சொல்லும் செயலும் நேர்மையாக இருப்பதென்பது மனித மான்பின் உச்சமெனச் சொல்லலாம். இந்த மான்பு எல்லா மாந்தர்க்கும் தேவையானதெனினும், மக்கள் சமூகத்தினை வழிநடத்தக் கூடியவர்களாக இருப்பவர்களுக்கு மிகவும் அவசியமானது.
அத்தகைய நேர்மையும் பொறுப்பும் படைப்பாளர்களுக்கும் இருக்க வேண்டும். அப்படியிருந்தால்தான் அவர்களது படைப்பு, உண்மை பேசுவதாக இருக்க முடியும்.
தற்போதைய வணிகப் பொருளாதார சார்ப்புச் சமூகத்தில் அருகி வருகின்ற சமகாலத்தில், இந்தப் படைப்பு நேர்மையும் குறைந்தே வருகின்றது. இவ்வாறான நிலையில், நடந்து முடிந்த ஆஸ்கர் விருது விழாவில், சிறந்த சர்வதேசத் திரைப்படத்திற்கான விருது, சிறந்த ஒலியமைப்பிற்கான விருது, என இரு விருதுகள் வென்ற பெற்ற ஜெர்மன் மொழித் திரைப்படமான The Zone of Interest படத்தின் இயக்குனர், ஜோனதன் க்ளாசெர் (Jonathan Glazer) அவ் விழாவில் ஆற்றிய உரையின் மூலம் தன்னை நேர்மைமிகு படைப்பாளியாக வெளிப்படுத்தியுள்ளார்.
அப்படியென்ன அவர் பெரிதாகப் பேசிவிட்டார்..?
ஜேர்மன் சர்வாதிகாரியான ஹிட்லரி நாசிப்படுகொலை முகாமான ஆஷ்விட்ஸில் மிக நீண்ட காலம் பணியாற்றிய தளபதி ருடால்ஃப் ஹோஸின் குடும்பத்தை மையமாகக் கொண்டது.
1940 முதல் 1943 க்கு இடையில் ஆஷ்விட்ஸ் வதை முகாமை நடத்திய தளபதி ருடால்ஃப் பணிக்காலத்தில், 1 மில்லியன் யூதர்கள் அம்முகாமில் கொல்லப்பட்ட சூழ்நிலையில், ருடால்ஃப்பின் குடும்பம் அம்முகாமுக்கு அருகே எத்துனை மகிழ்ச்சியாகவும் வசதியாகவும் வாழ்ந்தார்கள் என்பதே படத்தின் கதை. இதனை யதார்த்தமாகக் காட்சிப்படுத்திய இயக்குனர் க்ளோசர் ஒரு யூத இனத்தைச் சேர்ந்தவர். அப்படியென்றால் தன் இனத்தின் மீதான அழிவினை அவர் சிறப்பாகப் பதிவு செய்திருப்பார்தானே. அதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது என்றே எண்ணத் தோன்றும். ஆனால் அவர் ஒரு இனம் சார்ந்த படைப்பாளியாக இல்லாது, மனிதம் சார்ந்த படைப்பாளியாக இருந்தார் என்பதை நிரூபித்தது அவரது ஆஸ்கர் விருது ஏற்புரை.
என்ன சொன்னார் ?
"மனிதாபிமானம் மிக மோசமாக எங்கு செல்கிறது என்பதை எங்கள் படம் காட்டுகிறது. இது நமது கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் வடிவமைத்துள்ளது. இஸ்ரேலில் அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் குழுவினரால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட இஸ்ரேலியர்களும் சரி, அல்லது காஸா மீது மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படும் இஸ்ரேலிய அரச தாக்குதல்களில் பலியாகும் பாலஸ்தீனியர்களும் சரி, அனைவரும், இதனை எப்படி எதிர்ப்பது?. நாம் எப்போதும் மற்றவர்களை நம்மை விட குறைவாகவும், நம்மிடமிருந்து வேறுபட்டவர்களாகவும் பார்க்கிறோம். எப்படியோ, படிப்படியாக, அது அராஜகத்திற்கும், அழிவுக்கும் வழிவகுக்கிறது." என்றார்.
மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெருசலேமில் உள்ள பாலஸ்தீனியர்கள் 1967 முதல் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் கீழ் வாழ்ந்து வருகின்ற நிலையில், தற்போது காசா மீது இஸ்ரேல் தொடுத்துள்ள மனிதாபிமானம் அற்ற போரினை, ஒரு யூதராக இருந்த போதும், உலகின் கவனம் பெற்ற ஒரு முக்கியமான அரங்கில், எதிர்த்துக் குரல் கொடுத்ததின் மூலம், தான் ஒரு நேர்மையான படைப்பாளி, மனிதாபிமானம் நிறைந்த மனிதன் என்பதை நெஞ்சுரத்தோடு வெளிப்படுத்தினார்.
நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி,
வஞ்சனை சொல்வாரடீ! – கிளியே!
வாய்ச் சொல்லில் வீரரடி.
கூட்டத்தில் கூடிநின்று கூவிப் பிதற்றலன்றி,
நாட்டத்தில் கொள்ளாரடீ! - கிளியே!
நாளில் மறப்பாரடீ
அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும்
உச்சத்திற் கொண்டாரடீ – கிளியே
ஊமைச் சனங்களடீ!
எனச் சிறுமை மிகு மக்களைப் பார்த்துச் சீற்றம் கொண்டான் பாரதி.
"அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும், உச்சத்திற் கொண்ட ஊமைச் சனங்கள் " எனப் பாரதி சாடிய மானிடர் போல் அல்லாது உண்மை மிகு மனிதனாக உலகின் பார்வையில் உயர்ந்து நிற்கின்றார் ஜோனதன் க்ளாசெர் (Jonathan Glazer).
- மலைநாடான்