free website hit counter

தமிழகத்தில் மறக்கப்படும் தமிழர் கலைவடிவம் !

Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

வில்லின் துணை கொண்டு பாடப்படும் பாட்டு வில்லுப்பாட்டு. தமிழரின் கலை வடிவங்களில் முதன்மையான ஒன்று. தமிழகத்தின் தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரியில் மிகவும் பொதுவாகக் காணப்படும் ஒரு கலை.

பங்குனி மாதம் உத்திரத்திருவிழா மற்றும் ஆடி மாதம் அனைத்துக் கோவில் கொடை விழாக்களும் வில்லுப்பாட்டு இல்லாமல் நிறைவுறாது. அதற்கு மக்கள் அத்தகு முக்கியத்துவம் அளித்தனர். துணை இசைக்கருவிகள் பல இருப்பினும் வில்லே இங்கு முதன்மை பெறுகிறது. துணைக்கருவிகளாகப் பயன்படுத்தப்படுபவை, உடுக்கை, குடம், தாளம், கட்டை என்பனவாகும்.

தோற்றம் :
மனிதன் வேட்டையாடுதலைத் தொழிலாகக் கொண்டிருந்த நேரம் அவனுக்கு உதவியது வில்லாகும். அதில் கட்டப்பட்டிருந்த மணி ஓசையில் மயங்கி அதனடிப்படையில் வில்லுப்பாட்டிசை உருவாகியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

வீரர்களின் பொழுதுப்போக்குச் சாதனமாக முதலில் விளங்கிய வில்லுப்பாட்டு, காலப்போக்கில் வளர்ச்சிப் பெற்று மக்களின் பொழுது போக்கிற்காகவும், குறிப்பாகச் சமுதாயச் சீர்திருத்தக் கருத்துக்களைச் சொல்வதற்கும் பயன்பட்டது.


’’வில்லுப்பாட்டு’’ எப்படி உருவானது என்பதற்கு செவிவழிக்கதை ஒன்று உண்டு.

பாண்டிய மன்னர் வில்லுடன் வேட்டைக்குப் போனார். பல விலங்குகளை வேட்டையாடினார். மாலை நேரம் வந்ததும், மன்னர் மனதில் கலக்கம். அமைச்சரிடம் ‘’இந்த உயிர்களை இப்படிக் கொல்லுகிறோமே... நமக்குச் சந்தோஷம், அவற்றுக்கோ துன்பம். மானைக் கொன்ற பின், அதன் குட்டி எப்படித் தவிக்கிறது பார்த்தீர்களா?’’ என்றார். ‘’சரி, இதற்கெல்லாம் பரிகாரம் உண்டா?’’ ‘’உண்டு ராஜா... இறைவன் மீது மனமுருகப் பாடிப் பாவமன்னிப்புக் கோருங்கள். இசை ஒன்றுக்குத் தான் இசைவான்’’ என்றார் அமைச்சர். உடனே காட்டிலேயே கச்சேரி நடத்த முடிவானது. ஆனால், பக்க வாத்தியங்கள் இல்லை. கொண்டு வந்த பொருட்களை இசைக்கருவிகளாக்கினர். வில்லைத் தரையில் வைத்து அம்பால் தட்டி இசை எழுப்பினார் மன்னர். அப்படித் தட்டும் போது வில் சரிவர நிற்காத்தால் தண்ணீர் கொண்டு, போயிருந்த மண் குடத்தைக் கட்டித் தட்டினார். டும் டும் என்று நாதம் பிறந்துவிட்டது.

ராஜா பாடத் துவங்கும் முன், ‘தந்தனத்தோம்’ என்று அடியெடுத்துக் கொடுத்தார் அமைச்சர். மன்னர் பாடும் போது, ஆமோதிக்க வேண்டாமா? அதனால் மன்னரின் உதவியாட்கள் ‘ஆமாம்’ போட ஆரம்பித்தனர். அந்தப் பழக்கம் வில்லுப்பாட்டில் இன்னும் தொடர்கிறது.

பாடல் அமைப்பு :
முதலில் இறைவணக்கம் செய்தலே தமிழ் மரபு! அதேபோல் முதல்பகுதி காப்பு, பெரும்பாலும் விருத்தமாக அமையும். பின்பு, நூதலிப்பாடுதல் எனும் கதையைப் பற்றிச் சிறிய முன்னுரை கூறப்படும்.

கதை கோட்போரே சான்றோராக எண்ணி, தன்னை எளியராகக் கூறும் அவையடக்கம் இடம்பெறும். மேலும், கதை கூறும் போது பிழை ஏற்பட்டால் பொறுத்துக் கொள்ளுமாறு வேண்டுதல். கதையின் தொடக்கத்தில், கதை மாந்தர்களின் நாட்டு வளப்பெருமை கூறப்படும். அதன்பின், கதை முழுவதும் கூறப்படும். கதையின் தலைவர், தலைவியின் சிறப்பு இதில் எடுத்துரைக்கப்படும். இவையெல்லாம், நகைச்சுவை கலந்து கேட்போருக்குத் தொய்வு ஏற்பட்டாதவாறு கூறப்படும். அதனுடன், ஒரு ஆண், பெண் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், எத்தகுத் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதெல்லாம் கதையிடையே கூறப்படும்.

இறுதியில், வாழ்த்துப்பகுதியுடன் முடிவுறும். கதை கேட்டவர்கள், கூறுபவர்கள், கதை மாந்தர்கள் என அனைவரும் நலம்பெற வாழ்த்துவது போல இருக்கும். இத்தகுச் சிறப்புமிக்க வில்லுப்பாட்டு இன்று மறைந்து வருவது என்பதே வேதனைக்குரிய ஒன்று. இன்றைய நவநாகரீக உலகில், நாங்களும் இருக்கிறோம் என்று அவர்களும், அவர்கெளுக்கென்ற ஒரு கூட்டமும், நம் தமிழரின் சிறப்பான கலையைக் கைவிடாமல் காப்பாற்றி வருகிறார்கள்.

கைப்பேசிலேயே காலம் கழிக்கும் நாம், இது போன்ற கலைகளையும் கைவிடாமல் காப்பற்றும் பொறுப்பினை உணர வேண்டும். எங்கோ தென்கோடியில் ஏதோ கூறுகிறார்கள், நமக்கென்ன என்று இருந்தால், நம் பண்பாடும் பாரம்பரியமும் பாழாகி விடாதா? ஆதலால், அனைவரும் இதன்‌ பெருமைகளை அறிந்து, அவர்களுக்கு ஆதரவை அளிக்க வேண்டும்.

- 4தமிழ்மீடியாவிற்காக : நெல்லை மைந்தன்

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula