free website hit counter

முரண்பாடுகளில் சிக்கிய இந்தியாவும் ஐரோப்பிய நாடுகளும் : பேரா. பிரபாத் பட்நாயக்

மருத்துவம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தற்போது பரவி வரும் இந்த கொரோனா வைரஸ் தொற்றானது, சமகாலத்திய உலகமயமாக்கலின் அடிப்படை முரண்பாட்டை மிகத் தெளிவாக முன்னிலைப்படுத்தியுள்ளது. மக்களின் நலனுக்கும் நிதி மூலதனத்தின் நலனுக்கும் உள்ள முரண்பாடு என்ன என்பது தற்போது மிகத் தெளிவாக அம்பலப்பட்டு நிற்கிறது. உண்மையில், இந்த முரண்பாடு என்பது ஒட்டுமொத்த உலகமயமாக்கலின் அடிப்படை குணாம்சத்தினை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. மேலும், இதற்கு முடிவு கட்ட ஏதாவது செய்தாக வேண்டும் என்பதை அறிவுறுத்தியுள்ளது. இது உலகில் இப்படி உலகமயமாக்கலுக்குக் கட்டுண்டுள்ள ஒவ்வொரு நாட்டிலும் அம்பலமாகியுள்ளது.

அரசாங்கம் செய்யாது

இந்தியாவை எடுத்துக் கொண்டால், திடீரென்று பல இலட்சக்கணக்கான மக்கள் வேலையில்லாமல் வீதிகளில் தூக்கி எறியப்பட்டுள்ளனர். தங்களுடைய சொந்த இடத்தை விட்டு, வெகு தொலைவில் உள்ள இடங்களுக்குச் சென்று வேலை பார்த்து வந்த இலட்சக்கணக்கான புலம் பெயர் தொழிலாளர்கள் நாடோடிகளாக்கப்பட்டுள்ளனர். வெகு சொற்பமான பணத்துடன் அல்லது ஒன்றுமே இல்லாமல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இன்றைக்கு மிக முக்கியமாகத் தேவைப்படுவது அரசாங்கத்தின் உதவி. இதற்கு அரசாங்கம் பொதுச் செலவினங்களை அதிகரிக்க வேண்டும். அதற்கு அரசு தனது நிதிப் பற்றாக்குறையை விரிவுபடுத்த வேண்டும். ஆனால், அரசாங்கம் இதனை செய்யாது. ஏனென்றால், உலகம் முழுவதும் பாய்ந்தோடிக் கொண்டிருக்கும் சூடான நிதி மூலதனம் இதனை விரும்புவதில்லை.

அதனால் தான் நிதியமைச்சர், இவர்களுக்கெல்லாம் உதவுவதற்கென்றுஒ சில உதவி நடவடிக்கைகளை, ஏற்கனவே பட்ஜெட்டில் அறிவித்திருந்தவற்றையே மறு பார்சல் செய்து அறிவித்துள்ளார். வெறும் 92000 கோடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பணமாக 34000 கோடிகள், ரேஷன் விநியோகம் மூலமாக 45000 கோடிகள், கேஸ் சிலிண்டர் விநியோகம் என்று 13000 கோடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு சுதந்திரமடைந்த பிறகு நாம் சந்திக்கும் மிக மோசமான சூழல் இது. இந்தச் சூழலில், நிதியமைச்சரின் இந்த அறிவிப்பு என்பது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 0.5 சதம் மட்டுமே ஆகும். இதற்கு முக்கிய காரணம் அரசாங்கம் பொதுச் செலவினங்களை அதிகப்படுத்துவதன் மூலமாக நிதிப்பற்றாக்குறையை விரிவுபடுத்தத் தயாராக இல்லை என்பது தான்.

நிதி இல்லாமல் இல்லை

இன்றைக்கு அரசாங்கத்திடம் விநியோகத்திற்கு தயார் நிலையில் கையிருப்பில் 58 மில்லியன் டன்கள் உணவு தானியங்களும், ராபி பருவ உணவு தானியங்களையும் சேர்த்து மொத்தம் 77 மில்லியன் டன் உணவு தானியங்கள் உள்ளது. இது வரை இல்லாத அளவிற்கு அந்நிய செலாவணி கையிருப்பு அரை டிரில்லியன் டாலர் அளவிற்கு அரசாங்கத்திடம் இருக்கிறது. இந்த பின்னணியில், தற்போதைய சூழலில், நிதிப் பற்றாக்குறையை விரிவுபடுத்துவதால் நாட்டின் பொருளாதாரத்திற்கு எந்த பெரிய தீங்கும் நேரிட்டுவிடாது.

அப்படியானால், அரசுக்கு என்ன பயம்? நிதிப்பற்றாக்குறையை விரிவாக்கிவிட்டால், சந்தையின் நம்பகத்தன்மையை மதிப்பீடு செய்து தரம் நிர்ணயிக்கும் முகமைகள் இந்தியாவின் தரத்தினை முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெறும் அளவிற்கு உயர்த்துவதற்கு பதிலாக தரக்குறைவு செய்துவிடும் என்பதேயாகும். இதனால், மேலும் ரூபாயின் மதிப்பு குறைந்து போகும், அதன் தொடர் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்ற அச்சம் அரசாங்கத்திற்கு எழுகிறது.ஆனால், இப்படிப்பட்ட ஒரு சிக்கல் தீர வேண்டுமானால், நமது நாட்டிற்குள்ளிருந்து மூலதனம் வெளியேறுவதனை தடுப்பதற்கான சில கட்டுப்பாட்டு விதி முறைகளை நிர்ணயிக்க வேண்டும். தற்போதைய இந்த நெருக்கடியான காலக்கட்டத்திலாவது, இந்துத்துவா அரசாங்கமாகவே இருந்தாலும் கூட, இந்த நடவடிக்கையை எடுப்பதில் தாமதிக்கக்கூடாது. ஆனால், சர்வதேச நிதி மூலதனம் வைத்திருக்கும் பிடி அத்தகையது. அரசாங்கத்தின் கழுத்தை நெரிக்கும் அளவிற்கான கிடுக்கிப்பிடியை அது வைத்துள்ளது. இதன் காரணமாக, அரசாங்கத்தால் இந்தக் கட்டுப்பாடு குறித்து சிந்திக்கக் கூட முடியவில்லை. இதற்காக மக்களின் நலன்களை அது காவு கொடுக்கிறது.

கைகள் கட்டப்பட்ட மாநில அரசுகள்

சர்வதேச நிதி மூலதனத்தை கண்டு மத்திய அரசாங்கம் அச்சப்படுகிறது. இந்த கோழைத்தனத்தின் காரணமாக மாநில அரசாங்கங்களின் கைகளும் கட்டப்பட்டுள்ள நிலையில் உள்ளன. இன்றைக்கு மாநில அரசாங்கங்களுக்கு ஏராளமான நிதி தேவைப்படுகிறது. ஆனால், சமீப காலமாக நிதி ஆதாரம் என்பது மையப்படுத்தப்பட்டுவிட்டதன் காரணமாக, பொருட்களுக்கான வரி விதித்தலில் கூட, மத்திய ஜிஎஸ்டி கவுன்சிலின் அனுமதியை வாங்க வேண்டியுள்ளது. மத்தியிலிருந்து மாநில அரசாங்கங்களுக்கு மாற்றி அனுப்பும் நிதிக்காக காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. மத்திய அரசாங்கத்தின் தயவினை எதிர் நோக்கியிருக்க வேண்டிய நிலையே இன்று மாநிலங்களுக்குள்ளது.

இன்னும் சொல்லப் போனால், மாநில அரசாங்கங்கள் எவ்வளவு கடன் வாங்கிக் கொள்ளலாம் என்பது கூட மத்திய அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சர்வதேச நிதி மூலதனத்தால் முடக்கப்பட்டுள்ள மத்திய அரசாங்கம், நிதிப்பற்றாக்குறையால் அவதிப்பட்டால் மாநில அரசாங்கங்களும் அவதிப்பட வேண்டியுள்ளது. மத்திய அரசாங்கத்தின் கோழைத்தனத்தின் காரணமாக, மக்களின் நலன்களை மேம்படுத்துவதற்கான பொதுச் செலவினம் என்பது அனைத்து மாநிலங்களிலும் குறைக்கப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

சிக்கிக்கொண்ட ஐரோப்பிய நாடுகள்

இதையே தான் நாம் ஐரோப்பாவிலும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். தெற்கு ஐரோப்பாவின் பல நாடுகள் ஸ்பெயின், இத்தாலி உட்பட இந்த நோய் தொற்றினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 28 நாடுகளை உள்ளடக்கியது “பான் யூரோப்பியன் நாடுகள்” என்பது. இதில் 23 நாடுகள் ஐரோப்பிய யூனியனை சார்ந்தவை. (அல்பனினா, அர்மேனியா, ஆஸ்திரியா, பெல்ஜியம், பல்கேரியா, குரோடியா, டென்மார்க், எஸ்தோனியா, பிரான்ஸ், பின்லாந்து, ஜெர்மனி, கிரீஸ், அயர்லாந்து, இத்தாலி, லாத்வியா, லக்ஸம்பர்க், நெதர்லாந்து, போலந்து, போர்ச்சுகல், ரொமானியா, ஸ்லோவாகியா, ஸ்லோவேனியா, ஸ்பெயின், ஸ்வீடன், ஸ்விட்சர்லாந்து, துர்க்கி, இங்கிலாந்து மற்றும் உக்ரைன்). ஒவ்வொரு நாடும் தனது செலவினங்களை அதிகரிப்பது என்பது அந்த நாடுகளில் மிக மிக அதிகமாக கடன் சுமையை உயர்த்தும் என்ற அடிப்படையில் பான் யூரோப்பியன் அமைப்பின் மூலமாக யூரோ பத்திரங்களாக அறிவிக்கலாம் என்ற ஆலோசனை முன் வைக்கப்பட்டது.

அதாவது இத்தாலி, ஸ்பெயின், இது போல தேவைப்படும் நாடுகளின் சார்பாக இதனை செய்வது என்ற ஆலோசனை இத்தாலியால் முன்வைக்கப்பட்டபோது, ஜெர்மனியும் நெதர்லாந்தும் இதனை எதிர்த்தன. தற்போது யூரோ மண்டலத்தில் ஜெர்மனியின் நிதி மூலதனம் தான் கோலோச்சிக் கொண்டிருக்கிறது. இதற்கு முன்னால் கிரீசில் நெருக்கடி ஏற்பட்ட போது கிரீசின் கடன்களை மறு அட்டவணை செய்து திருப்பிச் செலுத்த வேண்டிய கால நேரங்களை தள்ளி வைப்பது உட்பட சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற ஆலோசனை முன்வைக்கப்பட்டது. அப்போதும் ஜெர்மனியின் நிதி மூலதனம் இதனை கடமையாக எதிர்த்தது. அதே போல தற்போதும் ஜெர்மனியின் அதிபர் ஏஞ்சலா மெர்க்கெல், ”பொதுச் செலவினங்களை அதிகரித்து நாட்டின் நிதிப்பற்றாக்குறையை அதிகரிப்பது போன்ற துணிகர நடவடிக்கைகளில் ஈடுபடுவது என்றால் அதை அந்தந்த நாடுகள் செய்து கொள்ள வேண்டும், இதனை பொதுமைப்படுத்தி அனைத்து நாடுகளும் சேர்ந்து சுமக்க முடியாது” என்று கூறி மறுத்துள்ளார். இது தான் நிதி மூலதனத்தின் விருப்பம்.ஒரு நூற்றாண்டுக்கு முன்பு, முதலாம் உலகப் போரை முடிவிற்குக் கொண்டு வர போடப்பட்ட அமைதி ஒப்பந்தமான வெர்சைல்ஸ் ஒப்பந்தம் ஜெர்மனிக்கும் நேச சக்திகளுக்கும் இடையிலான போர் நிலையை முடிவுக்குக் கொண்டு வந்தது. முதலாம் உலகப் போருக்குப் பின்பு ஜெர்மனியின் பொருளாதாரம் சரிவினை சந்தித்த போது, அங்கு நாசிசம் வளர்ந்து உலகுக்கே அச்சுறுத்தலாக மாறியதை சுட்டிக் காட்டி, சர்வதேச பொருளாதார வல்லுநர்களும், அறிவு ஜீவிகளும் ஏஞ்சலா மெர்க்கெல்லிடம் இந்த ஆலோசனையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்ட போதும், ஜெர்மனியின் நிதி மூலதனம் சம்மதிக்கவில்லை என்பதால், இந்த ஆலோசனை ஜெர்மனியால் மறுக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது கம்யூனிஸ்ட் அகிலத்தின் போது, லெனின் தனது உரையில், உலகில் புரட்சிக்கான சூழல் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்று பேசியது தற்போது நம் நினைவிற்கு வருகிறது.

இந்த சூழலில், சர்வதேச நிதி நிறுவனத்திடம் (IMF) மூன்றாம் உலக நாடுகள் மேலும் கடனை பெறுவதற்காக அணுகியுள்ளன. அப்போது, தற்போதைய நிலவரத்தைச் சுட்டிக் காட்டி, கடன் திருப்பிச் செலுத்த வேண்டிய கால அவகாசங்கள் மற்றும் நிபந்தனைகளை மாற்ற வேண்டும் எனவும், தளர்த்தப்பட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளன. உண்மையில், ஐஎம்எப்-பின் நிதி நிலவரம் இன்றைக்கு அத்தனை நாடுகளுக்கும் கடன் கொடுக்கும் அளவில் இல்லை. எனவே, கடன் கொடுப்பவர்கள் மற்றும் நோய் தொற்றுக்கு ஆளாகி தவிக்கும் சாதாரண மக்கள் என இரு தரப்பினரின் நலன்களையும் பாதுகாக்கும் வகையில் ஐஎம்எப்-ஆல் செயல்பட முடியவில்லை. மேலும், ஒரு வேளை ஐஎம்எப் மூன்றாம் உலக நாடுகளின் கடன்களை மறு வரையறை செய்தாலும், அதனால் மிச்சமாகும் நிதி இந்த நாடுகளில் உள்ள உழைப்பாளி ஏழை மக்களுக்கு உதவுவதற்கு போதுமானதாக இருக்காது என்பது தான் உண்மை நிலவரம்.

முற்றும் முரண்பாடு

இவ்வாறாக, உலக அளவில் இன்று நிதி மூலதனத்திற்கும் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள சாதாரண மக்களுக்கும் இடையிலான முரண்பாடு என்பது கடுமையாகி மைய நிலைக்கு வந்து கொண்டிருக்கிறது. பொதுவாக, “உயர் வளர்ச்சி விகிதங்கள்”, “நாட்டின் செல்வாதாரங்கள் வளர்ந்துள்ளன” என்பது போன்ற சொல்லாடல்களால், ஏதோ இவை, ஒட்டுமொத்த தேசத்திற்கும் அதன் சட்டப்பூர்வ பிரஜைகளாக உள்ள அனைத்து மக்களுக்கும் நன்மை பயப்பது போன்று சித்தரிக்கப்பட்டு இந்த முரண்பாடானது மறைக்கப்படுகிறது, மறைக்கப்பட்டு வந்துள்ளது. இந்த உண்மை தான் நிதி மூலதனத்தின் நலன் என்பது ஒட்டு மொத்த நாட்டின் – நாட்டு மக்களின் நலனோடு ஒத்தது என்று சித்தரிக்கப்படுவதற்கான காரணமாகும்.

இந்த வெளிப்பூச்சு வேலை, தற்போது எழுந்துள்ள உலகப் பொருளாதார நெருக்கடியின் பின்னணியில், மெல்ல மெல்ல தகர்ந்து கொண்டிருக்கிறது. வட்டி விகிதங்களை குறைப்பதால் மட்டும் உலகப் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு விட முடியாது என்பது தெளிவாகியுள்ளது. உண்மையில் இன்று தேவைப்படுவது நிதியூக்கி தான். அதாவது பொதுச் செலவினங்களை அதிகரிப்பது என்பது தான் தற்போதைய அவசிய அவசரத் தேவையாகும். சர்வதேச நிதி மூலதனத்தின் ஆளுமையின் கீழ் ஆட்பட்டுக் கொண்டிருக்கும் எந்தவொரு நாட்டின் அரசாங்கத்தாலும், நிதி மூலதனத்தின் கழுத்தை நெரிக்கும் கட்டுப்பாட்டிற்குள் இருந்து கொண்டு, இதனை செயல்படுத்த முடியாது. அப்படி ஏதேனும் ஒரு அரசாங்கம் செய்யத் துணிந்தால், உடனே சர்வதேச நிதி மூலதனம் அந்த நாட்டை விட்டு வெளியேறி, மேலும் கடுமையான சிக்கல்களை உருவாக்கிவிடும்.ஆனால், நாம் இப்போது ஒன்றினை கவனிக்கத் தவறக்கூடாது. நிதி மூலதனத்தின் நலனும் ஒட்டு மொத்த நாட்டின் – நாட்டு மக்களின் நலனும் ஒத்தது என்ற சித்தரிப்பில் உள்ள சூனியம் - போலித்தனம் இன்று மிகத் தெளிவாக அம்பலப்பட்டு போயுள்ளது. மேலும், மேலும் அவதிப்படும் மக்களுக்கு உதவ வேண்டிய அவசரத் தேவை எழுந்து கொண்டிருக்கும் சூழலில், அதற்குத் தடையாக இருக்கும் நிதி மூலதனத்தின் சர்வாதிகாரத்தினை, இனிமேலும், “உயர் வளர்ச்சி விகிதங்கள்”, “நாட்டின் செல்வாதாரங்கள் வளர்ந்துள்ளன” என்பது போன்ற சொல்லாடல்களால் மறைக்க முடியாது. தீவிரமடைந்து வரும் இந்த முரண்பாடு வரும் நாட்களில் சர்வதேச நிதி மூலதனத்தின் மரணத்திற்கான சாவு மணியாக மாறும்.

(பீப்பிள்ஸ் டெமாக்ரசி)
தமிழில்: ஆர்.எஸ்.செண்பகம்

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction