free website hit counter

வெல்லப்பட முடியாத யுத்தமும் விரும்பத் தகாத விளைவுகளும் !

பார்வைகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

போர் என்பது எத்துனை கொடியது என்பதை உலகில் நடந்த பல்வேறு யுத்தங்கங்களும் படிப்பினையாகத் தந்திருந்த போதும், அதனைப் படிக்கத் தவறியவர்களாகவே அரசுகளும், அவற்றின் கொள்கைகளும், கூட்டுச் சேர்க்கைகளும் இருந்து வருகின்றன.

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் மிக உக்கிரமாக நடந்து கொண்டு இருக்கின்றது. இதனால் உக்ரைனைச் சேர்ந்த அப்பாவி மக்கள் உயிருக்குப் பயந்து வெளி நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்து வருகின்றார்கள். இது ஒரு வெல்லப்பட முடியாத யுத்தம் என்பது தெரிந்தும் நிகழ்த்தப்படுகிறது.

இதுவரை உக்ரைன் தரப்பில் 352 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 4,300 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டிருப்பதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. ஆனால் இது உண்மைதானா என்பதை ரஷ்யா உறுதிசெய்யவில்லை. இதுவரை உயிரிழப்பு தொடர்பாக எதையும் அதிகாரப்பூர்வமாகவும் அறிவிக்கவில்லை.

சுவிற்சர்லாந்தில் போருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களும் குழப்பங்களும் !

இந்தப் போர் உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்குமான போராக அடையாளப்படுத்தப்பட்டாலும், ஆனால் உண்மையில் இந்தப் போர் ரஷ்யாவுக்கும் ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க தலைமையிலான நேட்டோ நாடுகளுக்குமான போராகும் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. போர் உக்ரைன் மண்ணில் நடந்தாலும் ரஷ்யாவுக்கு எதிரான நாடுகளின் ஆயுத உதவி, பொருளாதார உதவி போன்றவை தாராளமாகவே வழங்கப்பட்டு வருகின்றது.

போரை நிறுத்தும் பேச்சுவார்த்தைகள் உளச் சுத்தியுடன் உண்மையாக நடத்தப்படவில்லை. பெரும்பாலான போர்களில் நடைபெறும் சமாதானப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவதும் இதனாற்தான்.

உக்ரைன் எல்லை நாடுகளை நோக்கி ஒடிவரும், போர் அகதிகள் விடயத்தில் கூட பாரபட்சம் காட்டப்படுவதாகவும், வெள்ளையர் அல்லாத அகதிகள் சில இடங்களில் தாக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

பிராந்திய அச்சுறுத்தல், நாஸிச எதிர்ப்பு என்பதை முன்னிலைப்படுத்தி போருக்கான தமது தரப்பு நியாயத்தை ரஷ்யத் தலைவர் முன்லைக்கின்றார். தமது சுதந்திரம் இறையாண்மை மீதான தாக்குதல் இது என எதிர்வாதம் செய்கிறது உக்ரைன். உணர்ச்சிகரமான காட்சிப்படங்களையும், செய்தித் தகவல்களையும், சமூகவலைத்தளங்களில் பரிமாறிக் கொள்வதன் மூலம் தமக்கான ஆதரவினைப் பெருக்கிக் கொள்ள உக்ரைன் முயல்கிறது. உண்மையில் இந்த யுத்தத்தில் ஈடுபடுபவர்கள் ஒருவகையில் ஒற்றையினத்தவர், சொந்தச் சகோதரர்கள் என்பது மற்றுமொரு துயரம்.

ரஷ்யா நீண்டகாலம் காத்திருந்து, தொடுத்திருக்கும் இந்த யுத்தத்தை எளிதில் அல்லது இலக்கினை அடையும் வரை நிறத்தப்போவதில்லை என்கிறது. அதேவேளை உக்ரைன் தரப்பில் உணர்ச்சிகரமான ஆட்சேர்ப்பும், உதவும் நாடுகளின் ஆயுத பொருளாதார பலமும், இந்தப் போரை எளிதில் முடிவுக்குக் கொண்டு வரும் என்று எதிர்பார்க்க முடியாத நிலையினைத் தோற்றுவித்துள்ளது.

இவ்வாறான நிலையில் போரின் எதிர் விளைவுகள் போர் நடைபெறும் நாடுகளில் மட்டுமின்றி, அண்டைநாடுகளிலும் இப்போதே பிரதிபலிக்கத் தொடங்கிவிட்டது. போர் நடைபெறும் பிரதேசங்களில் மட்டுமல்லாது உலகளாவிய ரீதியில் ஏற்படும் இதன் தாக்கங்களில் முக்கியமானவை உணவு மற்றும் எரிபொருள் என்பவற்றைக் குறிப்பிடலாம்.

உக்ரைன் போர் உலகளாவிய உணவு விநியோகத்தை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது. உலக கோதுமை ஏற்றுமதியில் நான்கில் ஒரு பங்கு மோதலில் ஈடுபட்டுள்ள இரு நாடுகள் யுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.

அதேபோன்று உலக சந்தையில் சூரியகாந்தி எண்ணெயில் பாதித் தேவையை பூர்த்தி செய்வது உக்ரைன். இந்த நாடுகளின் விளைநிலங்களில் விதைப்புக்கான இயந்திரங்களின் உழவு நிகழ வேண்டிய நேரத்தில், யுத்த பீரங்கிகளும், எறிகணைத்தாங்கிகளும் அணிவகுத்துச் செல்கின்றன. இதன் பாதிப்பு இன்னும் சில வருடங்களுக்கு ஏற்கனவே பற்றாக்குறையாகவுள்ள உலக உணவுச் சந்தையில் பெருந் தாக்கத்தினை நிச்சயம் ஏற்படுத்தும். குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் பெரும் உணவு நெருக்கடி அல்லது உணவுப் பொருட்களுக்கான விலை ஏற்றம் அதிகரிக்கும்.

விளைநிலங்களில் பயிரிடுதல் தவறுவது மட்டும் இதற்குக் காரணமல்ல, ரஷ்ய நிதிய அமைப்பிற்கு விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள், மெடிட்டரேனியன் ஷிப்பிங் கம்பெனி மற்றும் மெர்க்ஸ் போன்ற சில முக்கிய கொள்கலன் கப்பல் நிறுவனங்கள், ரஷ்ய துறைமுகங்களுடனான தொடர்புகளைத் துண்டிக்கிறது. இதனால் பல ஆப்பிரிக்க நாடுகளின் விளைபொருட்களுக்கான விநியோக பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.

இதேபோல் எரிபொருள் விலையேற்றம், கச்சாய் எண்ணைப் பரிமாற்றம் என்பனவற்றின் செலவு அதிகரிப்பு என்பது, எல்லாப் பொருட்களின் விலைகளையும், வாழ்வாதாரத்தையும் அசைத்துப் பார்க்கப் போகிறது என்பது அவதானிப்பாளர்கள் கணிப்பு.

ஐரோப்பிய நாடுகளில் குறைந்திருந்த அகதிகள் வருகை எண்ணிக்கையில் அதிகரிப்பு. அவர்களுக்கான பராமரிப்புச் செலவினங்களின் அதிகரிப்பு என்பன உள்ளூர் அரசியலிலும், மக்கள் மனங்களிலும் ஏற்படுத்தப்போகும் மாற்றங்கள். மற்றொருபுறம் போரின் வடுக்களுடனும், வலிகளுடனும் வரும் மக்கள் மனங்களின் குழப்பங்கள் கொந்தளிப்புக்கள் என பல எதிர்விளைவுகளை ஏற்படலாம்.

கோவிட் பெருந் தொற்றுக்குப் பின்னாக ஏற்பட்ட  நெருக்கடிகளில்  சுமுகநிலை தோன்றுவதற்குள்ளாகவே, போரின் விளைவுகள், உலகளாவிய ரீதியிலும், குறிப்பாக ஐரோப்பிச் சூழலிலும், பெருந் தாக்கத்தினைச் செலுத்தவுள்ளன.  இந்த எதிர்விளைவுகளின் அழுத்தங்களுக்கு, போருடன் தொடர்புறாத, போரை விரும்பாத, மக்களும் உள்ளாகவேண்டிய சூழல் உருவாகும்.  அவை வெல்லப்பட முடியாத இந்த யுத்தத்தின் விரும்பத் தகாத விளைவுகளாக அமையப் போகின்றன.

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula