free website hit counter

காத்திருந்து பெற்ற வெற்றியின் பொறுப்பு !

பார்வைகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தமிழகத்தின் ஆட்சியை பத்து ஆண்டுகால காத்திருக்குப் பின் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) கைப்பற்றியிருக்கின்றது. கலைஞர் மு.கருணாநிதியின் மறைவுக்குப் பின்னர், திமுகவின் தலைமைப் பொறுப்பிற்கு வந்தவர் மு.க.ஸ்டாலின்.

கட்சியின் தலைவராக அவர் எதிர்கொண்ட முதலாவது சட்டமன்றத் தேர்தலிலேயே அறுதிப் பெரும்பான்மையுள்ள வெற்றியைப் பெற்றிருக்கின்றார். இதன்மூலம், தமிழக வரலாற்றில் திமுக ஆறாவது தடவையாக ஆட்சி அமைக்கின்றது. அதுபோல, திராவிடக் கட்சிகள் தமிழக ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர், எட்டாவது முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்கவுள்ளார்.

முன்னாள் முதலமைச்சர்கள் மு.கருணாநிதி, ஜெ.ஜெயலலிதா ஆகியோரின் மறைவுக்குப் பின்னரான தமிழக அரசியல் களத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மு.க.ஸ்டாலின் பெற்றிபெற்றதன் மூலம், தமிழக அரசியலின் புதிய ஆளுமைமிக்க தலைவராக அவர் தன்னை அடையாளப்படுத்தியிருக்கிறார். ஜெ.ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்குள் (அதிமுக) எழுந்த தலைமைத்துவப் பிரச்சினை நிர்வாக ரீதியில் தீர்க்கப்பட்டிருந்தாலும், நடைமுறை அரசியலில் இழுபறிகள் தொடர்ந்து வருகின்றன. அப்படியான நிலையில், திமுகவின் தலைமைத்துவத்தை பெரிய எதிர்ப்புக்கள் இன்றி கைப்பற்றிய மு.க.ஸ்டாலின், இந்தத் தேர்தல் வெற்றியின் மூலம் கட்சியை ஆட்சி பீடம் ஏற்றியிருக்கின்றார்.

மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 200 தொகுதிகளுக்கு அண்மித்த வெற்றியொன்றை திமுக அணி பெறும் என்று எதிர்பார்ப்புக்கள் வெளியிடப்பட்ட போதிலும், 159 தொகுதிகளையே திமுக அணி வென்றிருக்கின்றது. இது, திமுகவுக்கும் முதலமைச்சராகப் பொறுப்பேற்கப் போகும் மு.க.ஸ்டாலினுக்கும் மக்கள் சொல்லியிருக்கின்ற முக்கிய செய்தியாக கொள்ள முடியும். தொடர்ச்சியாக பத்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அதிமுகவுக்கு எதிராகவே இந்த வெற்றி திமுகவிடம் வழங்கப்பட்டிருக்கின்றது. அது, தொடர்ச்சியாக ஆட்சியில் இருப்பவர்களுக்கு எதிரான மக்களின் இயல்பான மனநிலையின் வெளிப்பாட்டின் அடிப்படையிலும் எழுவது. அதுதவிர அதிமுகவின் பாரதிய ஜனதாக் கட்சியுடனான (பாஜக) நெருக்கமும் தோல்விக்கான முக்கிய காரணமாக வெளிப்பட்டிருக்கின்றது. அதனைத் தவிர்த்துப் பார்த்தால், திமுகவை நோக்கிய பெரிய திரட்சிகள் எதனையும் மக்கள் காட்டவில்லை. மாறாக ஆளுமையுள்ள ஆட்சிக்கான ஆதரவினை மக்கள் வழங்கியிருக்கிறார்கள். தாங்கள் வழங்கிய ஆணையை மீறினால் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள்ளேயே ஆட்சியை பறித்தெடுப்போம் என்கிற ஒரு எச்சரிக்கைச் செய்தியையும் சேர்ந்தே திமுகவிடம் தமிழக மக்கள் வழங்கியிருக்கிறார்கள்.

திமுக ஆட்சிகள் மீது கடந்த காலங்களில் எழுந்த அதிருப்திகள், குறிப்பாக குடும்பத் தலையீடுகள், கட்டப்பஞ்சாயத்துத் தோரணையிலான அமைச்சர்கள், மண்டலத் தலைவர்கள், மாவட்டச் செயலாளர்களின் செயற்பாடுகள் என்பன மீண்டும் நிகழாதவாறு மு.க.ஸ்டாலின் பார்த்துக் கொள்ள வேண்டும். அது மக்களிடம் இன்னும் இன்னும் நம்பிக்கையை வளர்க்க உதவும்.

தொடர்ச்சியாக இரண்டு சட்டமன்றத் தேர்தல்களில் தோல்வியடைந்து எதிர்க்கட்சி வரிசையில் செயற்பட்ட திமுக, அந்தக் காலங்களில் ஆளுங்கட்சியின் ஊழல்கள் தொடர்பில் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வந்திருக்கின்றது. அப்படியான நிலையில் கடந்த காலங்களில் முன்வைத்து வந்த ஊழல் குற்றச்சாட்டுக்களை ஆதாரங்களின் அடிப்படையில் நிரூபிப்பதற்கான முயற்சிகளை எடுப்பதோடு, ஊழல் குற்றசாட்டுக்கள் தங்கள் மீது எழாதவாறும் பார்த்துக் கொள்ள வேண்டும். கடந்த காலங்களில் ஊழல் குற்றச்சாட்டுக்களில் சிக்காத நிர்வாக ஆளுமையுள்ள தலைவர்களை அமைச்சர்களாக முன்னிறுத்தி தமிழகத்திற்கான புதிய பாதையை மு.க.ஸ்டாலின் அமைக்க வேண்டும்.

சுதந்திரத்துக்குப் பின்னரான இந்தியாவில் சமத்துவம், சகோதரத்துவம், கல்வி, உள்ளக வளர்ச்சி என்று எப்போதுமே முன்னோக்கிய பயணத்தில் முன்னிலையில் தமிழகம் இருந்து வந்திருக்கின்றது. அந்தத் தமிழகத்தின் அரசியலுக்குள் மதவாதம் எனும் அடிப்படைவாதத்தை உட்புகுத்தி பின்னோக்கி இழுக்க சில சக்திகள் முயற்சிக்கின்றன. அந்தச் சக்திகளின் எண்ணங்களில் தீமூட்டி, மத நல்லிணக்கத்தைப் பேணி கலகங்கள் அற்ற அமைதியான தமிழகத்தை முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் உறுதிப்படுத்த வேண்டும்.

கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக் காலத்தில் ஆட்சியைப் பெற்றுக்கொள்ளும் மு.க.ஸ்டாலின், அந்த நெருக்கடிகளை சரியான திட்டமிடல்களோடு கடக்க வேண்டும். இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனா மரணங்கள் கொத்துக் கொத்தாக நிகழ்ந்து வருகின்றது. அவ்வாறானதொரு சூழல் தமிழகத்தில் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதுதான் அவரின் முதல் பணியாக இருக்க வேண்டும்.

தேர்தல்களில் கட்சிகள் வெல்வதும் தோற்பதும் இயல்பு. ஆனால், அந்தத் தேர்தல்கள் மக்களின் வெற்றிகளை அடிப்படையாகக் கொள்ள வேண்டும். அந்த வெற்றிக்கான பணிகளில் ஆட்சிப் பொறுப்பை ஏற்பவர்கள் ஈடுபட வேண்டும். இப்போது அந்தப் பணியை தமிழக மக்கள் மு.க.ஸ்டாலினிடம் வழங்கியிருக்கிறார்கள். அவர் அந்தப் பொறுப்பை தலையாய பணியாக நிறைவேற்ற வேண்டும். அவரின் புதிய நம்பிக்கையான பயணத்துக்கு எமது மக்களின் சார்பில் வாழ்த்துக்கள்.

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula