free website hit counter

றொட்டடாம் திரைப்படவிழாவும் சில திரை அனுபவங்களும் - 01

Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மேற்கு ஐரோப்பாவின் மையப்பகுதியை  நீர்வழிப் பாதையால் இணைப்பதால், "ஐரோப்பாவின் நுழைவாயில்" எனும் புனைபெயரால் அழைக்கப்படும் ரோட்டர்டாம் நெதர்லாந்தின் தலைநகர் ஆம்ஸ்ராடாமுக்கு அடுத்த இரண்டாவது பெரு நகரம்.

இரண்டாம் உலகப் போரின் அனைத்து வலிகளையும், சோதனைகளையும் தாங்கிய வண்ணம், தைரியம் மற்றும் வலிமை என்பவற்றால், தமது தாயகத்தின் விடுதலையை பெற்றுக் கொண்ட மக்கள்,  இரண்டாம் உலகப் போரின்போது ஏறக் குறைய முழுமையான அழிவுகண்டிருந்த தங்கள் நகரைப் புணரமைத்தார்கள்.

1950 களில் இருந்து 1970 கள் வரை படிப்படியாக மீண்டும் கட்டப்பட்ட இந்த நகரை வானளாவிய கட்டிடங்களால் மட்டுமன்றி, எதிர்காலச் சிந்தனையுடனும் நவீன நகரமாக மாற்றி அமைத்தார்கள். இதன் காரணமாக, ஐரோப்பாவில் மோட்டார் கார் பாவிக்க முடியாத கடைதெருவான Lijnbaan  1953ம் ஆண்டிலேயே திறக்கப்பட்டது. இன்று அந்தச் சாலையில், உலகின் பிரபலமான தயாரிப்பு நிறுவனங்களின் காட்சி அறைகள் நிறைந்திருக்கின்றன. 

கலாச்சாரப் பெருமைகள் நிறைந்த ரொட்டடாமுக்கு கடந்த அரைநூற்றாண்டாக  பெருமை சேர்க்கிறது ஆண்டு தோறும் இங்கு நடைபெறும் சர்வதேசத் திரைப்படவிழா. ஐரோப்பாவின் முக்கிய திரைப்படவிழாவாகவும், உலகின் கவனம் பெற்ற திரைப்படவிழாவாகவுமுள்ள இத்திரைப்படவிழாவின் இலட்சினையான புலிமுக விருது சினிமாத்துறையில் மிகப் பெறுமதியான கௌரவமாக மதிக்கப்படுகிறது. 

கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழ்த்திரைப்படங்கள் மீதும் கவனம் கொண்டிருக்கும், இத் திரைப்படவிழாவின் அங்கீகரிக்கப்பெற்ற பத்திரிகையாளனாக நாமும் கலந்து கொண்டன இந்த ஆண்டு நடைபெற்ற 53வது பதிப்பில், 86 நாடுகளிலிருந்து, 425க்கும் மேற்பட்ட திரைப்படங்கள், 1000க்கும் மேற்பட்ட காட்சிகள் கண்டன.  இவற்றுள் 12க்கும் அதிகமான  இந்தியத்திரைப்படங்கள், 3 மலேசியத் திரைப்படங்கள், என்பவையும் அடங்கும். 
உலகெங்கனுமிருந்து சுமார் 2 இலட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்களும்,  2000க்கும் அதிகமான சினிமாக் கலைஞர்கள், மற்றும் பத்த்திரிகையாளர்கள் கலந்து கொண்ட இத் திரைப்படவிழாவின் சிறப்புக்கள் மற்றும் நாம் பார்த்திருந்த சில முக்கிய படங்கள் குறித்த நமது பார்வை என்பனவற்றைத் தரலாமெனக் கருதுகின்றோம். ஆனால் அது ஒரு பதவில் சாத்தியமில்லை என்பதால், தொடராகச் சில பதிவுகளில் தரவிழைகின்றோம். 

சினிமா மீது ஏன் உங்களுக்கு இத்தனை மோகம் எனக் கேட்டால், தகவல் தொழில் நுட்பம் நிறைந்த நம் சமகாலத்தில், அது ஒரு வலிமையான ஊடகம். வணிகச் சினிமா மசாலா மாயைக்குள் சிக்குண்டு கிடப்பவர்களுக்கு, அல்லது அவ்வாறான புரிதல் உள்ளவர்களுக்குச் சினிமா ஒரு கேளிக்கைக் கூத்து. ஆனால் அதன் தகமையும் வலிமையும் புரிந்தவர்களுக்கு மனிதம் பழகும் வாழ்க்கை அனுபவம். சர்வதேச திரைப்படவிழாக்கள் எல்லாம் மானுட நேசிப்பு நிறைந்தவை என்று சொல்லி விடமுடியாது. றொட்டடாம் சர்வதேச திரைப்பட விழா மனிதம் பேசும் களம். அதன் பங்கேற்பாளர்களும், பார்வையாளர்களும், மானுட நேசிப்பு நிறைந்தவர்கள். அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு,  இம்முறை ரொட்டடாம் திரைப்படவிழாவில் பார்வையாளர் தேர்வில் விருதினை வென்ற படம், Green Border. 

1948ல் போலந்தில் பிறந்த Agnieszka Holland ன் இயக்கத்தில் பெல்ஜியத் தயாரிப்பாகனவும், போலந்து, பிரான்ஸ், செக் குடியரசு ஆகிய நாடுகளைக் கதைக்களமாகவும் கொண்ட Green Border ஏற்கனவே சென்ற ஆண்டு வெனிஸ் திரைப்படவிழாவில், நடுவர்களின் சிறப்பு விருதினை வென்று, பலரது கவனத்தையும் பெற்ற படம். 75 வயது பெண்ணான Agnieszka Holland  ஏற்கனவே  பலவிருதுகளுக்குச் சொந்தக்காரி. இவரது பல படைப்புக்கள் உலகளாவிய ரீதியில் வெற்றிகளைக் குவித்தவை. துறைசார்ந்த தகமையாளரான இவரது இயகத்தில் வெளிவந்து வெற்றிகண்டிருக்கும்  Green Border ரொட்டடாமில் திரைப்படவிழாவில் காட்சிப்படுத்தப்பட்ட நாளிலிருந்தே பார்வையாளர்களின் விருப்பத் தேர்வில் முன்னிலையில் இருந்தது.  விழா ஆரம்பமாகி ச் சில தினங்களின் பின்னரே நாம் நேரில் கலந்து கொண்டிருந்தமையால்,   பத்திரிகையாளர் காட்சியில்  அப்படத்தினைக் காண முடியவில்லை.  அதன் பின் பார்வையாளர் காட்சியில் காண முயன்றால் எல்லாக் காட்சிகளிலும் அனுமதிச் சீட்டுக்கள் முன் பதிவு செய்யப்பட்டுவிட்டன. ஆனாலும் அந்தப் படம் பேசும் வலியை நாம் உணரமுடியும். 

ஐரோப்பாவிற்கு ஏதிலிகளாகப்  போலந்து வழியாக வரும் சிரியா, ஆப்கானிஸ்தான், அகதிக் குடும்பங்கள் எல்லைகளில் சந்திக்கும் பயங்கரங்களும், துயரங்களுமே Green Border பேசும் கதைக்கரு. 90களில் ஐரோப்பாவிற்குத் தரைமார்க்கமாக ஏதியாக வந்த பலரும் சந்தித்திருக்கக் கூடிய துயர அனுபவங்களின் தொகுப்புதான் இக்கதை.  ஆனால் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இன்னமும் இந்தத் துயரம் தொடர்கிறதே என்பதுதான் இத் திரைப்படம் எழுப்பும் சிந்தனை. ஐரோப்பாவிற்கு அகதிகள் ஏன் வருகிறார்கள்? எவ்வாறு வருகின்றார்கள்? எத்துணை துயரங்களைச் சந்திக்கின்றார்கள் என்பதனை, சராசரியான பார்வையாளனுக்கு காட்சிப்படுத்தும், ஊடகப் பரப்புரையாக இயக்குனர் Agnieszka Holland, Green Border ஐப் படைத்துள்ளார் என்பதனை அப்படத்தின் கருப்பு வெள்ளைப்படங்கள் கண்களுக்குள் கடத்திச் சென்றுவிடுகின்றன. இந்தப்படம் இன்னும் சிலகாலத்தில் ஐரோப்பியத் திரையரங்களுக்கு வரக் கூடும். அல்லது ஏதாயினும் ஒரு OTT இணையக் காட்சியகத்தில் வெளிவரலாம். அப்போது தவறாது பார்த்து விடவேண்டும்  எனக் குறித்து வைத்துக் கொள்ளவேண்டும். ஏனென்றால் Green Border  எங்களின் கதையும் கூட...

இந்தத் தொடரின் அடுத்த பதிவில், எங்களின் கதைசொன்ன நம்மவர் சினிமாபற்றிப் பார்க்கலாம்....

-4தமிழ்மீடியாவிற்காக: மலைநாடான்

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula