free website hit counter

புலம்பெயர் தமிழர் நல வாரிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கான புலம்பெயர் தமிழர் நல வாரியத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிப்பதாவது:-
வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கென நலத் திட்டங்கள், அவர்களுக்கான தூதரக உதவிகள்,செம்மொழியாம் தமிழ்மொழியைத் தழைத்தோங்கச் செய்திட வெளிநாடுகளில் தமிழ்க் கல்வி, கலை, பண்பாடு மற்றும் கருத்துப் பரிமாற்றத்திற்கென பல்வேறு சீர்மிகு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது.

அந்த வகையில், பல்வேறு நாடுகளுக்குச் சென்று வாழும் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைத்திடவும், அவர்களுக்குத் தேவையான உதவிகள் செய்திடவும், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் உளப்பூர்வமான மற்றும் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருட்டு, 'வெளிநாடுவாழ் தமிழர் நலச்சட்டம்' 2011-ம் ஆண்டு மார்ச் 1-ம் நாள் கலைஞர் அரசால் இயற்றப்பட்டது. அதோடு, "புலம்பெயர் தமிழர் நலவாரியம்" ஒன்று உருவாக்கப்பட்டு, அவர்களுக்கென நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அப்போது அறிவிக்கப்பட்ட நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது, முந்தைய ஆட்சியாளர்கள் அதனை நடைமுறைப்படுத்த முன்வரவில்லை.

இந்த நிலையில், மீண்டும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்தபிறகு, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், 'வெளிநாடுவாழ் தமிழர் நல வாரியம்' அமைக்கப்படும் என்ற அறிவிப்பினை வெளியிட்டார். இந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் விதமாக, கீழ்க்காணும் தலைவர், அரசுசார் அலுவலர்கள் மற்றும் அயலகத் தமிழர் பிரதிநிதிகளை உறுப்பினர்களாக கொண்டு புலம்பெயர் தமிழர் நல வாரியத்தினை அமைத்திட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, புலம்பெயர் தமிழர் நலவாரியத்தின் தலைவராக திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், பழையகோட்டையைச் சேர்ந்த கார்த்திகேய சிவசேனாபதி நியமிக்கப்பட்டுள்ளார். மொரிஷியஸ் நாட்டில் வசிக்கும் ஆறுமுகம் பரசுராமன், லண்டனில் வசிக்கும் முஹம்மது பைசல், ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் சித்திக் சையது மீரான், வடஅமெரிக்காவில் வசிக்கும் கால்டுவெல் வேள்நம்பி, சிங்கப்பூரில் வசிக்கும் ஜி.வி.ராம் என்கிற கோபாலகிருஷ்ணன் வெங்கடரமணன், மும்பையில் வசிக்கும் அ. மீரான் மற்றும் சென்னையில் வசிக்கும் வழக்கறிஞர் புகழ்காந்தி ஆகியோர் அரசு சாரா உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அரசு சார்ந்த உறுப்பினர்களாக - பொதுத் துறைச் செயலாளர், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அல்லது அவரால் நியமனம் செய்யப்படுபவர், நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அல்லது அவரால் நியமனம் செய்யப்படுபவர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அல்லது அவரால் நியமனம் செய்யப்படுபவர், வெளிநாடுவாழ் தமிழர் தொடர்பான பணிகளைக் கவனித்து வரும் அரசு சிறப்புச் செயலாளர் / அரசு இணைச் செயலாளர் / அரசு துணைச் செயலாளர், பொதுத் துறை, மேலாண்மை இயக்குநர், அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையரகத்தின் ஆணையர் உறுப்பினர் செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாரியத்தில் நியமிக்கப்படும் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக் காலம், ஆணை வெளியிடப்பட்ட நாளிலிருந்து மூன்று ஆண்டுகள் ஆகும்.

இவ்வாரியம், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்களுக்கான நலத் திட்டங்களை செம்மையாகச் செயல்படுத்திட ஏதுவாக, 5 கோடி ரூபாய் "வெளிநாடுவாழ் தமிழர் நலநிதி" என மாநில அரசின் முன்பணத்தைக் கொண்டு உருவாக்கப்படும். அதோடு மட்டுமல்லாமல், மூலதனச் செலவினமாக 1 கோடியே 40 லட்சம் ரூபாய் மற்றும் தொடர் செலவினமாக, நலத்திட்டங்கள் மற்றும் நிர்வாக செலவினங்களுக்காக ஆண்டுதோறும் 3 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.

இவ்வாரியத்தின் வாயிலாகப் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு ஏதுவாக, வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்களின் விவரங்களைச் சேகரிப்பது அவசியமாதலால், அவர்கள் குறித்த தரவு தளம் (database) ஒன்று ஏற்படுத்தப்படும். இவ்வாரியத்தில் பதிவு செய்பவர்களுக்கு விபத்து, ஆயுள் காப்பீடு திட்டம், மருத்துவக் காப்பீடு திட்டம் மற்றும் அடையாள அட்டை வழங்கப்படும். வெளிநாட்டிற்குச் செல்லும் குறைந்த வருவாய் பிரிவைச் சேர்ந்த தமிழர்கள், அங்கு பணியின்போது இறக்க நேரிடின், அவர்களது குடும்பத்தைப் பாதுகாக்கும் நோக்குடன், அவர்கள் குடும்பத்தில் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை, திருமண உதவித் தொகை வழங்கப்படும்.

தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலினின் இத்தகைய முனைப்பான நடவடிக்கை, வெளிநாடுகளில் தேமதுரத் தமிழோசை பரவுவதற்கும், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் இன்னல்களைப் போக்குவதற்கும், அவர்களுக்கான நலத் திட்டங்களைச் செம்மையுறச் செயல்படுத்துவதற்கும் உறுதுணையாக அமையும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இவ்வாறு அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction