தாய்மொழியை உயிர்மொழியாய் கொண்டவர்கள் நம்மவர்கள். பிற மொழியையும் இலகுவில் கற்றுத்தேறும் ஆர்வமும் உடையவர்கள்.
பிரான்ஸ் உள்ளிட்ட பிரெஞ்சு மொழி பேசும் நாடுகளுக்கு சென்று வாழ விரும்பும் இலங்கையர்களுக்கான பிரெஞ்சு மொழி பயிற்சி வகுப்புகளை பிரெஞ்சு நட்புறவுக் கழகமான (Alliance Francaise de Paris) வழங்கி வருகிறது. இதன் கிளைகள் யாழ்ப்பாணம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் உள்ளது. யாழ்ப்பாணம் கண்டி வீதியில் இயங்கிவரும் அலியான்ஸ் பிரான்சே வகுப்புக்கு பயில வரும் மாணவர்களுக்கு அங்கிருக்கும் புதையல் ஒன்றை பற்றி தெரிந்திருந்தும் உபயோகிக்க தவறுகிறார்கள்.
பிரான்ஸ் நாட்டில் பிறந்து புலம்பெயர்ந்தோர் கொண்டுவரும் கதைகளில் உருகி அவர்களின் தேசத்திலே அவர்களுக்கான சேவையில் தன் வாழ்நாளை கழித்துமுடித்தவர் இக்கழகத்தின் இயக்குனர். அவரின் சொத்துக்கள் புத்தகங்களே! தன் வருமானாத்தின் பெரும்பகுதி புத்தங்கள் வாங்குவதற்கே ஒதுக்கிவிடுவாராம், சேவையிலும் எது சிறந்த தேவை எது எனப்புரிந்து செய்வது இரு பக்கத்தினருக்கும் நன்மை.
ஒரு வருடத்தில் ஒருமுறையேனும் தன் தாய் நாட்டிற்கு பயணித்து திரும்புகிற போது தனது ஒரு பயணப்பை நிறைய புத்தகங்களை நிரப்பி இங்கே கொண்டு சேர்த்துவிடுவதை வழக்கமாக்கியதால் யாழ்ப்பாண பொது நூலகத்தைப் போன்ற பிரமிப்பை இவ்விடம் தருவது உண்மை.
பிரதான கண்டி வீதியில் தனி ஒரு மாடி வீடாக அமைந்திருக்கும் இக் கிளையில் இரு மாடிகளிலும் மர ராக்கைகளில் புத்தகங்கள் அடுக்கப்பட்டுள்ளன. பிரஞ்சு மொழி புத்தகங்கள் மட்டுமன்றி தமிழ், ஆங்கிலம் உள்ளிட்டவை இங்கு உள்ளன. முக்கியமாக ஈழத்து எழுத்தாளர்களினால் படைக்கப்பட்ட சில நூல்களும் உள்ளன. தவிர மாதந்த சஞ்சிகளைகள்(பிரஞ்சு, ஆங்கிலம்) , சிறார்களுக்கான பிரஞ்சு, ஆங்கில மொழி புத்தகங்களும் அடங்குகிறது.
இதனுள் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய இன்னுமொரு தகவலும் உண்டு. இங்குள்ள அனைத்து புத்தகங்களும் பழுதடையாது பாதுகாப்பாக இருக்கவேண்டிய அவசியம் கருதி புத்தகங்களின் அட்டைகள் பொலீத்தின் உரை போடப்பட்டு பேணப்படுகிறது. இவை எல்லாம் அங்கே வரும் தூய்மை பணியாளர்களால் கவனமாக செய்விக்கப்படுகிறது. கோவிட் பெருந்துதொற்றுக்கு முன்புவரை நூலக நடைமுறையில் அங்கத்தவர்களாக பதிவு செய்யபவர்கள் புத்தகங்களை வாடகைக்கு எடுத்துச்செல்லும் சந்தர்ப்பம் இருந்துவந்தது. தற்போது அந் நடைமுறை நிறுத்திவைக்கப்பட்டிருந்தாலும் நேரடியாக சென்று சிறிது நேரம் புத்தகங்களில் மூழ்கி இருப்பதற்கான நற் சூழல் உள்ளது.
ஒரு மொழியை பயில பயிற்சியுடன் வாசிப்பும் அவசியமாகிறது. பிரஞ்சு மொழி கல்வியை பயில முனைபவர்கள் வாசிக்கும் ஆர்வமுடைவர்களாயின் இக்களஞ்சியத்தில் பயன் பெற தவறாதீர்கள். வாசிக்கும் நோக்கம் மட்டுமே என்றாலும் இப் புதையலுக்குள் தொலைந்து போகலாம். வாசிக்கும் பழக்கத்தை வீட்டிலிருந்து கூட ஆரம்பிக்கலாம்.
- 4தமிழ்மீடியாவிற்காக : ஹரினி