free website hit counter

காணாமல் ஆக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தலைவராகும் பேராசையோடு இன்றும் பலர் வலம் வருகிறார்கள். ஏற்கனவே கூட்டமைப்பை விட்டுச் சென்று புதிய தேர்தல் கூட்டணியை அமைத்தவர்களும், தனி வழி பயணத்தில் கருத்தாக இருந்தவர்களும் மீண்டும் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் பதவி என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

முள்ளிவாய்க்கால் முடிவின் பின்னரான தமிழ்த் தேசிய அரசியலை வழிநடத்தி வந்த பெருந்தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் அவர்களின் மறைவு, ஈழத்தமிழர் அரசியலில் தலைமைத்துவ வெளியை அதிகமாக்கியிருக்கின்றது. தந்தை செல்வாவில் இன விடுதலை அரசியலினால் ஈர்க்கப்பட்டு தமிழரசுக் கட்சியூடாக அரசியல் களம் கண்ட சம்பந்தன், தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் அங்கீகாரத்தோடு நிலைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரே தலைவராகவும்  செயற்பட்டிருக்கிறார்.

ஜனாதிபதித் தேர்தல் இம்முறை வழக்கத்துக்கு மாறாக மும்முனைப் போட்டிக்களத்தினை திறந்திருப்பதாக தென் இலங்கையில் கருத்துருவாக்கம் செய்யப்படுகின்றது. அதனை, வடக்கு கிழக்கின் அரசியல், சிவில், ஊடக வெளியும் உள்வாங்கி பிரதிபலிக்க ஆரம்பித்திருக்கின்றது. தமிழ்ப் பொது வேட்பாளர் கோசத்தோடு அரங்கிற்கு வந்திருப்பவர்கள், அந்த அடிப்படையை வைத்துக் கொண்டுதான் தங்களின் அரசியல் கணக்கினை போடுகிறார்கள்.

யாழ்ப்பாணத்தில் கடந்த புதன்கிழமை கூடிய தமிழ் சிவில் சமூகக் கட்டமைப்பினர், தங்களை 'தமிழ் மக்கள் பொதுச்சபை'யாக அடையாளப்படுத்தி அறிவித்துள்ளனர். ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவது தொடர்பிலான உரையாடல் களம், தமிழ் மக்கள் பொதுச்சபை என்ற சிவில் சமூக அமைப்பொன்றை ஆரம்பிப்பதற்கான காரணியாக இருந்திருக்கின்றது என்பதை ஆரம்பத்திலேயே வரவேற்கலாம்.

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளரை முன்னிறுத்துவது தொடர்பிலான பொது விவாதமொன்று எதிர்வரும் 09ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அறிவித்திருக்கிறார். தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிக்கும் அரசியல் பத்தியாளர்கள் சிலருக்கும் சுமந்திரனுக்கும் இடையில் யாழ்ப்பாணத்தில் அண்மையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போது, தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்தை, பொது விவாதமாக நடத்தி ஆராய்வோம் என்று இரு தரப்புக்கும் இடையில் இணக்கம் காணப்பட்டது.

கருணா அம்மான் என்கிற விநாயகமூர்த்தி முரளிதரன், கடந்த பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில்  போட்டியிட்ட போது, வாக்குகள் பிரிந்து தமிழர் பிரதிநிதித்துவம் இழக்கப்படும் என்று பல தரப்புக்களினாலும்  எச்சரிக்கப்பட்டது. தேர்தல் முடிவிலும் அது பிரதிபலித்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தனக்குக் கிடைத்த ஒரேயொரு தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவியை, தவராசா கலையரசனுக்கு வழங்கி அம்பாறைக்கான தமிழர் பிரதிநிதித்துவ வெற்றிடத்தை நிவர்த்தி செய்தது.

இலங்கைத் தமிழரசுக் கட்சி நிர்வாக ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் எதிர்கொண்டு நிற்கும் சிக்கல்கள் இப்போதைக்கு தீராது என்று தெரிகின்றது. தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் தெரிவு, மத்திய செயற்குழு தெரிவு மற்றும் தேசிய மாநாடு தொடர்பில் யாப்புக்கு முரணான நடவடிக்கைகள் இடம்பெற்றிருப்பதாக சுட்டிக்காட்டி திருகோணமலை மற்றும் யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றங்களில் இரு வேறு வழக்குகள் தொடரப்பட்டிருக்கின்றன. இதில், பிரதான வழக்காக இப்போது, நோக்கப்படும் திருகோணமலை நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு அடுத்த தவணைக்காக இந்த மாதம் 24ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றது.

இதன்போது, நீதிமன்றத்தில் ஏற்கனவே, கட்சியின் தெரிவுகள் யாப்புக்கு முரணாக நடைபெற்றிருக்கின்றன என்று ஏற்றுக்கொண்ட கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, புதிதாக தெரிவான தலைவராக அறிவிக்கப்பட்ட சிவஞானம் சிறீதரன் உள்ளிட்டோர், தங்களின் மீள் சமர்ப்பணங்களைச் செய்வதற்காக தவணை கோரியதனால், 24ஆம் திகதிக்கு வழக்கு விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றன. 

குறித்த வழக்கின் பிரதிவாதிகளில் ஒருவரான எம்.ஏ.சுமந்திரன், நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை, தன்னுடைய சமர்ப்பணங்களை வாய்மொழி மற்றும் எழுத்து பூர்வமாக நீதிமன்றத்தில் முன்வைத்திருந்தார். அதில், கட்சியின் தெரிவுகள் யாப்புக்கு அமையவே நடைபெற்றிருக்கின்றன என்று கூறியதோடு, தலைவர் தெரிவின் போது, இறுதி நேரத்தில் கட்சியின் தலைவரான மாவை, 20 பேரை வாக்களிக்க வைத்தமை மாத்திரமே முரணானது என்றிருக்கிறார்.அத்தோடு, தலைவர் தெரிவின் போது நாற்பதுக்கும் அதிகமான மேலதிக வாக்குகளினால் சிறீதரன், தன்னை வெற்றி கொண்டிருக்கிறார் என்று கூறும் சுமந்திரன்,  முரணாக வாக்களிக்க அனுமதிக்கப்பட்டவர்களின் வாக்குகளான 20ஐ தனக்கு எதிராக அளிக்கப்பட்ட வாக்குகள்  என்று கருதி, அவற்றை கழித்தாலும் சிறீதரன், 20க்கும் அதிகமான வாக்குகளினால் வெற்றிபெற்றிருக்கிறார் என்ற வாதத்தின் பின்னால் நின்று வழக்கினை எதிர்கொள்ள நினைக்கிறார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவருக்கான தெரிவும், அதன் பிறகு இடம்பெற்ற மத்திய செயற்குழுவுக்கான தெரிவும் பொதுக்குழு உறுப்பினர்களினால் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றது. யாப்புக்கு முரணாக சில தவறுகளை தலைவர் மாவை இழைத்திருக்கின்றார். அதுவும், தலைவர் தெரிவின் போது, மேலதிகமாக வாக்களிக்கப்பட்ட 20 பேர் தொடர்பிலானது என்ற நிலைப்பாட்டில் நின்று விடயங்களைத் தீர்த்துக் கொள்ள முடியும் என்று சுமந்திரன் நம்புகிறார். அது, பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் சதித்திட்டங்களைக் கடக்க உதவும் என்றும் அவர் நினைக்கலாம். தலைவர் தெரிவில் தான் தோற்றாலும் கட்சியின் ஓட்டத்தில் தன்னுடைய வகிபாகம் தொடர்பில் சுமந்திரனுக்கு தெளிவான நிலைப்பாடு இருக்கின்றது என்பதைத்தான் கடந்த இரண்டு மாத காலம் உணர்த்தியிருக்கின்றது. 

கட்சியின் தலைவர் தெரிவு என்பது, இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெற்றே ஆக வேண்டும். அதன்மூலம், ஏதேச்சதிகாரமற்ற கட்சிக் கட்டமைப்பை உருவாக்கிக் பேண முடியும் என்ற நிலைப்பாட்டை சுமந்திரன் இப்போது கண்டடைந்திருக்கிறார். அது, கடந்த காலத்தில் சுமந்திரனும் அங்கம் வகித்த 'பெருந்தலைவர் இரா.சம்பந்தனின் முடிவெடுக்கும் தலைமை' என்ற அதிகார கட்டமைப்பு இழைத்த தவறுகளில் தன்னுடைய பங்கு இருந்தமை தொடர்பிலான குற்றவுணர்ச்சியின் வெளிப்பாட்டினால் எழுந்ததாக இருக்கலாம். அல்லது, கட்சியின் பதவிகளைப் பிடித்துக் கொண்டிருப்பவர்கள் அதில் இருந்து நகராமல், கட்சியை சீரழித்தமை தொடர்பில் கிடைத்த அண்மைய ஞானமோ தெரியாது. ஞானம் கிடைத்தமை தொடர்பில் அவர் கடந்த காலத்தில் வெளிப்படுத்திய கருத்துக்கள்தான், அவரை சம்பந்தன் மற்றும் மாவைக்கு நெருக்கமான கட்டத்தில் இருந்து வெளித் தள்ளுவதற்கும் காரணமானது. வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவினால் அல்லாடும் சம்பந்தன் தன்னுடைய பாராளுமன்ற உறுப்பினர் பதவியை அடுத்தவரிடம் விட்டுக்கொடுக்க வேண்டும் என்று சுமந்திரன் பொது வெளியில் பேசுவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. குறிப்பாக, சம்பந்தன் ஒருபோதும் எதிர்பார்த்திருக்கமாட்டார். ஏனெனில், சுமந்திரனை தன்னுடைய தளபதியாகவே சம்பந்தன் வளர்த்தார். அவருக்கு அரசியல் அனுபவம் ஏற்படுவதற்கு முன்னரேயே, அதிக பொறுப்புக்களைக் கொடுத்து, கட்சிக்குள்ளும் தமிழ் அரசியலுக்குள்ளும் முக்கிய நபராக மாற்றினார். இன்று சுமந்திரன் தமிழ்த் தேசிய அரசியலுக்குள் தவிர்க்க முடியாத நிலைக்கு உயர்ந்துவிட்டார். அதற்கு, அவரின் உழைப்பும் தற்துணிவும்கூட காரணம். அதுதான், அவரை வெகு சீக்கிரத்திலேயே வளர்த்துவிட்டது. அதுபோலவே, அவருக்கு எதிராக கட்சிக்குள் சம்பந்தன், மாவை தொடங்கி பலரும் திரும்புவதற்கும் சுமந்திரனின் தற்துணிவே காரணம்.

தமிழரசுக் கட்சியின் யாப்பினை முன்வைத்து கட்சியின் செயற்பாடுகளை நீதிமன்ற வழக்குகளினூடாக எதிர்கொண்டால், அது இப்போதைக்கு தீராது. ஏனெனில், கட்சியின் யாப்புக்கு முரணாக கட்சியின் தலைமையும் நிர்வாகமும் தொடர்ச்சியான மீறல்களைச் செய்து வந்திருக்கின்றது. ஒரு கட்சியாக காலத்திற்கு தேவையான யாப்பு மாற்றங்களை தமிழரசுக் கட்சி செய்திருக்க வேண்டும். ஆனால், அது அவ்வளவு மாற்றங்களைச் செய்திருக்கவில்லை. அப்படி செய்ய முயன்றாலும், அதற்கான பொதுக்குழு அங்கீகாரங்கள் முறையாக பெறப்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் உண்டு. குறிப்பாக, தலைவர் தெரிவில் கொழும்புக்கிளை என்று கூறி பலரும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், கட்சியின் யாப்பின் பிரகாரம், வடக்கு கிழக்கில் இருக்கும் தொகுதிக்கிளையைச் சேர்ந்தவர்களும், மத்திய குழுவினையும் சேர்ந்தவர்களும் உள்ளடங்கிய பொதுக்குழு உறுப்பினர்களே வாக்களிக்க முடியும் என்று வரையறுக்கின்றது. அப்படியான நிலையில், எப்படி யாப்பிற்குள் உள்வாங்கப்படாத கொழும்புக்கிளையைச் சேர்ந்தவர்கள் வாக்களிக்க முடியும் என்ற கேள்வி தவிர்க்க முடியாது. அதனை முன்னிறுத்தி நீதிமன்றங்களை நாடினால் விளைவு என்னவாகும்? இப்படி பல சிக்கல்களோடு தமிழரசுக்கட்சி இருப்பதாக சுட்டிக்காட்டப்படுகின்றது. 

தமிழர் விடுதலைக் கூட்டணி ஆரம்பிக்கப்பட்டதன் பின்னராக நீண்ட காலம் உறங்கு நிலையில் இருந்த தமிழரசுக் கட்சியை 2004 பொதுத் தேர்தலில் தமிழீழ விடுதலைப் புலிகள் உயிர்ப்பித்து, சம்பந்தன் -மாவை உள்ளிட்டவர்களிடம் கையளித்தனர். முள்ளிவாய்க்கால் முடிவுகளோடு விடுதலைப் புலிகளின் ஆளுகை அகற்றப்பட்டதும், தமிழரசுக் கட்சி தமிழர் அரசியலின் முதன்மைக்கட்சியாக மீண்டும் மாறியது. அதன்மூலம், சம்பந்தன் மூத்த தலைவரானார். அவர் கிட்டத்தட்ட ஏதேச்சதிகாரம் பெற்றவரானார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராகவும் அவர், பங்களிக் கட்சிகளின் கேள்விகளுக்குப் அப்பாலான ஆளுமையாக மாறியிருந்தார். அந்த நிலை காலத்துக்கும் தொடரும் என்று சம்பந்தன் நினைத்ததன் விளைவுதான், தமிழரசுக் கட்சியை மறுசீரமைப்புச் செய்யாமல் விடுவதற்கு காரணமானது. தன்னுடைய காலத்துக்குப் பின்னராக கட்சியின் எதிர்காலம் எப்படிப்பட்டது, அதற்காக என்னென்ன மறுசீரமைப்பைச் செய்ய வேண்டும் என்பது தொடர்பில் அவர் சிந்திக்கவில்லை. மாறாக, தனக்குப் பின்னர் தான் சொல்வதையெல்லாம் செய்யக்கூடிய ஒருவரைத் தலைவராக முன்னிறுத்திவிட வேண்டும் என்று மாவையை தலைவராக்கினார். அது, கட்சியை இன்னும் இன்னும் மோசமாக சிதைத்து விட்டது. அதுபோல, கட்சியின் யாப்பு என்னென்ன விடயங்களை வரையறுக்கின்றது என்பது தொடர்பில் மாவை தொடங்கி கட்சியின் முக்கியஸ்தர்கள் பலருக்கும் தெளிவில்லை. அதனால்தான், தாங்கள் நினைத்த காரியங்களையெல்லாம் செய்ய முயன்றதன் விளைவாக, கட்சி இன்று உடனடியாக தீர்க்கமுடியாத சிக்கல்களை சந்தித்து நிற்கின்றது. 

தமிழரசுக் கட்சிக்குள் இருப்பவர்களில் ஒரு பகுதியினர், கட்சியை பதவிகளை அடைவதற்கான வழியாக மட்டுமே காண்கிறார்கள். அதுபோல, தமிழரசுக் கட்சியை மொய்த்துக் கொண்டிருக்கும் வெளித்தரப்பினரில் கணிசமானவர்கள், எதிர்காலப் பதவிகளைக் குறிவைத்துத்தான் தங்களது நடவடிக்கைகளை முன்னெடுக்கிறார்கள். ஊடக முதலாளிகள் தொடக்கம் பெரும் வியாபாரிகள் வரையில் தங்களின் அதிகாரத்துக்கான ஆசையை அடைவதற்கான வழியாக தமிழரசுக் கட்சியை காண்கிறார்கள். அது, பல முறையற்ற நடவடிக்கைகள் இடம்பெறுவதற்கு காரணமாகின்றது. தமிழரசுக் கட்சியின் அதிகாரமிக்க பதவிகளைப் பிடித்துக் கொண்டிருக்க பலரும் முயல்வது, அதனை ஒரு பணம் கொழிக்கும் இடமாக பார்ப்பதனால் என்ற குற்றச்சாட்டுக்கள் உண்டு. கடந்த பொதுத் தேர்தலிலும் அதற்குப் பின்னரும் தமிழரசுக் கட்சியை வெளித்தரப்புக்களின் பணக் கொடுக்கல் வாங்கல்கள் சீரழித்ததான குற்றச்சாட்டும் உண்டு. இப்படியான குற்றச்சாட்டுக்களை தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பெரியளவில் எதிர்க்கவும் இல்லை. அந்தக் குற்றச்சாட்டுக்கள், கட்சியின் மீதான அபிமானத்தை கேள்விக்குள்ளாக்கும் நிலையில், அவற்றை எதிர்கொண்டிருக்க வேண்டும். ஆனால், அப்படியான நடவடிக்கைகள் எதனையும் கட்சி செய்யவில்லை.  மாறாக, புதிய தலைவர் தெரிவின் போதும் வெளித்தரப்புக்கள் தங்களின் அதீத தலையீடுகளை செய்தன என்ற குற்றச்சாட்டுக்களையும் சேர்த்தே எழ வைக்கும் காட்சிகள் அரங்கேறியிருக்கின்றன.

தமிழரசுக் கட்சி அடிப்படையில் இருந்து மறுசீரமைப்புப் செய்யப்பட வேண்டியிருக்கின்றது. அதில், முதலாவது கட்சியின் யாப்பு காலத்துக்கு ஏற்ப மாற்றப்பட வேண்டும். அத்தோடு, கட்சியின் தோற்றத்திற்கான இலக்கின் அடிப்படைகள் பேணப்பட வேண்டும். அதுதான், தமிழரசுக் கட்சிக்குள் தேவையற்ற குழப்பங்களை எதிர்காலத்தில் தவிர்ப்பதற்கு உதவும். "தமிழரசுக் கட்சியை பல ஆண்டுகளுக்கு நீதிமன்றப் படிகளில் ஏற்றி இறக்குவதற்கான வாய்ப்புக்கள் நிறைய உண்டு. கட்சியின் யாப்புத் தொடங்கி, நிர்வாக நடவடிக்கைகள் என்று நாளும் பொழுதும் முரணான நடவடிக்கைகளினால்தான் இன்று தமிழரசுக் கட்சி முட்டுச் சந்தை அடைந்திருக்கின்றது. இவற்றுக்கு எதிராக ஒவ்வொரு விடயமாக எடுத்து நீதிமன்றத்தை நாடினால் விடயம் இன்னும் மோசமாகும்." என்று தமிழரசுக் கட்சியின் முன்னாள் முக்கியஸ்தர் ஒருவர் இந்தப் பத்தியாளரோடு பேசும் போது கூறினார்.

தமிழ்த் தேசிய அரசியலும், தமிழரசுக் கட்சியும் தமிழ் மக்களின் அரசியல் உரிமையைப் பெறுவதற்காக தோன்றியவை. ஆனால், தமிழ் மக்களுக்கான அறத்தினை தமிழரசுக் கட்சியின் தலைவர்கள் யாரும் உணரவில்லை. மாறாக, பதவிக்கும் அதிகாரத்துக்குமான போட்டிக்களமாகவும், கருவியாகவுமே தமிழரசுக் கட்சியைக் காண்கிறார்கள். இந்த நிலை தொடர்ந்தால் தமிழ் மக்கள், தமிழரசுக் கட்சியில் மாத்திரமல்ல, தமிழ்த் தேசிய அரசியலிலும் நம்பிக்கையிழப்பார்கள். அப்போது, அரச ஒத்தோடிக் கட்சிகளும், தமிழர் விரோத சக்திகளும் தமிழ் மக்களை இலகுவாக ஆக்கிரமிப்பார்கள். அந்த ஆபத்தை தமிழரசுக் கட்சியினர் இன்னமும் உணர்கிறார்கள் இல்லை. இன்று சந்திக்கும் சிக்கல்களை எப்படி கடப்பது என்பது தொடர்பில், கட்சிக்குள்ளேயே ஒருங்கிணைவு இல்லை. மாறாக, ஏட்டிக்குப் போட்டியாக விடயங்களை கையாளும் நிலையும், விடய ஞானமற்றவர்களின் தலையீடுகளும் மாத்திரமே அதிகரித்திருக்கின்றது. இது, தமிழரசுக் கட்சியை கால காலத்துக்கும் முட்டுச் சந்துக்குள் முடக்கவே  செய்யும்.

 

 

மற்ற கட்டுரைகள் …

new-year-prediction