்தார்.
அடுத்த நாள் திரும்பி வந்தபோது, அவர் பொம்மை எழுதியதாகக் கூறப்படும் ஒரு கடிதத்தை அந்தப் பெண்ணிடம் கொடுத்ததுடன் அவரே அதை வாசித்தும் காட்டினார். அந்தக் கடிதத்தில், "தயவுசெய்து அழாதே... நான் உலகைச் சுற்றிப் பார்க்க ஒரு பயணம் செல்கிறேன். சீக்கிரம் திரும்பி வந்துவிடுவேன். அதுவரை எனது அனுபவங்களைப் பற்றி உனக்கு தினசரி எழுதுகிறேன்" என்று அந்த பொம்மை எழுதியிருந்தது.
அடுத்த நாளில் இருந்து அவர் தினசரி பொம்மையிடமிருந்து வந்த கடிதங்களைக் கொண்டு வந்து அவளுக்கு வாசித்துக் காட்ட ஆரம்பித்தார். ஒவ்வொன்றும் தொலைதூர நாடுகளின் கதைகள் மற்றும் பொம்மையின் அற்புதமான சாகசங்களால் நிரம்பியிருக்க.. சிறுமி மிகுந்த மகிழ்ச்சி அடைந்தாள்.
இறுதியில், "எனது பயணங்கள் முடிந்தன. நாளை திரும்புகிறேன். நீண்ட பயணங்கள் என் உருவத்தை சற்று மாற்றியிருக்கலாம். ஆனாலும் அது நான்தான். என்னை ஏற்றுக்கொள்..." என்று எழுதியிருந்தது.சிறுமி மறுநாளுக்காக மகிழ்ச்சியுடன் பொம்மையின் வருகை எதிர்பார்த்து காத்திருந்தாள்.
மறுநாள் வந்த அவர் சிறுமியிடம் கேட்டு அறிந்த அடையாளங்களை ஒத்த ஒரு பொம்மையை வாங்கியிருந்தார். என்றாலும் அதையறியாத அந்தச் சிறுமி, வித்தியாசங்கள் தெரிந்தாலும் அவள் அந்த பொம்மையை அன்புடன் ஏற்று கட்டிக் கொண்டாள்.
வளர்ந்த பிறகு அவளுக்கு அந்த மனிதர் சொன்னது அனைத்தும் தன்னைத் தேற்ற சொன்ன பொய்கள் என்று அறிந்திருந்தாள். ஆனாலும், அழுது கொண்டிருந்த முகம் தெரியா ஒரு சிறுமியை மற்றவர்கள் போல கடந்து செல்லாமல், அவளைத் தேற்றுவதற்காக அவர் எடுத்துக் கொண்ட கருணை. அவள் மனதில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. ஒரு பெரும் அன்பை விதைத்திருந்தது. அவளும் யாரையும் ஊதாசீனம் செய்யாத, அடுத்தவர் மீது அக்கறை கொண்ட நல்ல ஒரு பெண்ணாக வளர ஆரம்பித்தாள்.
நாட்கள் செல்லச் செல்ல இந்த நிகழ்வுகள் எல்லாம் மறந்து போன ஒருநாளில், செய்தித் தாளில் வந்திருந்த அந்த இறப்புச் செய்தியைப் பார்த்த போதுதான், அன்று தன்னைத் தேற்றியவர் பிரபல எழுத்தாளர் ஃபிரான்ஸ் காஃப்கா என்று தெரிந்தது அவளுக்கு. ஓடிச் சென்று அந்த பொம்மையை எடுத்து கட்டிக்கொண்டாள்.
அப்போதுதான் அந்த பொம்மைக்குள் மறைந்திருந்த காஃப்காவின் இறுதிக் கடிதம் அவளுக்குக் கிடைத்தது. அதில், "பெண்ணே... நாம் விரும்பும் அனைத்தும் தொலைந்து போகலாம். திரும்பக் கிடைக்காமலேகூட போகலாம். ஆனால் நம்பு. அன்பு வேறொரு வடிவில் நம்மைத் தேடி நிச்சயம் வரும்.." என்று எழுதியிருந்தது.
மாற்றம் தவிர்க்க முடியாதது. என்றாலும், அது எதிர்பாராத புதிய தொடக்கங்களையும் நமக்குக் கொண்டு வரும் என்பதை நம்பியவர் காஃப்கா. அதுதான் அந்தச் சிறுமிக்கு நடந்தது. நாம் விரும்புவதை சிலசமயம் இழந்தாலும் ஆச்சரியமான மற்றும் அர்த்தமுள்ள வழிகளில் அவை நமக்குத் திரும்பக் கிடைக்கும் என்பதை அறிந்து, வாழ்க்கை தரும் மாற்றங்களையும் ஏமாற்றங்களையும் நாமும் ஏற்றிடப் பழகலாம்... வாழ்லாம்.
- 4தமிழ்மீடியாவிற்காக: மலைநாடான்
