சூரிச் சைவத் தமிழ்சங்கம் வருடந்தோறும் நடத்தும் அற்றார் அழிபசி தீர்த்தல் நிகழ்வும், தாயக உணவுக் கண்காட்சியும், 02.06.24 ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
சூரிச் சைவத் தமிழ்சங்கத்தின் முப்பதாண்டு முத்துவிழாவில் முழுநிறைவினைத் தந்த மூன்று விடயங்கள் குறித்துப் பார்க்கலாம்.
தமிழர்கள் தனித்துவமான திறமையானவர்கள்தான். ஆனால் சேர்ந்தியங்குதல், கூட்டுழைப்பு என்பவற்றில் இயல்பாக எழுதிடும், தனிமனித (Ego )அகங்காரங்களினால் பல இடங்களிலும் தோற்றுப் போகின்றார்கள் என்பது யதார்த்தம். இந்த அகங்காரம் களைதலுக்கு வேண்டியது தெளிவான சிந்தனையும் சிறப்பான நோக்கமும். தாயகத்தில் அற்றாரை நிற்போரின் அழிபசி தீர்க்கும் உதவிப் பணிகளுக்கான ஒன்றுபடுதல் எனும் நோக்கத்தினை சூரிச் சைவத் தமிழ்ச் சங்க உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தெளிவாகப் புரிந்து கொண்டியங்கியதால், விழாவின் ஒவ்வொரு கூறுகளிலும், அவர்களது கூட்டுழைப்பின் சிறப்பு வெளிப்பட்டது.
விழாவிற்கு வருவோரை வாசலில் வரவேற்பது முதல், உபசரித்து வழியனுப்புவது வரை, ஒன்றித்த செயற்பாடு நிறைவாகவே வெளிப்பட்டதை முதலில் குறிப்பிடலாம். இதே போன்று, நாம் பார்த்த கலைநிகழ்வுகளில், குழுநிலைச் செயற்பாட்டால் சிறந்த மற்றுமிரு நிகழ்வுகளையும் பார்க்கலாம்.
சூரிச் திருக்கோணேஸ்வர நடனாலய மாணவிகளின் 'சிவதாண்டவம்' நாட்டிய நாடகம், குழுநிலைச் செயற்பாட்டில் நிகழ்ந்த அருமையான ஆடல் நிகழ்வாக இருந்தது. நெறியாள்கை செய்த ஆசிரியர் திருமதி.மதிவதனி சுதாகரன் அவர்கள் தவிர்க்கமுடியாத காரணத்தினால் சமூகந்தரவில்லை. ஆனால் அவரது மாணவிகள் எந்தவித பிசிறும் இல்லாமல், வெகு நேர்த்தியாக ஆடலை நிகழ்த்தினார்கள். நடனத்தின் இறுதியில், பார்வதி பரமேஸ்வரர் திருக்கல்யாணக் காட்சியில், ஆடலில் பங்கு கொண்ட அத்தனை பிள்ளைகளும் நிறைத்து நின்ற காட்சி அற்புதமான, பிரம்மாண்டமான காட்சியாக இருந்தது. அந்தப் பிரம்மாண்டத்தின் பின்னால் இருந்தது அவர்களது குழுநிலைச் செயற்பாடு.
இளையவர்களின் வாத்திய இசைநிகழ்வும், அவ்வாறான கூட்டிசைவுக்கு எடுத்துக்காட்டாக இருந்தது. ஆறு இளைஞர்கள் அருமையாக கர்நாடக சங்கீத கீர்த்னையில் தொடங்கி, பிரபலமான சினிமாப்பாடல்களை இசைத்து, தாயகப் பாடல்களில் நிறைவு செய்தார்கள்.நிறைந்த அனுபவமிக்க கலைஞர்கள் போல், இலயித்து, இரசித்து வாசித்தார். அவர்களிடம் ஈகோ இல்லை. இசைமீதான இலயிப்பு மட்டுமே இருந்தது. அது அவர்களின் வாத்தியங்களில் இருந்து, இரசனைமிகு இசையை பார்வையாளர்களுக்கு எடுத்து வந்தது.
ஏதிலிகளாக எம்மவர்கள் புலம் பெயரத் தொடங்கிய வேளைகளில், ஐரோப்பியர்கள் மத்தியில் கலையும், பண்பாடும் மிக்கச் சமூகமாக எம்மை அடையாளப்படுத்தியவை, அப்போது மேற்கொள்ளப்பட்ட கலாச்சார நிகழ்வுகள். அதனை 90களின் தொடக்க காலத்தில், புலம் பெயர் தேசங்களில் மேற்கொள்ளப் பாடுபட்டவர்கள் அறிவர் அதன் சிரம வலிகளை. அவையெல்லாம்வற்றையும் தாண்டி எடுக்பட்ட அர்ப்பணிப்பான செயற்பாடுகளின் அறுவடைதான், இன்றைய இளையவர்களின் இத்தகைய கூட்டுழைப்பு. இவற்றின் பின்னால் பல ஆசிரியர்களின் நேர காலம் பாராத நீண்ட பணிகளும், தமக்குக் கிடைக்காததது தன் பிள்ளைகளுக்குக் கிடைக்க வேண்டும் எனும் பெற்றோர்களின் பேரவாவும் நிறைந்திருக்கின்றது. அதில் மகிழ்ந்து திளைக்கிறது எம்மவர் மனம்.
- மலைநாடான்