free website hit counter

உப்பும், தங்கமும், உழைப்பில் ஒன்றே...!

Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

உப்புக்கும் தங்கத்துக்குமான பணப்பெறுமதியில் மலைக்கும் மடுவுக்குமான தூரம்.  ஆனால் இவற்றைப் பெறுவதற்கான உடலுழைப்பு என்னவோ சமாந்தரமான இருப்புப் பாதைதான் என்பதை உணர்த்தின, இந்த (2025) ஆண்டு சுவிற்சர்லாந்து நியோன் சர்வதேச ஆவணத் திரைப்படவிழாவில் பார்க்க முடிந்த இரு படங்கள். 

Within the Sun (சூரியனுக்குள்) 28 நிமிடங்கள் திரையில் விரியும் ஒரு ஈரானியக் குறுந்திரைப்படம். 

ஆங்கிலம் மற்றும்  பிரெஞ் மொழிகளிலான உப தலைப்புக்களுடன் பார்ஸி மொழி மூலத்திலான படம்.  ஆனால் இப்படத்திற்கு எந்த மொழியோ வசனங்களோ தேவையற்ற காட்சிப்பதிவுகள்.  தெற்கு இரானின் ஹோமுஸ் தீவிலுள்ள உயரிய மலைகளில் படிந்துறையும் உப்புப்பாளங்களை வெட்டி எடுத்து அள்ளி வரும், ஆறு பெண்களின் செயல்களை, அவர்களது கடின உழைப்பின் வாழ்வியலைக் காட்சிப்படுத்தியவாறே சுற்றி வருகிறது கமெரா. 


அங்கு வீசும் ஊதற்காற்று, மலைகளில் உப்பை மட்டுமல்ல,  பார்க்கும் பார்வையாளனையும் குளிரில் உறைய வைப்பதை உணர வைக்கும் ஒலிக்கோப்பு. உயிர் வாழ்தலுக்காக, வயோதிபத்தையும் தாண்டி, கரடுமுரடான மலை அடுக்குகளில்,  உழைக்கும் பெண்களின் கடினத்தை, தோல்களின் சுருக்கமும்,  கைகளின் உறுதியும், நெருக்கமாகக் காட்டும் நமக்குப் பதற்றம் தொற்றுகிறது. ஆனால் உழைப்பில் உறுதியான அந்த இரும்புப் பெண்கள், நக்கலும் நையாண்டியுமாக வாழ்ந்து கடப்பதைக் காண்கையில், அவர்கள் உழைப்பில் வரும் உப்பின் மீதான மதிப்பின் அளவு நம்மிடம் மேலும் கூடுகிறது. இந்த ஆவணப்படத்தினை பிரதியாக்கம் , ஒளிப்பதிவு, என்பனவற்றுடன் தயாரித்திருக்கும் இயக்குனர் Sepideh Jamshidi Nejad, படத்தின் இறுதியில் தன் பாட்டியின் வாழ்வியல் இது எனத் தெரிவிக்கையில் உப்புக்கல்லினை வைரக் கல்லாகக் காணத் தோன்றுகிறது.

Within the Sun படம் குளிரையும், உறைதலையும் உணர்த்துகையில், மற்றைய படமான La Montagne d’or (தங்க மலை) சகாராவின் வெப்பத்தினையும் புழுதியினையும் நம்முள் வீசியவாறே இன்னுமொரு உழைப்பின் துயரத்தினைப் பதிவு செய்கிறது.

இயக்குனர் Roland Edzard அவர்களின் பிரதியாக்கத்திலும் ஒளிப்பதிவிலுமாக வெளிவந்திருக்கும் பெல்ஜியம், பிரான்ஸ்  தயாரிப்பான La Montagne d’or  (Mountain of Gold -தங்கமலை ) பிரெஞ், ஆங்கில உபதலைப்புக்களுடன்,  85 நிமிடங்கள் திரையில் விரியும் த்ரில்லர்  வகையான  Hausa மொழியிலான ஆவணத் திரைப்படம்.  

உலகின் பெறுமதிமிக்கத் தங்கத்தினை, மலைக்குன்றுகளை அகழ்ந்து தோண்டி, சுரங்கங்கள் அமைத்துத் தேடும் கறுப்பின உழைக்கும் மக்களின் வாழ்வியல் களத்தின் கதை இது.  பார்வையாளர்களைச் சகாராவின் மனல் புயலுக்குள்ளும், வெப்பத்துக்குள்ளும், மெல்ல இழுத்துச் செல்லும் ஒளிப்பதிவு. மலைகளிலும், மணல்படுக்கைகளிலும், சீறிப்பாயும், மோட்டார் சைக்கிள் பயனங்களுடன் தொடங்கும், திரைப்படம், படிப்படியாக எம்மை சகராவின் செங்கற்பாளங்களிடையே பயணிக்க வைக்கின்றது. மலைகளைத் தோண்டி, ஒளிரும் கற்களை உடைத்து, மேலெடுத்து, அரைத்து, தண்ணீரில் கழுவிக் கரைத்தால் சிறு துகளாக மின்னும் தங்கத்தைச் சேகரித்து, உருக்கிக் சின்னஞ்சிறு கட்டிகளாக சேமிக்கின்றார்கள். நம்மால் ஒற்றைவரியில் எழுதிவிட முடிகின்ற இந்த உழைப்பு, மிக நீண்டதும் கடினமானதும், உயிராபத்து நிறைந்ததுமாகும். நிறைந்த உழைப்பு, மட்டுப்படுத்தப்பட்ட உணவும், நீரும், அவற்றைப் பெறுவதற்கான கடினமும், எனத் தோன்றும்  காட்சிகள், தங்கம் குறித்து  நாம் அறிந்திராத கதைகளைச் சொல்கின்றன. 

மலைநிலங்களை களமாகக் கொண்டதும், அதீதமானதும் , அபாயமானதுமான  உடல் உழைப்பினைச் சித்தரிக்கும் இந்த இரு படங்களிலும், நவீன தொழில் நுடபம் தந்த  செல்லிடத் தொலைபேசி என்னும் சாதனம், அந்த உழைப்பாளர்களின்  இருப்பினையையும், தேவைகளையும், தொலைதூரம் கடந்து அவர்களது  உறவுகளுக்கு தெரிவிக்கையில், அந்த அறிவியற் சாதனத்தின் பெறுமதி தெரிகிறது.  அதனை வெறும் பொழுதுபோக்குச் சாதனமாக மட்டும் பாவிக்கும் சமூகத்தின் மீது வெறுப்பும் எழுகிறது.

உழைப்பின் கடினத்தில் உப்புக்கும் தங்கத்துக்கும் பெரும் வித்தியாசமில்லாத போதும், கரைந்து காணமற் போவதில் உப்பின் பெறுமதி குறைந்துவிடுகிறதோ என எண்ணத் தோன்றுகிறது. ஆனால் இந்த இரு படங்களையும் பார்த்தால், உப்பையோ, தங்கத்தையோ உழைப்பின்  மரியாதையுடன் நோக்கத் தோன்றும்.

- 4தமிழ்மீடியாவிற்காக: மலைநாடான்

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula