free website hit counter

அந்திம காலத்தின் இறுதி நேசம் - பார்வை !

Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

அந்திம காலத்தின் இறுதி நேசம் என்ற கவித்துவம்மிக்க தலைப்பினைத் தாங்கி நிற்கும் இச் சிறுகதைத்தொகுதியை யாத்தவர் தக்க்ஷிலா ஸ்வர்ணமாலி.

மிகவும் எளிமையான கோடுகளும் அழுத்தமான வர்ணங்களையும் உள்ளடக்கி றஷ்மி வரைந்துள்ள கருத்துப் பொதிந்த அட்டைப்படம் மேலும் மெருகை இச் சிறுகதைத் தொகுதிக்குத் தருகிறது.

இலங்கையின் தேசியமொழிகளில் ஒன்றான சிங்களமொழியில் வெளிந்த இத் தொகுதியை எம். ரிஷான் ஷெரிப் தமிழாக்கம் செய்துள்ளார். பத்துச் சிறுகதைகளை உள்ளடக்கிய இச்சிறுகதைத் தொகுப்பை (2021) ஆதிரைப் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

எழுத்தாளர், மொழிபெயர்பாளர் பற்றிய அறிமுகத்தில் காணப்படும் பாலினஅசமத்துவ மொழிப் பிரயோகத்தையும் கடந்து இச்சிறுகதைத் தொகுதியை வாசிக்க நான் முற்பட்டதற்கான ஒரேயொரு காரணம் இவர் இலங்கையைச் சேர்ந்த படைப்பாளி என்பதே.

உறவுகளால் எப்போதுமே சூழப்பட்டது சமூகம். உறவுகளை, நட்பை, வாழ்வியல் சார்ந்த நியமங்களை கோரிநிற்பதும், அவற்றை உருவாக்கிக் கொள்வதும் சமூகத்தின் பண்புகளில் ஒன்று. இந்த சிறுகதைத் தொகுதியில் நாம் சந்திக்கும் கதை மாந்தர்கள் எம்முடன் கூடவே வசிப்பவர்கள்; நண்பர்களாக, அயலவர்களாக, உறவுகளாகப் பயணிப்பவர்கள். சகமனிதர்களிடையே ஏற்படும் அன்பு, பாசம், நேசம், பந்தம், ஏக்கம், மானசீகமான புரிந்துணர்வு போன்ற நுண்ணிய உணர்வுகளை அடித்தளமாக கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ள இச்சிறுகதைகளைப் புனைவு என்று ஒதுக்கமுடியவில்லை.

'தங்கையைத் தேடித் தேடி அவன் அலைந்தான்' என்பது இத் தொகுப்பின் பத்தாவது சிறுகதை. இக்கதையின் தலைப்பே உள்ளடக்கத்தைக் கூறிவிடும். தனது சகோதரியைத் தேடும் ஒரு சகோதரனின் மன அதிர்வுகளையும், கூடவே வேதனை கொள்ளும் மனஉணர்வுகளையும், சகோதரி கேட்ட சிறிய விடயங்களைக் கூட தான் அக்கறையாகச் செய்யவில்லை என்ற குற்றஉணர்வையும் பதிவு செய்கிறது இச்சிறுகதை.

'சகோதரியை சித்திரவதை செய்திருப்பார்களா, அவளை ஒரு தடவையில் சுட்டுக் கொண்டிருந்தால் நல்லா இருக்கும்' என்று சகோதரி சித்திரவதைக்குட்படுத்தப்பட்டு மரணத்தை தழுவக் கூடாதே என்று அல்லப்படும் சகோதர பாசம், மிகவும் அழகாக சித்திரிக்கப்படுகிறது.

இந்த சகோதரனின் உணர்வும், வேதனையும், இரக்கமும், ஏக்கமும் யுத்தத்தில் தோய்ந்து போன இலங்கையருக்கு அந்நியமானவையல்ல. இலங்கையில் எழுபதுக்களில் சிங்கள மக்களினால் அரசுக்கெதிராக ஏற்பட்ட எழுச்சியின் சுவடுகளின் பிரதிபலிப்பாக இதைக் கொள்ளலாம்.

'பொட்டு' என்ற தலைப்பிட்ட ஒரு சிறுகதையில் அடையாளங்கள் குறிப்பாக கலாச்சார ரீதியான இன அடையாளங்கள் தொடர்பாக கொழும்பில் கணவன் இறந்தபின் தனியாக வாழும் பெண் ஒருவரின் மனவோட்டம் ஒன்று சித்திரிக்கப்படுகிறது. இந்த பெண் தான் வசிக்கும் வீட்டின் ஒரு அறையை வாடகைக்கு கொடுத்து அந்த வருமானத்தில் தனது சீவியத்தை நடத்துபவர். இவர் வீட்டில் வாடகைக்கு அமர்த்தப்பட்ட தமிழ் பேசுபவரின் 'பொட்டொன்று வச்சிருந்தால் இன்னும் அழகாக இருப்பீங்க' என்ற வாக்கியமே இந்த எண்ணவோட்டத்தையும் இவருக்கு ஏற்படுத்துகிறது.

இறுதியில் இங்கு வாடகைக்கு வசிக்கும் நபர் இலங்கை காவல் துறையினால் கைது செய்யப்படுகிறார். கொழும்பில் இடம்பெற்ற குண்டுவெடிப்பொன்றில் தான் பிரசவிக்கப் போகும் குழந்தையின் தந்தையை இழந்த இந்தப் பெண் மீண்டும் தனித்து விடுகிறார். இலங்கையில் இரண்டாவது தடவையாக ஏற்பட்ட அரசியல் எழுச்சி தொடர்பான பதிவாக இது அமைகிறது. தமிழ் பேசும் மக்களினால் இலங்கை அரசுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட எழுச்சி இது. இலங்கையின் அரசியல் வரலாற்றை நுட்பமாகப் பதிவு செய்யும் அதேவேளை இரு மனிதர்களுக்கிடையே ஏற்படும் உறவையும் கூடவே கூறிச் செல்கிறது இந்தச் சிறுகதை.

'ஒரே திடல்' என்ற சிறுகதை சிறுமியின் பார்வையில் நகர்கிறது. அம்மாவின் திருமணம் பற்றிய சிறுமியின் அவதானங்கள் பதிவாகின்றன. திருமணக் கொண்டாட்டங்கள் பற்றி சிறுமி பெற்றிருந்த அநுபவங்களுக்கு முற்றிலும் மாறாக தனது தாயின் திருமணம் அமைந்திருந்தை மிகவும் துல்லியமாக பதிவு செய்கிறது இச்சிறுகதை. சமூகமயமாக்கலில் பாடசாலை போன்ற நிறுவனங்கள் வகிக்கும் கணிசமான பங்கைவகிப்பன ஆனால் இங்கு இச்சிறுமி வேறு நடைமுறைகளும் சமூகத்தில் நிலவுகின்றன என்பதை 'சித்தப்பா எனப்படுபவர் அப்பாவின் தம்பி எனப் பள்ளிக்கூடத்தில் சொல்லித்தந்தார்கள், எனினும் எனது சித்தப்பா அப்பாவின் தம்பி அல்ல. ஆனாலும், அம்மா எங்களைக் கூட்டிச் சென்றவரை சித்தப்பா என்று அழைக்குமாறு கூறியிருந்தார்' என தனது வாழ்வியல் அநுபவம் மூலம் பெற்றுக் கொள்கிறார்.

மேலே குறிப்பிட்ட இச்சிறுகதையில், சிறுமியின் தந்தை தாயை விட்டுப் பிரிந்து வேறொரு பெண்ணுடன் வசிக்கச் சென்று விடுகிறார், தந்தையின் புதிய உறவை சித்தி என உறவு கொள்கிறார் இந்தச் சிறுமி. பிரசவத்தின் போது சித்தி இறந்து விடவே இந்த விடயத்தை கூற தந்தை சிறுமியின் தாயான யசோவிடமே வருகிறார். அம்மாவை திருமணம் செய்து கொண்ட சித்தப்பா மரண சடங்குகள் தொடர்பான எல்லா அலுவல்களையும் நடாத்தி வைக்கிறார். 'சனக்கூட்டத்திற்கு மத்தியில் அம்மாவுக்கு அப்பாவை ஆறுதல் படுத்த முடியாத காரணத்தால் சித்தப்பா அம்மாவுக்காக அப்பாவின் அருகிலேயே அமர்ந்திருக்கிறார், சித்தப்பா பற்றிய சிறுமியின் மதிப்பீடு மிகவும் அன்பானதும் அழகானதுமாக அமைகிறது. பின்பு, சித்தப்பா சிறுமியையும் சிறுமியின் தாயையும் மீண்டும் சிறுமியின் தந்தையிடமே விட்டுவிட்டுச் செல்ல வருகிறார். இந்தச் சந்தர்ப்பத்தில் சிறுமி சுயமாக சிந்திக்கும் ஒருவராக இருக்கிறார், அவர் சுயமாக முடிவு செய்தல் தொடர்பான கேள்வியை எழுப்புகிறார். 'எம்மிடம் மிகுந்த பாசம் வைத்திருப்பவரிடம் செல்ல வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டியவர்கள் நானும் அம்மாவும் தானே', சித்தப்பாவின் எண்ணம் அப்பா தொடர்பான நன்நோக்கில் அமைந்திருந்தாலும், சித்தப்பா தங்களுடன் கலந்தாலோசிக்காமல் முடிவு செய்வதை இதன் மூலம் சிறுமி மிகச் சாதாரணமாகச் சுட்டிக் காட்டுகிறார்.

'நந்தியாவட்டைப் பூக்கள்' என்ற இன்னொரு சிறுகதையும் சிறுமியின் பார்வையிலேயே சொல்லப்படுகிறது. இங்கு பிரதான கருப்பொருளாக இருப்பது சிறுமியின் தந்தைக்கும் சிறுமி அன்பு காட்டும் பெரியம்மாவுக்கான உறவும் அமைகிறது. இக்கதையின் சிறப்பு என்னவென்றால் அப்பாவுக்கு பெரியம்மா மீதான நேசத்தை விலாவாரியான விபரணங்கள் எதுவுமின்றி 'பெரியம்மாவின் கழுத்துவழியே ஊர்ந்து வழிந்த வியர்வையை அப்பா தனது விரல்களால் துடைத்துவிட்டார்'. இப்படியொரு இலகுவான வாக்கியத்திற்குள் அடக்குவதுதான் என்று கூறலாம். சிறுமியின் பார்வையில் இது கூறப்பட்டாலும் வாசகர்களுக்கு வளர்ந்தவர்களுக்கு இடையான நெருக்கம் புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கிறது.

சிறுகதைகள் அனைத்துமே தமக்கென சிறப்பம்சங்களை கொண்டிருக்கின்றன. இலக்கியத்தில் சமூகத்திலுள்ள எல்லா பிரச்சனைகளும் கவனத்தைப் பெறுவதில்லை ஆனால் இச்சிறுகதைத் தொகுதி பல விடயங்களைக் கருத்திற் கொண்டுள்ளது. இச்சிறுகதைத் தொகுதி பேசப்பட வேண்டிய, பலரால் வாசிக்கப்பட வேண்டியதொன்று கருதுவதற்கு பல காரணங்கள் காணப்பட்டாலும் துல்லியமாக தனித்து நிற்பது மனிதர்களுக்கிடையேயான உறவின் வெவ்வெறு சிந்தனைகளின் பரிமாணங்களைத் தன்னகத்தே கொண்டிருப்பதுதான், குறிப்பாக மனித உறவுகளுக்கு அடித்தளமான அன்பு, பாசம், பந்தம் என்பவை அருகி பணமும் பிரபல்யமும், நான், எனது மட்டும் என்பதும் உயர்ந்த தத்துவமாக, உன்னத உணர்வாக உருவெடுத்திருக்கும் இந்த யுகத்தில் இவ்வாறான சிறுகதைத்தொகுதி வெளிவந்திருப்பது ஒரு சிறப்பு. எதிர்காலத்தில் சொல்லகராதிகளில் தேடிப்பொருளணர்ந்து கொள்ளும் மனித குணாம்சங்களைக் பலவற்றை பதிவு செய்யும் படைப்பாளி பராட்டுக்குரியவர்.

- 4தமிழ்மீடியாவிற்காக: தங்கம்

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula