free website hit counter

வடிவேலுவின் மறு பிரவேசப் பின்னணி!

Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மீம்களின் வழியே நம்பர் ஒன் நகைச்சுவை நடிகராக இருந்து வரும் வடிவேலுவின் தனித் தன்மை எதில் அடங்கியிருக்கிறது?

ஏழை, பணக்காரர் என யாராக இருந்தாலும், சிங்கத்தின் வாயில் தலையைக் கொடுத்ததுபோன்ற வாழ்வின் அவலமான தருணங்களில் சிக்கும் மனிதர்களின் உணர்வுநிலை என்பது ஒன்றுதான். வாழ்வின் நெருக்கடியான தருணங்களில் மனதில் வந்துபோகும் இந்த உணர்வுநிலை வடிவேலு நடித்த அவல நகைச்சுவையாக இன்னும் கொண்டாடப்படுகிறது என்பதுதான் அவருடைய தனித்தன்மை. அதனால்தான் சமூகத்தின் அனைத்து தரப்பினரும் வடிவேலுவின் அவலமான திரைத் தருணங்களுடன் சட்டென்று ‘கனெக்ட்’ ஆகிவிடுகிறார்கள். விஜயகாந்த் அதிமுகவும் கூட்டணி வைக்கப்போய், அவருடன் ஏற்பட்ட புகைச்சல் காரணமாக (விஜய்காந்திடம் எடுபிடி வேலைகள் செய்யும் உதவியாளராக வேலை செய்து பின்னர், சினிமாவில் உயர்ந்தவர் வடிவேலு) திமுகவுக்கு தேர்தல் பிரச்சாரம் செய்யப்போனார் வடிவேலு. மேடைகளில் விஜயகாந்தை கண்ணியம் இல்லாமல் திட்டினார். ஆனால், திமுக தோற்று அதிமுக ஆட்சிக்கு வந்ததால், பட வாய்ப்புகளை வடிவேலு இழந்தார். இது தமிழ் சினிமா நகைச்சுவைக்குப் பெரும் பின்னடைவுவாக மாறிப்போனது.

ஆனால், காலம் வைகை புயலுக்கு வேறு பல வாசல்களைத் திறந்துவிட்டு அவருடைய ரசிகர்களைக் காப்பாற்றியிருக்கிறது. கவுண்டமணி – செந்தில் இணை தொடங்கி, பல்வேறு நகைச்சுவை நடிகர்கள், தங்கள் காலத்தைவிட அதிக அளவில் மக்களைச் சென்றடைந்தது தொலைக்காட்சிகள் மூலம்தான். பெயர் தெரியாத படங்களில்கூட அவர்கள் நடித்திருந்த நகைச்சுவை காட்சிகள், அடுத்த தலைமுறை ரசிகர்களை கவர்ந்தது. அதேபோல், இன்றைய இணைய யுகத்தில் மீம்ஸ் முதல் வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ் வரை நீக்கமற நிறைந்திருக்கும் மக்களின் கலைஞனாக வலம் வந்துகொண்டிருக்கிறார் வடிவேலு.

அடுத்து புத்தாயிரம் பிறந்தபோது நிகழ்ந்த யூடியூ சமூகக் காணொளியின் வருகை வடிவேலுவின் திறனை வேறு வகையில் வெளிப்படுத்தும் காரணியாக அமைந்தது. உதாரணமாக, ‘வின்னர்’ படத்தில், கட்டத்துரையுடன் கடுமையாக மோதும் கைப்புள்ளயின் வசனங்கள், wwf மோதல் காட்சிகளுக்குப் பொருத்தமாக டப்பிங் செய்யப்பட்டு வெளிவந்தபோது இணையவாசிகள் அதைக் கொண்டாடினர். அடுத்து, தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற காட்சிகள், பாடல் காட்சிகளில், வடிவேலுவின் காட்சிகள் இணைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட வீடியோக்களும் புகழ்பெறத் தொடங்கின.

பின்னர் பத்து ஆண்டுகள் கடந்தோடு 2010 வாக்கில் மீம்களின் யுகம் தொடங்கியபோது, அந்தக் கலாச்சாரத்துக்கு மிகப் பொருத்தமான முகமாக வடிவேலு அமைந்து போனார். அன்று தொடங்கி இன்று வரை கடந்த 11 ஆண்டுகளில் சமகால அரசியல், சமூக நிகழ்வுகள் வடிவேலுவின் நகைச்சுவை காட்சிகளை நினைவுபடுத்தும் வகையில் அமைந்தது ஒரு மாபெரும் கலைஞனுக்கு அமைந்த காலப் பொருத்தம். இன்று எவ்வளவு தீவிரமான அரசியல் நிகழ்வாக இருந்தாலும் அதை மீம்ஸ் வடிவில் கலாய்த்துவிட தமிழர்களின் ஆயுதமாக வடிவேலுவின் முகம் இருக்கிறது. எந்த உச்ச நடிகரின் படம் வந்தாலும், அதன் வடிவேலு வெர்ஷனுடைய வருகைக்காகக் காத்திருப்பது தமிழர்களின் வாடிக்கையாகிவிட்டது.

சாப்ளின் தொடங்கி தலைசிறந்த நகைச்சுவைக் கலைஞர்கள் முன்னிலைப்படுத்திய உணர்ச்சிகளில், கழிவிரக்கம், சுய எள்ளல், கையாலாகாத நிலையில் வெளிப்படும் விரக்தி போன்றவை வடிவேலுவின் புகழ்பெற்ற காட்சிகளுடன் இணைக்கப்படும்போது அவை உடனடியாகப் பார்வையாளர்களிடம் சிரிப்பை வரவழைக்கின்றன. ‘நம் நிலைமையும் அதுதானே’ என்பதைப் பலரும் உணர்ந்து சிரிக்கிறார்கள். மீம்களில் பயன்படுத்தப்படும் காட்சிகள் பார்வையாளர்களிடம் நொடி நேரத்தில் புரிதலை ஏற்படுத்த வேண்டும். அப்படியென்றால், அந்தக் காட்சிகள் ஏற்கெனவே எல்லா தரப்பையும் சென்றடைந்திருக்க வேண்டும். தமிழ்ச் சமூகத்தின் அன்றாட வாழ்க்கையில் தவிர்க்கவே முடியாத இடத்தை அடைந்திருக்கும் வடிவேலு தமிழ் சினிமாவுக்கு மறுபிரவேசம் செய்வதன் பின்னணியில் லைகா நிறுவனம் அவருக்கு கைகொடுத்திருக்கிறது. அரசியல் காட்சிகள் மாறி திமுக ஆட்சிக்கு வந்துவிட்டதால். வடிவேலுவை தன்னுடைய தயாரிப்பில் உருவாகும் ஐந்து படங்களில் நடிக்க வைக்க, ஒரு படத்துக்கு 20 லட்சம் வீதம் 1 கோடி ரூபாயை முன்னதாக அவருக்கு ஊதியமாக கொடுத்திருக்கிறது. வடிவேவும் தன்னுடைய மறுபிரவேசத்தை ‘தனக்கு நல்லகாலம் பிறந்துவிட்டதாக வருணித்திருக்கிறார்’. வடிவேலு இனி தொலைக்காட்சிகள், மீம்களில் மட்டுமல்ல, திரையில் இழந்த இடத்தையும் எளிதாக மீட்டுக்கொள்வார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

- 4தமிழ்மீடியாவுக்காக மாதுமை

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula