free website hit counter

பாசத்திற்குரிய பாரதி ராஜாவுக்கு...!

Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பாரதிராஜா என்றதும் முதலில் அவருடைய குரல்தான் என் மனதுள் ஒலிக்கும். ’என் இனிய தமிழ் மக்களே.. உங்கள் பாசத்துக்குரிய இந்த பாரதிராஜா’ என கரங்களை உயர்த்தும்போதே ஒரு கலைஞன் மண்ணின் கதையோடு வந்திருக்கிறான்,

அதில் ரத்தமும் சதையுமாகத் தமிழ் நிலத்தின் வாழ்க்கை இருக்கும் என்று 6ஆம் வகுப்பு பயிலும் பால்யத்திலேயே உணர வைத்தவர். அவர் திரைக்கதை எழுதி, டைரக்‌ஷன் மேற்பார்வை செய்து, இயக்குநர் பாரதிராஜாவாகவே நடித்திருந்த ‘கல்லுக்குள் ஈரம்’தான் அவருடைய படங்களில் நான் முதன் முதலில் பார்த்த படம். பல படங்களில் அவர் இயக்குநர் பாரதிராஜாவாகவே வந்திருந்தாலும் அவரை ‘இதயம்’ படத்தில் ஒரு காட்சியில் இயக்குநர் கதிர் பயன்படுத்தியது, நாயகனின் காதல் வலிக்கு மட்டுமல்ல; அவனால் வலியைச் சுமந்து திரையரங்கிலிருந்து வெளியேறும் பார்வையாளர்களுக்கும் ஓர் ஒத்தடம்போல் அந்தக் குரல் ஆறுதல் அளிக்கும். 

பாரதிராஜா என்கிற இயக்குநர் தமிழ் சினிமாவுக்கு அளித்த பங்களிப்பு குறித்து இன்றைய 2கே மற்றும் ஜென்z தலைமுறைக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், பாரதிராஜா என்கிற நடிப்புக் கலைஞனை அவர்கள் நன்றாகவே அறிந்திருப்பார்கள். அவர்களுக்கு ‘பாண்டிய நாடு’ திரைப்படத்தின் மூலம் பாரதிராஜா என்கிற ஒரு அற்புதமான, வெகு இயல்பான நடிப்புத்திறன் கொண்ட கலைஞனை அறிமுகப்படுத்தினார் இயக்குநர் சுசீந்திரன். அதன்பிறகு நித்திலன் சுவாமிநாதனின் ‘குரங்கு பொம்மை’ அந்த மகா கலைஞனுக்கு நடிப்புக்கான ஒரு தேசிய அங்கீகாரத்தைப் பெற்றுக் கொடுத்திருக்க வேண்டிய பங்களிப்பு. ‘பத்மஸ்ரீ’ பெற்ற அந்த மகா கலைஞனுக்கு நடிப்புக்கான அங்கீகாரம் அப்படத்தின் வழி கிடைக்காமல்போனது என்னளவில் பெரும் மனக்குறை.  

ஒரு நடிகராக ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில் ஸ்டேஷன் மாஸ்டராக ‘அன்கிரெடிட்டட்’ துணைக் கதாபாத்திரத்தில் வருவார். ஒரே ஒரு குளோஸ் அப் ஷாட் தான். காதலர்கள் ஊர்க்காரர்களிடமிருந்து தப்பித்து ரயிலேறிச் செல்லும் போது பச்சை கொடி அசைத்து ரயிலை ஊரைவிட்டு அனுப்புவார். அல்லிநகரம் என்கிற கிராமத்திலிருந்து வந்து, தமிழ் சினிமாவை நீராட்டி, புதுச்சட்டை சூட்டிய இந்தக் கலைஞன், கிராமத்தின் பழமைவாத அழக்குகளை கழுவியது மட்டுமல்ல; தமிழ்ப் பண்பாட்டின் ஆன்மாவும் தமிழர்களின் வாழ்க்கையும் கிராமத்தில்தான் இருக்கிறது என்பதைத் தன்னுடைய பெரும்பாலான கதாபாத்திரங்கள், காட்சியமைப்புகள் வழியாக காட்சிப்படுத்திக்கொண்டேயிருந்தார்.

அவரது நடிப்புப் பயணம் குறைந்த படங்களின் வழியாகவே சிறந்து விளங்கியது. அதிலும் வடிவுக்கரசியுடன் ‘நிறம் மாறும் உலகில்’ ஆந்தாலஜி படத்தில் ராயப்பனாக அவரது நடிப்பு சிறந்து விளங்கியது. எல்லாருக்கும் ‘திருச்சிற்றம்பலம் சீனியர்’ ஆக தனுஷின் தாத்தாவாக, பெண்கள் இல்லாத நிலையில், வேலைகளைப் பிரித்துக்கொள்ளும் ஆண்கள் வீட்டின், ஓய்வுபெற்ற, மகிழ்ச்சியான, தாத்தாவை அவ்வளவு இயல்பாக ஞாபகப்படுத்தியிருந்தார் அப்பா பாரதிராஜா. மகனுக்கும் பேரனுக்கும் இடையில் அல்லாடும் அவரின் உடல் மொழியும் பேரனுக்கு வாழ்வைப் புரிய வைக்கும் அவரது பாவனைகளையும் நடிகர் திலகம் உயிரோடு இருந்து பார்த்திருந்தால் உச்சி முகர்ந்திருப்பார். 

இப்போது அவர் திருச்சிற்றம்பலத்தில் தன் மகனோடு ஓய்வு கொள்ளட்டும்.. அஞ்சலிகள் !

- 4தமிழ்மீடியாவிற்காக: தேவா

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula