இன்று ஏப்பிரல் 22 சர்வதேச பூமி ( EARTHDAY ) தினம். 2025ம் ஆண்டு புவிநாள் கொண்டாடத் தொடங்கிய 55 வருடம். இதனைக் கருத்திற் கொண்டு இந்த ஆண்டுக்கான புவிநாள் கருப்பொருள், நமது சக்தி, நமது கோள் (Our Power, Our Planet ) எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தப் பூமி இயக்கத்தின் சக்தி யாராலும் தடுக்க முடியாதது. புவி இப்போது வெப்பமாகின்றது என்பது உலகிற்கான ஒரு பேராபயம். இதனை தடுக்க முடியாது என்றால், அதனை ஆக்கத்திற்கான சக்தியாக மாற்றிட வேண்டும். இதனடிப்படையில், உலக வெப்பமயமாதலை, புதுப்பிக்கத்தக்க ஆற்றலாக மாற்றும் வழிகளை முன்னிறுத்தி ஆலோசிப்பதே பயனாகும் என்கிறது EARTHDAY.ORG .
அதன்வழியில் புவிவெப்பமயமாதலைப் பயன்படுத்துவடன், சூழல் மாசுறுதல் நீங்கி, நம் அனைவருக்கும் ஆரோக்கியமான, நிலையான, சமமான மற்றும் வளமான எதிர்காலத்தை உருவாக்க, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களுக்கு விரைவான மாற்றத்தை ஏற்படுத்த, சூரிய சக்தி, காற்று, நீர் மின்சாரம், அலை அல்லது புவிவெப்ப சக்தி என்பவற்றைப் பயன்படுத்தி நன்மை பெறுவோம் என்கிறார்கள் அறிஞர்கள்.
அரசாங்கங்கள், உலகளாவிய தொழில் மற்றும் உள்ளூர் வணிகங்கள், தொழிற்சங்கங்கள், பள்ளிகள், மதத் தலைவர்கள், சிவில் சமூகம், குடும்பங்கள் மற்றும் தனிநபர்கள் என. நீங்கள் ஒரு நகர மேயராகவோ, தொழிற்சங்கத் தலைவராகவோ, தலைமை நிர்வாக அதிகாரியாகவோ, வங்கியாளராகவோ, கலைஞராகவோ, விவசாயியாகவோ, மீனவராகவோ, ஆசிரியராகவோ அல்லது தீயணைப்பு வீரராகவோ யாராக இருந்தாலும் சரி - இந்த மாற்றத்தின் உண்மையான சக்தி ஒவ்வொரு தனிநபர்களின் கைகளிலும் உள்ளது. மக்கள் சக்திதான் இந்த மாற்றத்திற்குப் பின்னால் உள்ள உந்து சக்தி. நாம் வாழும் பூவுலகு, எங்கள் கிரகம். இதனைக் காப்பாற்றுவதற்கானது எங்கள் சக்தி.
மனிதர்கள் பொய்ப்பதுண்டு. மழை தரும் வானம் கூடப் பொய்ப்பதுண்டு. ஆனால் நாம் வாழும் மண் பொய்த்தாகத் தமிழில் ஒருவாசகம் கூட இருப்பதாகத் தெரியவில்லை. அத்தகைய அபரிமிதமான உண்மை நிறைந்த பூமியில், ஆற்றல் மிகுந்த விளைநிலத்தில் நாம் எதை விதைக்கின்றோமா அதையே அறுவடை செய்யமுடியும். பலகோடி உயிரினங்களின் சொத்தான பூகோள உருண்டையை, மனித இனம் தனக்கானது மட்டுமென உரிமை கொண்டாடும் வகையில் ஆயுதங்கள் விதைத்து, போர்நிலம் ஆக்குகின்றது. இந்த நிலையை மாற்றும் மகத்தான சக்தியாக மக்கள் சக்தி திரளவேண்டும் என்பது சம கால உலகின் அவசரத்தேவை !