free website hit counter

ஒரு மாதகால உக்ரைன் யுத்தம் - திருப்புமுனைகள் உண்டா..?

பார்வைகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

உக்ரைனில் ரஷ்ய ஆரம்பித்த போர் ஒரு மாதகாலத்திற்கும் மேலாக நீடிக்கிறது. பல மில்லியன் உக்ரேனியர்கள் வாழ்விடங்களை இழந்து, நாட்டிற்குள்ளும், அன்டைய நாடுகளுக்கும் இடம் பெயர்ந்துள்ளார்கள். ஆயிரக்கணக்கான பொதுமக்களும், நூறுக்கும் மேற்பட்ட குழந்தைகளும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கான உயிரிழப்புக்களும், போர்த்தளவாட அழிப்புக்களும் இடம்பெற்றுள்ளன. உக்ரைனின் முக்கிய நகரங்கள் பலவும் எரிந்தும், இடிந்தும், பாழடைந்த நகரங்களாகியுள்ளன.

இந்நிலையில் போர்களத்தில் சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அவற்றில் முக்கியமானது இருநாடுகளும், போர்நிறுத்தம் சமரசம் என்பவற்றுக்காக துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல்லில் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்திருப்பதாகும். இதற்கு முன்னரும் பேச்சுவார்த்தை முயற்சிகள் நடைபெற்ற போதும், இம்முறை பேச்சுவார்த்தை என்பதில் இரு தரப்பும் சற்று இறங்கி வந்துள்ளதை வெளிப்படுத்துகிறது. குறிப்பாக ரஷ்யா தலைநகர் கியேவ் முற்றுகையைத் தளர்த்தி, தனது படைகளை பின்னகர்த்தியுள்ளது. இதனை பேச்சுவார்த்தைக்கான தனது நல்லெண்ண அடையாளமாகவும் ரஷ்யத் தலைவர் புடின் அறிவித்திருக்கிறார். இதேபோல் உக்ரைன் ஜனாதிபதியும் யுத்த ஆக்ரோஷத்தினைக் குறைத்து சமரசத்துக்கான முனைப்பினைக் காட்டியுள்ளார். இவை சமகாலத்தில் போரினை அமைதிக்குக் கொண்டு வருவதற்கான அனுகூலங்களாக அவதானிகள் கருதுகின்றார்கள்.

நேற்று இஸ்தான்புல்லில் ரஷ்ய மற்றும் உக்ரைன் பிரதிநிதிகளுக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை முக்கியமான மற்றும் முக்கியமான முடிவுகளை கொண்டு வந்துள்ளது. போருக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான ஒப்பந்தத்தைத் தயாரிப்பது இனி விரைவாக நடைபெறலாம் என்று பேச்சுவார்த்தைகளின் முடிவில் ரஷ்ய பாராளுமன்றத்தின் கீழ் சபை மற்றும் டுமா பாதுகாப்புக் குழுவின் உறுப்பினர் ரியா நோவோஸ்டி அடல்பி ஷ்காகோஷேவ் கூறினார். உக்ரேனிய பிரதம மந்திரி ஜெலென்ஸ்கியும் பேச்சுவார்த்தை குறித்து திருப்தி தெரிவித்துள்ளார்.

ஆயினும் இது போரினை முற்றாக நிறுத்திவிடும் என்று எண்ணுவதற்கில்லை. "பேச்சுவார்த்தை மேடையில் இருந்து வரும் சமிக்ஞைகள் நேர்மறையானவை. ஆனால் நமது அழிவிற்காக தொடர்ந்து போராடும் ஒரு அரசை பிரதிநிதித்துவம் செய்பவர்களின் வார்த்தைகளை எவ்விதம் நம்புவது? " என உக்ரைன் தலைவர் சந்தேகமும் தெரிவித்துள்ளார். உக்ரைனுடனான பேச்சுவார்த்தையில் ரஷ்ய தலைமை பேச்சுவார்த்தையாளர் விளாடிமிர் மெடின்ஸ்கி கூறுகையில், "எவ்வாறாயினும், பேச்சுவார்த்தையின் விரிவாக்கம் என்பது போர் நிறுத்தத்தை குறிக்காது" என்று குறிப்பிட்டுள்ளார். ஆக இரு தரப்பும் போர்நிறுத்தம் குறித்த முழுமையான நம்பிக்கையைப் பரஸ்பரம் கொண்டிருக்கவில்லை. இது ஒரு யுத்த களத்தின் இயல்பான நிலைதான்.

ஆசியாவில் முதலிடம் பெற்ற இலங்கை - எதில் தெரியுமா?

சந்தேகங்களுடன் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தாலும், இருதரப்பும் பாரிய இழப்புக்களைக் கடந்த ஒருமாதகாலத்துக்குள் சந்தித்திருக்கின்றன. இது ஒரு வெல்லப்பட முடியாத யுத்தம் என்பதனை தெரிந்தும் நிகழ்கிறது என இம்மாத முதல்வாரத்தில் எமது பத்தியொன்றில் குறிப்பிட்டிருந்தோம். அதுபோலவே இந்த யுத்தத்தின் போக்கில் சந்தித்த இழப்புக்கள் மற்றும் இயலாமை தலைவர்களைப் பேச்சுவார்த்தையின் பக்கம் அழைத்து வந்திருக்கிறது எனலாம்.

ஆரம்பம் முதலே ரஷ்யப்படைகள் மிக நிதானமாகவே முன்னேறின. ஆனாலும் உக்ரைனின் கடுமையான எதிர் தாக்குல்களையும் அவை எதிர்கொண்டன என்பது மறுப்பதற்கில்லை. அதேபோல் ஒருமாதகாலத்துள் ரஷ்யப்படைகள் கனிசமான பகுதிகளைக் கைப்பற்றியுள்ளன என்பதும் கவின்க்கத்தக்கது. இதற்காக தமது படைத்தரப்பில் பலமான இழப்புக்களையும் சந்திக்க வேண்டியிருந்தது. உக்ரைனின் எதிர்த்தாக்குதல் கடுமையாகியபோது, ரஷ்ய தரப்பின் பதில் தாக்குதல்கள் பொது இடங்களைக் குறிவைத்து நிகழ்த்தப்பட்டது என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. குறிப்பாக மரியுபோல் மகப்பேற்று மருத்துவமனை மற்றும் மக்கள் அடைக்கலம் புகுந்திருந்த தியேட்டர் என்பவற்றின் மீதான தாக்குதல் குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளடதுடன் போர்க்குற்றங்களாகவும் பதிவாகியுள்ளன.

சோவியத் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியின் தொகுப்பாளர், இயக்குனர், பத்திரிகையாளர், போர் நிருபர் என லஷயாவில் நன்கு அறியப்பட்ட பன்முக ஆளுமையான, அலெக்சாண்டர் நெவ்செரோவ், மரியுபோலில் உள்ள மகப்பேறு மருத்துவமனை மீதான தாக்குதல் குறித்த செய்தி வெளியிட்டதற்காக, ரஷ்ய அரசாங்கம் அவரைக் கைது செய்ய உத்தரவிட்டது. வெளிநாடொன்றில் தங்கியிருக்கும் அவர், " உண்மை என்னவென்றால், ரஷ்யாவில் உக்ரைனில் நடந்த போரைப் பற்றிய எந்தவொரு உண்மையும், வெளிப்படையான மற்றும் நேர்மையானதாக இல்லை. இப்போது அவ்வாறு செய்து ஒரு குற்றமாகும், மேலும் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட சில 'முன்மொழிவுகளை' மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது. வேறு எந்தக் கண்ணோட்டமும் ஏற்றுக்கொள்ளப்படாது " எனக் குறிப்பிடுகின்றார்.

போர்ட்ஸ்மவுத் பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும் சர்வதேச உறவுகளின் பேராசிரியரான டாக்டர் பால் ஃப்ளென்லி குறிப்பிடுகையில், ரஷ்யாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான உறவுகளை இந்தப் போர் பாதித்துள்ளது. ரஷ்யா- ஐரோப்பிய ஒன்றிய உறவுகளில் சிறந்த நிபுணரான அவர் மேலும் குறிப்பிடுகையில், உண்மையில் இந்தப் போர் ஐரோப்பாவை ஒன்றிணைத்திருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியம் கணிசமான பொருளாதாரத் தடைகளை ஏற்றுக்கொண்ட வேகம் போருக்கு எதிரான விடையிறுப்பாகும்" எனக் குறிப்பிடுகின்றார்.

இதேவேளை உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் நடவடிக்கைகளும் கடுமையாக விமர்ச்சிக்கபட்டன. சுவிற்சர்லாந்தின் ஆர்காவ் மாகாணத்தின் மாவட்ட நீதிபதியாக இருந்த ஜியோர்ஜியோ மேயர்-மசுகாடோ நிதிச் சட்ட சிக்கல்களில் நிபுணர். உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை "அமெரிக்கா மற்றும் நேட்டோவின் அடிமை" மற்றும் "இரக்கமற்ற வெகுஜன கொலைகாரன்" என்று விமர்சித்திருந்தார்.

ஆரம்பத்தில் போரினை முன்னகர்த்துவதில் ஆர்வம் கொண்டிருந்த ஜெலென்ஸ்கியின் போக்கில் , நேட்டோ நாடுகள் படைகளைத் தராது, ஆயுத உதவிகளை மட்டுமே அள்ளித் தரும் எனச் சொன்னபோது ஏமாற்றமே எஞ்சியிருக்க வேண்டும். அதனை அவர் தனது உரைகளில் "ஐரோப்பிய நாடுகள் போருக்குப் பயங்கொள்கின்றன " என்ற தொனியில் கடுமையாகவே வெளிப்படுத்தினார். ஆயுதங்கள் இருந்தாலும், ரஷ்யாவை எதிர்கொள்ளும் படைபலம் குறித்த கேள்வியினை அத் தருணம் அவருக்கு உணர்த்தியிருக்க வேண்டும். அது முதல் பேச்சுவார்த்ததைகள் குறித்த இணக்கப்பாட்டினை அவரும் யோசிக்கத் தொடங்கினார்.

போர்க்களத்தின் இந்த யதார்த்தங்கள் இப்போது பேச்சுவார்த்தை மேசையில் இரு தரப்பையும் அமரவைத்திருக்கிறது. முதன்மை இலக்குகளாக உக்ரைனில் உள்ள ரஷ்ய மொழிபேசும் மக்கள் நிறைந்த டான்பாஸின் விடுதலை, கிரிமியாவின் நிலை மற்றும் செவாஸ்டோபோல் துறைமுகம் குறித்து ரஷ்யாவிடம் தனித்தனியான பேச்சுவார்த்தைகள், ரஷ்யா இல்லாமல் தனது பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கும் ராணுவப் பயிற்சிகளை உக்ரைன் நடத்தாது, என்பது போன்ற, நடவடிக்கையின் முதல் கட்டத்தின் முக்கிய நோக்கங்கள் அடையப்பட்டுள்ளன. உக்ரேனிய ஆயுதப் படைகளின் போர் திறன் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது எங்கள் முக்கிய கவனத்தையும் முயற்சிகளையும் மையப்படுத்த அனுமதிக்கிறது என ரஷ்ய தலைமை பேச்சுவார்த்தையாளர் விளாடிமிர் மெடின்ஸ்கி தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தைகள் வெற்றிபெறும் பட்சத்தில், உக்ரைன் ஜனாதிபதியின் கருதுகோளான சரணடைய விரும்பாத சமரசமும், ரஷ்ய ஜனாதிபதி புடினின் ரஷ்யாவின் பாதுகாப்பிற்குப் பங்கம் தராத உக்ரைனின் இராணுவக் கட்டமைப்பும், உடன்பாடுகளாக மாறுகையில், இரு தலைவர்களும் நேரில் சந்தித்துக் கைகுலுக்கி ஒப்பந்தக்களில் கையெழுத்திடுவார்கள் என எதிர்பார்க்கலாம். அது விரைவில் நிகழ வேண்டும். ஏனெனில் இந்தப் போரின் விளைவுகள் போர் நிகழாத பல ஐரோப்பிய நாடுகளின் மக்களது வாழ்நிலையையும் பாதித்து வருகிறது. குறிப்பாக ஐரோப்பாவில் ஏற்படக் கூடிய பெரும் உணவுப் பஞ்சம் குறித்த அச்சத்தினைத் தோற்றுவித்துள்ளது. இந்த நிலைகள் விரைவில் மாறவேண்டும்.

-4தமிழ்மீடியாவிற்காக: மலைநாடான்

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula