ஒரு காலத்தில் இரண்டு உலகப் போர்களின் காயங்களைத் தாங்கிய ஐரோப்பா, “போர் மீண்டும் வேண்டாம்” என்ற அரசியல் சிந்தனையை தனது நாகரிகத்தின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றாகக் கொண்டிருந்தது. பனிப்போர் முடிவடைந்தபின் அந்த நம்பிக்கை மேலும் வலுப்பெற்றது. இராணுவச் செலவைக் குறைத்து, பொருளாதார ஒருங்கிணைப்பையும் வர்த்தகத்தையும் முன்னிறுத்திய ஐரோப்பா, பாதுகாப்புக்காக அமெரிக்காவின் NATO குடையின் மீதும் பெரிதும் நம்பிக்கை வைத்திருந்தது. ஆனால் இன்று அந்த ஐரோப்பா மாறிக்கொண்டிருக்கிறது.
2026-ஆம் ஆண்டில் EU உறுப்பு நாடுகளின் பாதுகாப்புச் செலவு சுமார் €454 பில்லியனை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2021-ஐ ஒப்பிடுகையில் 75.3% அதிகம். 2025-ல் மட்டும் EU நாடுகளின் பாதுகாப்புச் செலவு 20% உயர்ந்துள்ளது.
NATO நாடுகளும் 2035க்குள் தமது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5% வரை பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புத் தொடர்பான செலவுகளுக்குச் செலவிடும் இலக்கை ஏற்றுள்ளன. அதில் 3.5% நேரடி இராணுவத் தேவைகளுக்கும், 1.5% முக்கிய உட்கட்டமைப்பு, இணையப் பாதுகாப்பு, குடிமக்கள் தயார்நிலை, பாதுகாப்புத் தொழில்துறை போன்ற பரந்த தேவைகளுக்கும் ஒதுக்கப்படலாம். இவை வெறும் எண்ணிக்கைகள் அல்ல.
ஐரோப்பாவின் பாதுகாப்புச் சிந்தனையில் ஏற்பட்டுள்ள ஆழமான மாற்றத்தின் அறிகுறிகள்.
அமைதியைப் பாதுகாக்கும் தடுப்பா? போருக்கான முன்தயாரிப்பா? மாறிவரும் ஐரோப்பியப் பாதுகாப்பின் பூகோள அரசியல்நடுநிலை நாடுகள்கூட மாறுகின்றன. இதில் இன்னும் சுவாரஸ்யமான அம்சம் ஒன்று இருக்கிறது.
ஐரோப்பாவின் சில நாடுகள் நீண்டகாலமாக நடுநிலை அல்லது இராணுவ சார்பின்மையைப் பேணி வந்தவை. ஆஸ்திரியா, அயர்லாந்து, மால்டா, சைப்பிரஸ் போன்ற நாடுகள் இன்றும் பல்வேறு வடிவங்களில் அந்தக் கொள்கையைத் தொடர்கின்றன. ஆனால் நடுநிலை என்பது இராணுவத் தயார்நிலையை கைவிடுவது என்று அவை கருதவில்லை.
உதாரணமாக, ஆஸ்திரியா 2032க்குள் பாதுகாப்புச் செலவை GDP-யின் 2% ஆக உயர்த்தும் இலக்கை வைத்துள்ளது. அதன் பாதுகாப்புக் கொள்கை அனைத்து இராணுவத் துறைகளிலும் திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் நிலைப்பாடும் இதே முரண்பாட்டைத் தெளிவாகக் காட்டுகிறது. அதன் அதிகாரப்பூர்வக் கொள்கையின்படி, சுவிட்சர்லாந்து நடுநிலை நாடாக இருந்தாலும் “ஆயுதம் ஏந்திய நடுநிலை” என்ற அடிப்படையில் தனது நிலப்பரப்பையும் சுதந்திரத்தையும் பாதுகாக்க சொந்த இராணுவத்தை வைத்திருக்கிறது. NATOவுடன் பயிற்சி, ஆயுதக் கொள்முதல் போன்ற இராணுவ ஒத்துழைப்புகளும் நடுநிலைக்கு முரணானவை அல்ல என அது விளக்குகிறது. இதிலிருந்து ஒரு முக்கியமான உண்மை வெளிப்படுகிறது:
நடுநிலை என்பது ஆயுதமற்ற நிலை அல்ல; தன்னைத் தற்காத்துக்கொள்ளும் திறனுடனான போர்த் தவிர்ப்பு என்ற புதிய விளக்கத்தை ஐரோப்பா நோக்கிச் செல்கிறது.
ரஷ்யா – உக்ரைன் போர் ஏற்படுத்திய உளவியல் மாற்றம்
இந்த மாற்றத்தின் மையத்தில் இருப்பது ரஷ்யாவின் உக்ரைன் மீதான போர். 2022க்குப் பின்னர் ஐரோப்பாவின் கிழக்கு எல்லைக்கு அருகில் முழுமையான நிலப்போர் சாத்தியம் என்பது வரலாற்றுப் புத்தகத்தில் இருக்கும் ஒரு கருத்தல்ல; நேரடியாகக் காணப்பட்ட நிஜமாகிவிட்டது. இதனால் ஐரோப்பிய நாடுகள் சில கேள்விகளை மீண்டும் எழுப்பத் தொடங்கின.
போதுமான வெடிமருந்துகள் நம்மிடம் உள்ளனவா? வான் மற்றும் ஏவுகணைப் பாதுகாப்பு போதுமா? ட்ரோன் தாக்குதல்களை எதிர்கொள்ள முடியுமா?நீண்டகாலப் போர் ஏற்பட்டால் ஆயுதங்களைத் தொடர்ந்து உற்பத்தி செய்ய முடியுமா? இராணுவத்தை ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டுக்கு வேகமாக நகர்த்தும் சாலைகள், ரயில்கள், துறைமுகங்கள் உள்ளனவா? அமெரிக்க இராணுவ உதவி குறைந்தால் ஐரோப்பா தன்னைத்தானே பாதுகாத்துக்கொள்ள முடியுமா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களாகவே தற்போதைய மறுசீரமைப்பைப் பார்க்க வேண்டும்.
EU-வின் Readiness 2030 திட்டம், வெறும் வீரர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டதல்ல. வான் ஏவுகணைப் பாதுகாப்பு, நீண்டதூரத் தாக்குதல் திறன், வெடிமருந்து கையிருப்பு, ட்ரோன்கள், எதிர்-ட்ரோன் அமைப்புகள், செயற்கை நுண்ணறிவு, மின்னணுப் போர், இணையப் பாதுகாப்பு, இராணுவப் போக்குவரத்து, கடற்படை மற்றும் விண்வெளித் திறன் ஆகியவற்றை ஒரே பாதுகாப்புக் கட்டமைப்பாக உருவாக்குகிறது.
அதாவது, ஐரோப்பா ஒரு இராணுவத்தை மட்டும் மீளமைக்கவில்லை; ஒரு முழுமையான போர்த் தயார்நிலை அமைப்பை உருவாக்குகிறது. ஆனால் இது போருக்கான தயாரிப்பா? இங்கேதான் கவனமாகப் பிரித்துப் பார்க்க வேண்டிய கேள்வி எழுகிறது. ஒரு நாடு ஆயுதங்களை வாங்குவது, போர் செய்ய விரும்புகிறது என்பதற்கான நேரடி ஆதாரம் அல்ல. சில நேரங்களில் போர் வராமல் இருப்பதற்காகவே போரை எதிர்கொள்ளும் திறனை உருவாக்க வேண்டியிருக்கலாம்.
இதுதான் “தடுப்பு” என்ற கருத்தின் அடிப்படை.
ஒரு எதிரி, “இந்த நாட்டைத் தாக்கினால் எளிதில் வெல்ல முடியாது” என்று கருதினால், தாக்குதலுக்கான முடிவை எடுப்பதிலிருந்து பின்வாங்கக்கூடும்.ஐரோப்பிய ஒன்றியமும் தனது தற்போதைய தயார்நிலையை இதே கோணத்தில் விளக்குகிறது. 2030க்குள் “worst extreme military contingencies” எனப்படும் மிக மோசமான இராணுவ நெருக்கடிகளையும் எதிர்கொள்ளும் அளவுக்கு தயாராக வேண்டும் என அதன் Readiness 2030 திட்டம் கூறுகிறது.
அதேபோல், 2026 ஜூன் மாத ஐரோப்பிய கவுன்சில் முடிவில், ரஷ்யாவின் உக்ரைன் போர் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு “இருத்தலியல் சவால்” எனக் குறிப்பிடப்பட்டதுடன், 2030க்குள் ஐரோப்பிய பாதுகாப்புத் தயார்நிலையைத் தீர்மானமாக உயர்த்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
எனவே, ஐரோப்பிய நாடுகளின் அதிகாரப்பூர்வ விளக்கம்; “போர் செய்யத் தயாராகிறோம்” என்பதல்ல; “போர் நம்மீது திணிக்கப்பட்டால் எதிர்கொள்ளத் தயாராகிறோம்” என்பதாகும். ஆனால் பூகோள அரசியல் எப்போதும் ஒரு நாட்டின் அதிகாரப்பூர்வ விளக்கத்தோடு முடிந்துவிடுவதில்லை.
ஆயுதங்கள் அதிகரிக்கும்போது அச்சமும் அதிகரிக்கலாம். இதுதான் உலக அரசியலின் பழைய முரண்பாடு. ஒரு நாடு தனது பாதுகாப்புக்காக ஆயுதங்களை அதிகரிக்கிறது.அண்டை நாடு அதைப் பார்த்து, “அவர்கள் நம்மை எதிர்கொள்ளத் தயாராகிறார்கள்” என்று கருதுகிறது. அதனால்
அது தன் ஆயுதங்களை அதிகரிக்கிறது.
முதல் நாடு மீண்டும் அதைக் கண்டு மேலும் ஆயுதங்களைச் சேர்க்கிறது. இவ்வாறு இரு தரப்பும் தங்களைத் தற்காத்துக்கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கும்போதே பாதுகாப்பின்மை அதிகரிக்கும் சூழல் உருவாகலாம். இதுதான் பூகோள அரசியலில் “பாதுகாப்பு முரண்பாடு” என அழைக்கப்படும் நிலை.
எனவே, ஐரோப்பாவின் தற்போதைய இராணுவ எழுச்சி அமைதியைப் பாதுகாக்கும் தடுப்புச் சுவராக இருக்குமா அல்லது எதிர்கால ஆயுதப் போட்டியின் தொடக்கமாக மாறுமா என்பது இன்னும் திறந்த கேள்வியே.
மற்றொரு காரணம் – அமெரிக்கா
ஐரோப்பாவின் இந்த மாற்றத்தை ரஷ்யாவை மட்டும் வைத்து விளக்க முடியாது. அமெரிக்காவின் பங்கு குறித்த ஐரோப்பிய மதிப்பீடும் மாறியுள்ளது. பல தசாப்தங்களாக ஐரோப்பாவின் பாதுகாப்பில் அமெரிக்கா வகித்த மையப் பங்கு, ஐரோப்பிய நாடுகளை ஒப்பீட்டளவில் குறைந்த இராணுவச் செலவில் இருக்க அனுமதித்தது.
ஆனால் அமெரிக்காவின் உலகளாவிய கவனம் இந்தோ-பசிபிக் பகுதியை நோக்கி அதிகரிப்பதும், NATOவில் ஐரோப்பிய நாடுகள் அதிகப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்ற அமெரிக்க அழுத்தமும், ஐரோப்பாவை தன்னிறைவு நோக்கி நகர்த்துகின்றன. இதனால் உருவாகும் புதிய கேள்வி, “அமெரிக்கா பாதுகாக்கும் ஐரோப்பா” என்பதிலிருந்து “தன்னைத் தானே அதிகமாகப் பாதுகாக்கும் ஐரோப்பா”வாக கண்டம் மாறுகிறதா?
அப்படியானால், இது ரஷ்யாவுக்கு எதிரான பாதுகாப்புத் திட்டம் மட்டுமல்ல. இது ஐரோப்பாவின் மூலோபாயத் தன்னாட்சிக்கான முயற்சியும் ஆகிறது.
போரின் களம் மாறிவிட்டது
இன்றைய ஐரோப்பா டாங்கிகளையும் போர் விமானங்களையும் மட்டும் வாங்கவில்லை.ட்ரோன். செயற்கை நுண்ணறிவு. விண்வெளி.
சைபர் பாதுகாப்பு. மின்னணுப் போர். செயற்கைக்கோள் கண்காணிப்பு. முக்கிய உட்கட்டமைப்புப் பாதுகாப்பு. விநியோகச் சங்கிலிகள். இவை அனைத்தும் புதிய பாதுகாப்பின் பகுதிகளாகின்றன.
EU-வின் Readiness Roadmap 2030, “Eastern Flank Watch”, ஐரோப்பிய ட்ரோன் பாதுகாப்பு முன்முயற்சி, ஐரோப்பிய வான் பாதுகாப்புக் கேடயம், ஐரோப்பிய விண்வெளிப் பாதுகாப்புக் கேடயம் போன்ற திட்டங்களையும் முன்வைக்கிறது. இதனால் எதிர்காலப் போர் என்பது எல்லையில் இரண்டு படைகள் மோதும் காட்சியாக மட்டுமே இருக்காது.
ஒரு நாட்டின் மின்சார வலையமைப்பை முடக்குவதும் போராகலாம். செயற்கைக்கோளை முடக்குவதும் போராகலாம். தகவல் அமைப்பைத் தாக்குவதும் போராகலாம். ட்ரோன் கூட்டத்தை அனுப்புவதும் போராகலாம். ஐரோப்பா இவற்றை எதிர்கொள்ளத் தயாராகிறது. அப்படியானால், ஐரோப்பா மீண்டும் ஆயுதம் ஏந்துகிறதா? ஆம் ஆனால் எந்த அர்த்தத்தில் என்பதுதான் முக்கியம்.
இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய காலத்தில் உருவான “போர் தவிர்ப்பு = இராணுவத் தளர்வு” என்ற அணுகுமுறையிலிருந்து, ஐரோப்பா இப்போது “போர் தவிர்ப்பு = நம்பகமான தடுப்புத் திறன்” என்ற அணுகுமுறையை நோக்கி நகர்வதாகத் தெரிகிறது.
இது ஒரு பெரிய மனநிலை மாற்றம். ஆனால் இந்த மாற்றத்தை “ஐரோப்பா போருக்குத் தயாராகிறது” என்று மட்டும் வாசிப்பதும் தவறு. அதேபோல், “இவை அனைத்தும் அமைதிக்காக மட்டுமே” என்று கூறுவதும் முழுமையான விளக்கமாகாது.
ஏனெனில் ஒரு கண்டம் மிகப் பெரிய அளவில் ஆயுத உற்பத்தித் திறனை உருவாக்கி, வெடிமருந்துகளைச் சேமித்து, படைகளை விரைவாக நகர்த்துவதற்கான கட்டமைப்புகளை உருவாக்கி, வான்–ஏவுகணைப் பாதுகாப்பை விரிவுபடுத்தி, பல தளங்களில் போரை எதிர்கொள்ளத் தயாராகும்போது, அது எதிர்காலத்தின் மோசமான சூழல்களையும் கணக்கில் எடுத்துக்கொள்கிறது என்பதே தெளிவாகிறது.
ஐரோப்பாவின் முன்னால் நிற்கும் உண்மையான சோதனை இங்கேதான் இந்த ஆயுத மறுசீரமைப்பின் வெற்றி அல்லது தோல்வி தீர்மானிக்கப்படும். ஆயுதங்கள் அதிகரிப்பதிலா? அல்லது அவற்றைப் பயன்படுத்த வேண்டிய சூழல் வராதபடி அரசியல், தூதரகம், உரையாடல் ஆகியவற்றையும் வலுப்படுத்துவதிலா?
ஐரோப்பா தனது இராணுவத் திறனை மீண்டும் கட்டியெழுப்பலாம். ஆனால் அதனுடன் ரஷ்யாவுடனான நீண்டகால பாதுகாப்பு உரையாடலுக்கான வாயில்களையும் திறந்துவைத்திருக்க வேண்டியிருக்கிறது. NATOவை வலுப்படுத்தலாம். ஆனால் அதனுடன் ஐரோப்பிய நாடுகளுக்கிடையேயான மூலோபாய ஒருங்கிணைப்பையும் உறுதிப்படுத்த வேண்டியிருக்கிறது.
ஆயுத உற்பத்தியை அதிகரிக்கலாம். ஆனால் ஆயுதப் போட்டி கட்டுப்பாடற்ற நிலைக்குச் செல்லாமல் இருக்க ஆயுதக் கட்டுப்பாடு, நம்பிக்கை உருவாக்கும் நடவடிக்கைகள், தூதரகப் பாதைகள் ஆகியவற்றையும் மறக்க முடியாது. இல்லையெனில், அமைதியைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட ஆயுதங்கள், ஒருநாள் அமைதியையே அச்சுறுத்தும் காரணியாக மாறிவிடக்கூடும்.
முடிவாக…
ஐரோப்பா இன்று 1940களின் ஐரோப்பா அல்ல. ரஷ்யா–உக்ரைன் போர், அமெரிக்காவின் மாறிவரும் உலகளாவிய முன்னுரிமைகள், சீனாவின் எழுச்சி, தொழில்நுட்பப் போட்டி, சைபர் மற்றும் விண்வெளிப் பாதுகாப்பு ஆகியவை அதன் பாதுகாப்புக் கணக்கை மாற்றியுள்ளன. எனவே ஐரோப்பா ஆயுதம் ஏந்துவது என்பது வெறும் இராணுவச் செய்தி அல்ல.
அது ஒரு கண்டம் தனது எதிர்காலத்தைப் பற்றி கொண்டிருக்கும் அச்சத்தின் அளவையும், தன்னைத்தானே பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்ற புதிய அரசியல் உணர்வையும் வெளிப்படுத்துகிறது. ஆனால் வரலாறு ஐரோப்பாவுக்கு இன்னொரு பாடத்தையும் கற்றுக் கொடுத்திருக்கிறது.
ஆயுதங்கள் போரை வெல்லலாம். தடுப்பு போரைத் தவிர்க்கலாம். ஆனால் நிரந்தர அமைதியை உருவாக்குவது ஆயுதங்களால் மட்டும் முடியாது. அதனால் இன்று கேட்க வேண்டிய கேள்வி, “ஐரோப்பா மீண்டும் ஆயுதம் ஏந்துவதற்குத் தயாராகிறதா?” என்பது மட்டுமல்ல. அதற்கு அடுத்த கேள்வி இன்னும் முக்கியமானது.
“அந்த ஆயுதங்கள் ஐரோப்பாவின் அடுத்த போரைத் தொடங்குவதற்காகவா… அல்லது அடுத்த போர் தொடங்காமல் இருப்பதற்காகவா?” இந்த இரண்டு நோக்கங்களுக்கிடையிலான கோடு மிக மெல்லியது. ஐரோப்பாவின் எதிர்காலப் பாதுகாப்பும், உலக அமைதியின் எதிர்காலமும், அந்தக் கோட்டை அது எவ்வாறு கையாள்கிறது என்பதிலேயே தங்கியிருக்கிறது.