மேக்கேதாட்டு அணை தமிழக விவசாயிகளுக்குப் பயனளிக்கும்! - கர்நாடக முதல்வர் பேச்சு!

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மேக்கேதாட்டு திட்டம் தமிழகம் மற்றும் புதுச்சேரி விவசாயிகளுக்குப் பயனளிக்கும் என கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார்.

சென்னையை அருகே கோவளத்தில் இன்று (ஆக. 20) நடைபெறும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில், தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய் மற்றும் கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

காவிரி நீர் பகிர்வு மற்றும் மேக்கேதாட்டு திட்டம் உள்ளிட்ட விவகாரங்களால், தமிழகம் மற்றும் கர்நாடகம் ஆகிய மாநிலங்களின் எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. காவிரி ஆற்றின் மீது மேக்கேதாட்டுவில் அணையைக் கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு ஈடுபட்டு வருகிறது. இந்தத் திட்டத்தால், தமிழக விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என அஞ்சப்படுகிறது.

இந்த நிலையில், தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் பங்கேற்ற கர்நாடக முதல்வர் சிவகுமார், மேக்கேதாட்டு திட்டம் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் விவசாயிகளுக்குப் பயனளிக்கும் எனக் கூறியுள்ளார்.

இதுபற்றி, அவர் கூறியதாவது:

“காவிரி நீர் விவகாரத்தில் தீர்வுக்காண வேண்டுமென இந்தக் கூட்டத்திற்கு வரும்போது, மூத்த தலைவரும் ஆந்திரப் பிரதேச முதல்வருமான சந்திரபாபு நாயுடு என்னிடம் கூறினார். நான் உங்களுக்கு உறுதி அளிக்கிறேன் மேக்கேதாட்டு திட்டத்தின் மூலம் கிடைக்கும் ஒவ்வொரு துளி நீரும் தமிழகம் மற்றும் புதுச்சேரி விவசாயிகளுக்குப் பயனளிக்கும். உங்களுக்கு உதவி செய்ய எங்களுக்கு உதவுங்கள்” எனக் கூறியுள்ளார்.

முன்னதாக, தமிழகத்துக்கான நீரைத் திறந்துவிடுவது குறித்து காவிரி நீர் மேலாண்மை வாரியம் பிறப்பித்த உத்தரவைக் கடைபிடிக்குமாறு கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்