free website hit counter

அதனினும் கொடிது...!

Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கொடிது கொடிது வறுமை கொடிது. அதனினும் கொடிது இளமையில் வறுமை. அதனினும் கொடிது ஆற்றொணாத் தொழுநோய் என்றார் ஓளவை. அதனினும் கொடிதானது பற்றிய ஒரு அனுபவப் பகிர்வு இது.

பனிக்காலத்தை அண்மிக்கும் மாதங்கள் நோர்வேயில் மிகக் கொடூரமானவை. சூரியன் தலைகாட்டத்தயங்கும் இந்த காலப்பகுதியில் விரைவில் இருள் சூழ்ந்துவிடும். தெருவிளக்குகளும் மனிதர்கள் நடமாடும் வீடுகளிலும், கட்டிடங்களில் தெரியும் மட்டுப்படுத்தப்பட்ட வெளிச்சமுமாக கழியும் காலமிது.

இலங்கையில் தீபாவளி, கார்த்திகை விளக்கீடு போன்ற பண்டிகைகளுக்கு பல ஐதீகங்கள் கூறப்பட்டாலும் இருள் நிறைந்த மாதங்களாக ஐப்பசி, கார்த்திகை இருப்பதும் காரணமாக இருக்கும் என்றே நான் நினைக்கிறேன். ஐரோப்பா மற்றும் ஏனைய நாடுகளில் கார்த்திகை மாதத்தின் முதலாவது ஞாயிற்றுக்கிழமை இறந்த ஆத்மாக்களுக்கான தினமாக அநுஷ்டிக்கப்படுகிறது. அன்றைய தினம் பெரும்பாலானவர்களின் கல்லறைகளை விளக்குகள் அலங்கரிக்கும். இலங்கையில் கார்த்திகை விளக்கீட்டின் போது வீட்டைச் சுற்றி பந்தங்கள் எரிப்பதுடன், சில கோவில்களில் சொக்கப்பனை எரித்தல் என்றொரு விழாவும் கொண்டாடப்படுவதுண்டு.

இதெல்லாம் ஏன் எனக்கு இன்று நினைவுக்கு வருகிறது என்று தெரியவில்லை. இன்று நான் நாளைக்கு வேலைக்கு செல்ல வேண்டிய புதிய இடத்தைத் தேடிச் சென்று கொண்டிருந்தேன். பெருந்தொற்று காரணமாக தற்காலிக இடமாற்றம் என்று எங்களுக்கு கூறப்பட்டது. வீட்டிலிருந்து நடந்து செல்லும் தூரம்தான் என்று கூகுல் காட்டியது, அந்த வீதியின் பெயர் எனக்கு அறிமுகமானதாக இருக்கவில்லை, முப்பத்தைந்து நிமிடங்கள் நடக்க வேண்டும் என்று காட்டியது. நடந்து பார்ப்போம் என்று சென்றால் பாதை ஒரு குளத்தைச் சுற்றிசுற்றிச் சென்றதே தவிர அலுவலக கட்டிடத்தைக் காணவில்லை. வருவோர் போவோரும் என்னுடன் சேர்ந்து தேடி கடைசியில் கூகுல் பிழையாக வழிகாட்டுகிறது என்ற முடிவுக்கு வந்த போது, தானும் அந்த வழியால் தான் செல்ல வேண்டும் என்று ஒருவர் கூடவே நடந்து வந்தார், இடத்தை இருவருமே சேர்ந்து கண்டுபிடித்தோம். நன்றி சொல்லி பிரிந்து கொண்டேன். கூகுல் அரைமணித்தியாலம் என்று காட்டிய இடத்திற்காக அரைநாள் பொழுதை செலவிட்டு விட்டு வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தேன்.

எனது வீடு சமூகத்தால் கைவிடப்பட்டவர்கள், போதையால் பாதை விலகியவர்கள், வீதிகளை வீடாக வரித்துக் கொண்டவர்கள் என பல்வகையான மனிதர்களைக் கொண்டமைந்த குடியிருப்பில் அமைந்துள்ளது. மதியம் இரண்டு மணியைத் தாண்டிவிட்டது. வீட்டில் சாப்பிட என்ன இருக்கிறது என்று யோசித்துக் கொண்டு நடக்கும் போது ஒரு மனிதர் என்னை இடைமறித்தார்.
" உங்களுக்கு நேரம் இருக்கிறதா ?" என ஆரம்பித்தார் அந்த வயதான மனிதர்.
நான் " உங்களுக்கு என்ன உதவி செய்யலாம் " என எனது தொழில் ரீதியான தொனி உரையாடலில் எட்டிப்பார்த்தது.
நான் அவரைச் சந்தித்தது ஒரு நடைபாதையில், எம்மைக் கடந்து நாயுடன் உலாச்செல்வோர், குழந்தையொன்றை வண்டியில் வைத்து தள்ளிச் செல்லும் அம்மா, அருகே கூச்சலிட்டு குதூகலமாக விளையாடும் குழந்தைகள், புறாக்கள் கூட்டமாக தானியங்களைப் பொறுக்குவதை வாய்க்குள் விரலை வைத்தபடி நின்று வேடிக்கைபார்க்கும் குழந்தையென அந்த இடம் மதியப்பொழுதை அழகுபடுத்திக் கொண்டிருந்தது.

"எனது வீட்டை வக்யூம் கிளீன் பண்ணித் தரமுடியுமா, குனிந்து வக்யூம் கிளினரைப் பாவிக்கும் போது தலைக்குள் ஏதோ செய்கிறது" என்றும் தான் வசிக்கும் இடத்தின் பெயரைக் குறிப்பிட்டார் அந்த முதியவர்.
நாளைக்கு வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற மனநிலையில் வேலைக்கு போக வேண்டிய இடத்தை தேடியலைந்தாலோ என்னவோ நான் இன்னமும் வேலையில் உரையாடும் பாணியிலேயே பதிலளித்தேன்.
"வீட்டில் நாளாந்த வேலைகளுக்கு உதவி வழங்குவதற்கான ஏற்பாடுகள் எங்களிடம் இருக்கின்றனவே" என கூறியபடி அவரது வசிப்பிடத்திற்கு பொறுப்பான அலுவலகத்தை தேடுவதற்காக எனது கைத்தொலைபேசியை எடுத்தேன்.

"அவ்வாறான உதவிகளைப் பெறுமளவுக்கு நான் சுகயீனமானவர் அல்ல என்று நகரசபை அலுவலகம் கூறுகிறது" என்றார் அவர். நான் எனது தேடல் முயற்சியைக் கைவிட்டேன். அவர் தனது வசிப்பிடத்தின் பெயரை மீண்டும் கூறினார். அவர் கூறும் இடம் நான் வசிக்கும் நகரசபை பிரிவுக்குள் தான் அடங்குகிறது என்பதை நான் புரிந்து கொண்டேன்.

"நீங்கள் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவரா ?" என அவர் உரையாடலைத் தொடர்ந்தார்
"இல்லை, நான் இலங்கைச் சேர்ந்தவர்" என்று கூறினேன்.
"அப்படியா, பறவாயில்லை. இலங்கையைச் சேர்ந்தவருடன் அறிமுகமாவதும் சந்தோசமானதே" என்றார், அடுத்தடுத்த கேள்விகளையையும் அவரே கேட்டார்.
"உங்களுக்கு குடும்பம் இருக்கிறதா, பெரிய குடும்பமா, உங்களுக்கு நேரம் இருக்குமா?" என்று தொடர்ந்தபடி அவர் தனது கைத்தொலைபேசியை வெளியே எடுத்தார். அவரது கைகளில் இருந்த்து கைத்தொலைபேசி பாவனைக்குவந்த காலத்தில் வந்த நோக்கியாவின் முதலாவது தொலைபேசியாக இருக்க வேண்டும்.
"உங்களுடன் அறிமுகமானதையிட்டு மகிழ்ச்சி" என்ற அவர் ஏதோ கூற முற்பட்ட அந்தவேளை எங்களுக்கிடையே சைக்கிள் பழகும் குழந்தையொன்று குறுக்கிட்டது. "உங்களைச் சந்தித்தது மகிழ்ச்சியே.."எனக் கூறிவிட்டு வீட்டை நோக்கி நடந்தேன்.
உரையாடிக்கொண்டிருக்கும் மனிதர்களுக்கு நடுவே சைக்கிள் ஓடக் கூடாது, நீங்கள் சைக்கிள் ஓட கற்றுக் கொள்ளும் போது விதிமுறைகளையும் கூடவே கற்றுக் கொள்ள வேண்டும் என தந்தையொருவர் தனது பிள்ளைக்கு கூறும் குரல் பின்னால் கேட்டது.

நான் வீட்டுக்கு வந்து விட்டேன். மனசு ஏதோ சரியில்லாத மாதிரி இருந்தது. அந்த மனிதருக்கு நான் உதவி செய்திருக்க வேண்டும். ஆம் வயதான காலத்தில், குளிரும் இருளுமாக இருக்கும் இந்தக்காலப்பகுதியில் வீட்டில் தனியே வசிக்கும் ஒரு முதியவரால் வீட்டு வேலைகள் எல்லாவற்றையும் செய்வது அவ்வளவு சுலபமானதல்ல. வீட்டைக் சுத்தப்படுத்துதல், குனிந்து வக்யூம் கிளினரைப் பாவிப்பது இவைகள் மிகவும் கஸ்டமான வேலைகள், அவரது வீட்டிற்குப் போய் உதவி செய்யாவிட்டாலும், குறுக்கால் சைக்கிள் விட்ட பிள்ளை போன பிறகாவது நின்று அந்த வயோதிபருடன் உரையாடி, அவரது மன ஆறுதலுக்காகவாவது நாலு வார்த்தை கதைத்திருக்க வேண்டும். நான் வேலைக்குப் போகிறேன், எனக்கு நேரம் கிடைக்குமோ தெரியாது ஆனால் உங்களுக்குப் பொறுப்பான நகரசபை அலுவலகத்தில் பேசி அல்லது தனியார் உதவி அமைப்புக்கள் மூலம் உங்களுக்கு உதவி கிடைக்க ஏற்பாடு செய்கிறேன் என்றாவது சொல்லியிருக்க வேண்டும். ஆம் இவற்றை நான் செய்திருக்க வேண்டும். இந்த உணர்விலிருந்து நான் விடுபட இன்னும் நாலு கிலோ மீற்றர் நடக்க வேண்டும்.

இன்று தந்தையர் தினம், இவருக்கு ஒரு மகனோ மகளோ இருந்திருந்தால், பிள்ளைகளும் தந்தையும் தொடர்பையும் நேசத்தையும் பேணியிருந்தால் இன்று இவருக்காக ஒரு பூங்கொத்தையும் சிறியதொரு பரிசுப்பொருளை வண்ணக்காகிதத்தில் பொதியாக்கி வழங்கியிருப்பார்கள் அல்லது ஒரு சிறந்த உணவகத்தில் மதிய உணவை உண்டு கூடி மகிழ்ந்திருப்பார்கள்.

முதுமையில் தனிமை கொடிது !

- 4தமிழ்மீடியாவிற்காக: தங்கம்

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula