free website hit counter

தமிழகச் சினிமாதான் உலகத் தமிழர்களின் அடையாளமா ?

Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

றொட்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் இம்முறை மூன்று மலேசியப் படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இதில் இரு படங்கள் மலேசியாவில் இருந்து நேரடியாகவும், மற்றையது சிங்கப்பூர் தயாரிப்பில் மலேசியக் கதைக்களத்தினையும் கொண்டு வெளிவந்திருந்தன.

இவற்றிலே 'La Luna' , 'Fire on Water' ஆகிய இருபடங்களையும் பார்த்திருந்தோம்.  இந்த இரு படங்களும் பிடித்திருந்த போதும்,  "நீர் மேல் நெருப்பு" (Fire on Water) படத்தின் கதைபேசும் கருப்பொருள் காரணமாக எம்மை வெகுவாகக் கவர்ந்திருந்தது. இந்தக் கதையின் தாக்கம் தரும் மெய்பொருளை, அதன் வலியினை, மலேசிய சினிமா வரலாற்றினை சற்றேனும் தெரிந்திருந்தமையால் நம்மால் வெகுவாக உணர  முடிந்தது. 

நூற்றாண்டு காலத் தமிழ் சினிமா வரலாற்றில், 75 ஆண்டுகாலத் தொடர்ச்சி மலேசியா இலங்கை போன்ற நாடுகளுக்கும் உண்டு. ஆனால் உலகளாவிய ரீதியில், தமிழ்சினிமாவாக அடையாளங்காணப்படுவது, தமிழகச் சினிமாக்களே. தென்னிந்திய வர்த்தகத்  தமிழ்ச்சினிமாவின் தாக்கம், இலங்கை மலேசிய, தமிழ்சினிமா உலகத்தை மட்டுமல்ல, தமிழகத்தில் சினிமா எனும் கலைத்துவம் புரிந்த படைப்பாளிகளுக்கும் பெரும் சவாலாகத்தான் உளள்ளது. தமிழகச் சினிமா இயக்குனர்கள் ராம், வெற்றிமாறன், விநோத், போன்ற ஒரு சில இயக்குனர்களால் மட்டுமே, இதனை மீறி தனித்துவமான சினிமாப் படைப்புக்களைச் சர்வதேச திரைப்பட விழாக்களில் தமிழ்ச் சினிமாவாகத் திரையிட முடிகிறது. அவர்களும் இதற்கான பெருஞ் சவால்களைச் சந்திக்கின்றனர் என்பதை அவர்களது உரையாடல்களின் போது தெரியவும் முடிகிறது. 

 சினிமாவுக்குள் சினிமா எனும் கதைசொல்லல்பாணியில், எடுக்கப்பட்டிருந்த "நீர் மேல் நெருப்பு" (Fire on Water) திரைப்படம், இத் திரைப்படவிழாவில் 'Harbour' எனும் பிரிவில் சுமார் 70 க்கும் அதிகமான படங்களுடன் திரையிடப்பட்டது. துல்லியமான இரண்டு மணிநேரத்தில், மலேசியத் திரைப்படப் படைப்புலகம் குறித்த ஒரு விரிவான பார்வையைத் தந்தவாறே நகர்கிறது. அங்கு நடைபெறும் ஏமாற்றங்கள், துரோகங்கள் , என்பவையெல்லாம் தாண்டி, வெற்றிக்கான பயணத்தைத் தொடரும் ஒரு இளம் படைப்பாளியின் ஏமாற்றங்கள், அவற்றினால் ஏற்படும் சலிப்பு ,விரக்தி என்பவற்றைப் பார்வையாளனுக்கும் கடத்தியவாறே கதையைப் பயணிக்க வைத்ததில் இயக்குனர் சஞ்சய் ஜே பெருமாள் வெற்றி கண்டிருக்கின்றார். 

தமிழகச் சினிமா உலகத் தமிழர்களின் அடையாளமா ?தமிழக வணிகச் சினிமாவை எதிர்நோக்கில் பார்க்காமல், அதேவேளை மலேசியச் சினிமாவின் தனித்துவ எழுச்சியை விரும்புகின்ற அவர், தனது நோக்கில் எவ்வளவு தெளிவும், புரிதலும், உள்ளவராக இருப்பதை  நேரில் பேசும் போது அறிய முடிந்தது. அவரது அந்தப் புரிதலின் தெளிவு படத்திலும் பளிச்சிடுகின்றது. தனித்துவச் சினிமாகவும், அதேவேளை வர்த்தக நோக்கிலும், வெற்றிதரக் கூடிய சினிமாக்களை உருவாக்க வேண்டும் என்பது குறித்தும், அதற்கான பொருளாதார வளங்கள் குறித்த புரிதல், அனுகல் என்பவை குறித்த நம்பிக்கையும் அவரது பேச்சில் தெரிகிறது. அந்த வகையில் மலேசியத் திரையுலகில், இயக்குனர்  சஞ்சய் ஜே பெருமாள் நம்பிக்கை நட்சத்திரமாகத் தெரிகிறார்.  அவரது படைப்பான "நீர் மேல் நெருப்பு" (Fire on Water) திரைப்படமும் அந்த நம்பிக்கையைத் தருகிறது.

உலக அரங்கில் இந்தியச் சினிமாவாக வங்காள, மலையாளப் படங்கள் மட்டுமே அறியப்பட்டிருந்த நிலையில், தற்போது தமிழகத்தின் தமிழ்படங்கள் அறிமுகமாவது போல், இலங்கைச் சினிமாவாக சிங்களப்படங்கள் மட்டுமே உலக அரங்கில் அறியப்பட்டிருக்கும் நிலைமாறி, தமிழ்படங்களும் அறியப்பட வேண்டும் என்பதே எமது விருப்பு. அதேபோன்று மலேசியத் தமிழர்களின் அடையாளமாக மலேசியச் சினிமா இருக்கவேண்டும் எனும் இயக்குனர் சஞ்சய் ஜே பெருமாள் அதற்கான உழைப்பினையும் முயற்சியைம் தொடர்ந்து வழங்கி வரும் நம்பிக்கைப் படைப்பாளியாக தன்னை அடையாளப்பதுகின்றார்.  அதனாற்தான் றொட்டடாம் சர்வதேச திரைப்படவிழாவில், தனது குறும்படம் ஒன்றின் மூலம் அறிமுகம் பெற்ற அவர், 17 ஆண்டுகளின் பின் தனது "நீர் மேல் நெருப்பு" (Fire on Water) திரைப்படத்தின் மூலம் இரண்டாவது தடவை முழுநீளத் திரைப்படத்தின் இயக்குனராகப் பங்குபெற முடிந்திருக்கிறது.

- 4தமிழ்மீடியாவிற்காக : மலைநாடான்


அவரைச் சந்தித்து உரையாடிய போது, பகிர்ந்து கோண்ட கருத்துக்களைக் கானொளியில் காணலாம்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula