free website hit counter

'தி பேமிலி மேன் 2' தொடரை நிறுத்துங்கள்! அமேசானுக்கு சீமான் கடும் எச்சரிக்கை !

சின்னத்திரை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சமந்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'தி பேமிலி மேன் 2' இணையத் தொடரினை ஒளிபரப்பத் திட்டமிட்டு வருவதை ரத்து செய்யக்கோரி அமேசான் ஓடிடி நிறுவனத்துக்கு சீமான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: “அமேசான் பிரைம் இணையத்தளத்தில் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிற, ‘தி பேமிலி மேன் 2’ எனும் இணையத்தொடரின் முன்னோட்டமும், அதில் இடம்பெற்றிருக்கிற காட்சியமைப்புகளும் பேரதிர்ச்சி தருகின்றன. விடுதலைப்புலிகளைத் தீவிரவாதிகளாகச் சித்தரித்து, தமிழர்களை வன்முறையாளர்களாகக் காட்ட முற்படும் இத்தொடர் முழுக்க முழுக்க உள்நோக்கத்தோடும், தமிழர்கள் மீதான வன்மத்தோடும் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

இந்தியில் வெளியாகும் அத்தொடரின் கதைக்களத்தை சென்னைக்கு மாற்றி, அதில் ஒரு ஈழப்பெண்ணைப் போராளியாகச் சித்தரித்து, அப்பெண்ணின் உடையின் வண்ணம் விடுதலைப்புலிகளின் சீருடையோடு ஒத்திருக்கச் செய்திருப்பதும், அந்தப் போராளி குழுக்கும் பாகிஸ்தானின் ISI அமைப்பிற்கும் சம்பந்தமிருக்கிறது என்ற வசனமும் தற்செயலானதல்ல. ஈழத்தில் 2 இலட்சம் தமிழர்களை சிங்களப்பேரினவாதத்தின் கொடுங்கரங்களுக்குப் பறிகொடுத்துவிட்ட சூழ்நிலையிலும் மிகப்பெரும் சனநாயகவாதிகளாக நின்று அறப்போராட்டம் வாயிலாகவும், சட்டப்போராட்டம் வாயிலாகவும் உலகரங்கில் நீதிகேட்டு நிற்கிற தமிழர்களைத் திரைப்படத்தொடரின் வாயிலாகத் தீவிரவாதிகளெனக் காட்ட முனைவது வன்மையான கண்டனத்திற்குரியது.

தமிழர்களைத் தவறாகத் தோற்றம் கொள்ளச்செய்யும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிற இத்தொடரின் முன்னோட்டம் வெளியான உடனே உலகெங்கும் வாழும் தமிழர்கள் பெரும் கோபத்துடனும், கொந்தளிப்புடனும் எதிர்வினையையும், கண்டனத்தையும் பதிவுசெய்து வருகின்றனர். சிங்களப்பேரினவாத ஆட்சியாளர்கள் போர் மரபுகளையும், விதிகளையும் மீறி உலக நாடுகளின் துணையோடு உள்நாட்டுப்போரை நடத்தி நச்சுக்குண்டுகளை வீசி கொத்துக் கொத்தாய் தமிழர்களைக் கொன்றொழித்தபோதும் சிங்கள மக்கள் மீது சிறுதாக்குதல் கூடத் தொடுக்காது மரபுவழிப் போரையே இறுதிவரை முன்னெடுத்து, அழிவைச் சந்தித்தபோதும் அறவழிலிருந்து வழுவாது நின்ற விடுதலைப்புலிகளின் மாண்பைப் பேசாது அவர்களை ஈவிரக்கமற்ற வன்முறைக்கூட்டம் போலக் காட்ட முயலும் இத்தொடரை இணையவெளியில் ஒளிபரப்புவதை ஒருநாளும் ஏற்க முடியாது என உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.” இவ்வாறு சீமான் தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction