free website hit counter

மனிதம் மறந்த மதத்தினால்...!  

பார்வைகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

அழகு, அமைதி, நிறைந்த காஷ்மீரின் புகழ் பெற்ற பஹல்காமின் பைசரன் பள்ளத்தாக்கில், 22.04.25 செவ்வாய்கிழமை, அதிர்ந்து வெடித்த துப்பாக்கிகள், அந்தப் பிரதேசத்தில் மீண்டும் கண்ணீரையும், கதறல்களையும் பிரசவித்திருக்கின்றன.

கனவுகளுடனும், கற்பனைகளுடனும், சூழலின் அழகியலுடனும், ஒன்றித்து ஒன்றுமறியாதிருந்த சுற்றுலாப் பயணிகளை, மதத்தின் பெயர் சொல்லி மரணிக்க வைத்திருப்பது, மனிதம் மறந்த மதம் பிடித்த செயல். இது முற்றிலும் கண்டனத்துக்குரியது. எந்தவொரு காரணமும் சொல்லி, நியாயப்படுத்த முடியாத இழிசெயல்.

சம்பவம் நடந்த இடத்திலிருந்து வெளியான படங்களும், கானொளிகளும், நடந்த பயங்கரத்தின் தீவிரத்தையும், திட்டமிட்ட தாக்குதல் என்பதையும் தெளிவுபடுத்துகின்றன. இத் தாக்குதலுக்கான உரிமை கோரல் என்பது இதன் பின்னால் உள்ள அரசியலை உணர்த்துகிறது. அப்பாவிகளான பொதுமக்கள் மீதான வன்முறையால்  எந்த அரசியலையும் நிகழ்த்திவிடமுடியாது என்பது வரலாறு தொடர்ந்து கற்பித்து வருகிறது. ஆனால் கற்றுக் கொள்ளத் தவறுவதும், தவறுகளால் அழிவதுமே தொடர்ந்து வருகிறது.

நிராயுதபாணிகளின் ஆடைகழற்றி,  அடையாளம் கண்டு, உயிர்பறித்த செயல், அநாகரீகமானது மட்டுமல்ல, அராஜகமானது. இந்த இழிசெயலைப் புரிந்தவர்கள் எவராயினும், அவர் தம் மதத்திற்கு மட்டுமல்ல மனித குலத்துக்கே இழுக்கானவர்கள். இத்தகைய இழிசெயல் புரிந்தவர்கள் இனங்காணப்பட வேண்டியுதும், தண்டிக்கப்பட வேண்டியதும் அவசியமானது. அது அரசின் கடமைமட்டுமல்ல, மனிதம் நேசிப்பவர்கள் அனைவரது பொறுப்பாகும். 

உறவுகளை இழந்து தவிக்கும் ஒவ்வொருவருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள். உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலிகள் !

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula