free website hit counter

அவளும் அவளும் – பகுதி 4

கதைகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ராசத்தின் குரல் வீட்டினுள்ளிருந்து கேட்கிறது..” பொறு தம்பி வாறன்..!”.

ராசத்தின் வீடு எனச் சொல்லப்படுவது மூன்று பகுதிகள் கொண்டது. பெரிய வீடு, தலைவாசல், குசினி அல்லது அடுக்களை. இவை மூன்றும் தனித்தனியான கூரைகளும், சுவர்களும் கொண்டவை. “சிறுகக் கட்டிப் பெருக வாழ் “ என்ற சிந்தனையில் வாழ்ந்தவர்களளான ராசத்தின் பெற்றோர்கள் சின்னத்தம்பியும், கமலமும் சிறுகச் சிறுகச் சேர்த்தமைத்த பெருவீடு.

வீட்டின் மூன்று பகுதிகளும் அமைந்துள்ள ‘முன்வளவு’ எனச் சொல்லும் நிலப்பரப்பு ஒழுங்கையொன்றால் பிரதான வீதியுடன் தொடர்புபட்டிருந்தது. வீட்டிற்குப் பின்னுள்ள நிலத்தைப் ‘பின்வளவு’ என்றார்கள். முன்வளவில் இருந்த வீட்டின் பகுதிகள் ஒன்றையொன்று பார்க்கும் வகையில் இருந்தன. மூன்று பகுதிகளுக்கும் நடுவில் முற்றம் இருந்தது. குசினிக்கு முன்னால் கோடு போல் ஒரு வேலி, குசினியை மறைந்தவாறு நின்றது.

ராசம் பிறக்கும் போது மண் சுவருடனும், பனை ஓலைக் கூரையுடனும் இருந்த வீட்டின் பகுதிகள், கற்சுவராகவும், ஓட்டுக் கூரைகளாகவும் இப்போது வளர்ந்திருந்த போதும், வீட்டின் வடிவத்தில் பெரிதும் மாற்றமில்லை. அவர்களது வாழ்வியலுக்கு அது வசதியாகவும் இருந்திருக்க வேண்டும்.

பெரியவீட்டில், இரு அறைகளும், முன் திண்ணையும் இருந்ததன. அதில் ஒன்றில்தான் அவர்களது பெரிய அறை எனும் சாமிபட அறை இருந்திருக்க வேண்டும். பெரிய வீட்டினுள், ராசத்தின் குடும்பத்தவர்களைத் தவிர யாரும் உட் செல்வதில்லை. வீட்டிலுள்ளவர்களும், பெரிய வீட்டிற்குள் செல்வதாயின், வெளியே வாசலில், வாளியில் வைக்கப்பட்டிருக்கும் நீரில் கால் கழுவிய பின்னர்தான் உள்ளே போவார்கள். மொத்தத்தில் பெரிய வீடென்பது அவர்களுக்கு கோவில்.

 

“ அம்மா …! “ தலைவாசலில் நின்ற முகுந்தன் பெரிய வீட்டை நோக்கிக் குரல் கொடுத்தான்.

“ஓம், தம்பி…! திடீரென வெளிக்கிடென்டா என்னென்டப்பு. ?” வெளியே வராமலே பதில் சொன்னாள் ராசம். அவள் குரலில் பதற்றமும் பயமும் விருப்பமின்மையும் கலந்தொலித்தது.

“எனக்குத் தெரியாது. அண்ண வந்தால் என்னோடதான் ஏறுவான்.. எவ்வளவு கெதியா ஏலுமோ.. வெளிக்கிடுங்கோ..”

அது ஒரு பெரும் வலி. சொந்த வாழ்விடம் விட்டு விலகிச் செல்வதென்பதும், அதிலிருந்து மீண்டுவருவதென்பதும் ஆறாப் பெருந்துயர்.
அந்தப் பெரு ரணத்தின் எரிச்சலோடு, வாசலால் எட்டிப்பார்த்த ராசம் “எப்ப திரும்பி வருவம் தம்பி..? "

“ஆருக்குத் தெரியும்” தோளில் கொழுவும் பையொன்றில் எதையோ திணித்துக் கொண்டிருந்தவன் கவனம் திருப்பாமலே சொன்னான்.அவனது குரலிலும் வெறுப்பும், பீதியும் கலந்திருந்தன.

உடுப்புக்கள் அடுக்கின பையொன்றுடன் ராசம் வெளியே வந்தாள். அப்போதான் வசந்தனும் முகத்தில் கலவரத்தோடு முற்றத்துக்கு வந்தான்.

“வெளிக்கிட்டாச்சே…?” இயலாமைமையை பார்வையாக்கினாள் ராசம்.

“இன்டைக்கே வெளிக்கிடோனுமே…”

“ஓம்.. இப்பவே வெளிக்கிடோனும்..” அவன் முகத்திலும் பரபரப்பும் பயமும் ஒட்டிக்கிடந்தன.

“என்ர முருகா இது என்ன சோதனை..? “இயலாமையை பிரார்த்தனையாக வைத்தாள் ராசம். முகுந்தன் தாயை பரிதாபமாகப் பாரத்தான்.

“ஆமி முன்னேறத் தொடங்கிற்றுதாம். சனத்தை வெளியேறச் சொல்லிப் போட்டினம்…. சனம் வெளிக்கிடத் தொடங்கிற்று..நான் எல்லா வடிவா விசாரிச்சிட்டுத்தான் வாறன்..” வார்த்தையில் பரபரத்தான் வசந்தன்.

வேற வழியில்லை என்பது புரிந்திருக்க வேண்டும் ராசத்திற்கு. ஏதும் சொல்லாமல் வீட்டினுள் போனால்.

பிராதான வீதியில் ஒலிபெருக்கியின் அறிவிப்பு கேட்டது.

“அம்மா நடப்பாவே ?...” முகுந்தன் சந்தேகித்தான்.

“ ஏன்..?. நடக்கத்தான் வேணும். றோட்டில அம்மாவவிட வயசான ஆட்களெல்லாம் நடக்கினம்.. போய் பார்…” வெறுப்பான வார்த்தைகளுள் வேதனையை மறைத்தான் வசந்தன்.

“அண்ண கோவிக்காத. அம்மா கந்த சஷ்டி விரதம் பிடிச்சவ. ஆறுநாளும் மிளகு தண்ணியோட இருந்து, இன்டைக்குத்தான் பாறணை பண்ணினவா. களைச்சுப் போயிருப்பா..” வயதுக்கு மீறி முகுந்தன் யோசித்தது புரிகையில் வசந்தனுக்கு சங்கடமாகவிருந்தது. மௌனமாயிருந்தான்.

ராசத்துக்கு கல்யாணமான அடுத்த வருஷமே, புழு, பூச்சி ஒன்டும் இல்லையே..? என்ன குஞ்சு குருமானக் காணம்..? என்று ராசத்தின் தாய் கமலத்திடம் ஊரும் உறவுகளும் தொடுத்த கேள்வி ராசத்துக் கேட்டிருந்தது. இப்பதானே கலியாணம் நடந்தது. எல்லாம் காலதிகாலத்தி வரும்.. எனக் கேள்விகளுக்குப் பதில் சொன்னாலும், கமலத்தின் மனதிலும் அச்சமோ, ஆசையோ இருத்திருக்க வேண்டும். “ பிள்ளை நீ ‘கந்தசட்டிவிரதம்’ பிடியன்..” என ராசத்தின் காதில் ஓதினாள்.

அடுத்த வருடத்தில் வசந்தன் பிறந்தான். கமலத்தின் ஓதலும், ராசத்தின் விரதமும் பலித்ததாக இருவரும் நம்பினார்கள். விரதமும் தொடர்கிறது.

“எனக்கும் விளங்குது. என்னசெய்யிறது காசு குடுத்தாலும் இப்ப ஆரும் வாகனம் கொண்டு வரப்போறதில்ல. எல்லாரும் எங்களப் போலத்தான் அந்தரிக்கினம்…” எனக் கூறிய முகுந்தனை ஏறிட்டான் வசந்தன். தம்பியாக இருந்தாலும் அவன் சொல்வது சரியென்பதும், நிறையவே யோசிக்கினறான் என்பதும் புரிந்தது.

“என்ன செய்யலாம்..?”

“அம்மா.. ! “ என்றபடி வந்தாள் செல்லாச்சி.

அவளுக்கு முன்னே சக்கர நாற்காலியில் இருந்தான் வேலன். செல்லாச்சி அவனைத் தள்ளியபடியே வந்தாள்.
வேலன் செல்லாச்சியின் கணவன். நடக்க இயலாதவன். ஒரு காலத்தில் நடையாய் நடந்தவன். மரமேறும் போது தவறி விழுந்ததில் முதுகெலும்பில் முறிவு. கடந்த சில வருடங்களாக யாரோ ஒருவர் அளித்த உதவியில் ஊர்ந்து திரிபவன்.

இதென்னடா புதுப்பிரச்சினை என்பதுபோல வசந்தனும், முகுந்தனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.

“என்ன செல்லாச்சி..இப்பிடியொரு இடிவிழுந்திருக்கு..?” எனச் சொல்லியவாறு வெளியே வந்தாள் ராசத்தின் கையில் இப்போது இன்னுமொரு பை இருந்தது.

“அம்மா எத்தின பாக் கொண்டரப் போறியள்..?” வசந்தன் சற்று உரத்தே கேட்டான்.

“என்ன செய்ய.. ? எதை எடுக்கிறது… எத விடுறது என்டு தெரியேல்ல.. எல்லாம் குழப்பமாக் கிடக்கு..” ராசமும் உரத்த குரலிலேயே அலுத்துக் கொண்டாள்.

“சைக்கிளில எல்லாச் சாமானையும் எப்பிடிக் கொண்டு போறது.. என்டுதான் அம்மா…” முகுந்தன் இழுத்தான்.

அங்கே சற்று நேரம் நிலவிய அமைதியைக் குலைத்தான் வேலன்.

“ஐயா ! எங்கட கொட்டில்ல ஒரு இரும்புக் கரியல் கிடக்கு. முந்தி சந்தைக்கு வாழைக்குலை கட்டியிழுத்தனான். என்ர நிலைம இப்பிடிப் போனாப்பிறகு அது தேடுவாரற்று கிடக்கு.. செல்லாச்சி நீ ஒடிப் போய் எடுத்திட்டு வா..,” யாரிடமும் எதுவும் கேட்காமல் முடிவாகச் சொன்னான். செல்லாச்சி எல்லோரையும் பார்த்தாள். ஒரு பேச்சும் இல்லை என்பதால் எடுத்து வர ஓடினாள்.

அவள் தலைமறைந்ததும் வேலன் ராசத்தைப் பார்த்து “ அம்மா..! “ என்றான். ராசம் அவனை நிமிர்ந்து பார்க்க

“ அவளுக்குச் சொன்னா விளங்குதில்ல. என்னை இந்தக் கதிரையோட எவ்வளவு தூரம் கூட்டிக் கொண்டு போகேலும். கஸ்டப்படுவாள் பாவம்...நான் இங்க நிக்கிறன். நீங்க அவளக் கூட்டிக் கொண்டு போங்க…. “ என்றபோது வேலனின் குரல் சற்றுத் தழுதழுத்தது .

“ உன்ன விட்டிட்டுப் போனாலும் அவள் கஸ்ரப்படுவாள்தானே..? “ பெண்ணாகப் பேசினாள் ராசம்.

“ஓம்.. ஆனா ….”

“விளங்குது வேலன். நீ அவளின்ர கஸ்டத்த யோசிக்கிறாய். அவளின்ர மனக் கஷ்டத்தை நான் சொல்லுறன்…” என இடைமறித்தாள்.

வேலன் மௌனமானான். உடம்பின் வலியை விட, உள்ளத்தின் வேதனை பெரிது என்பது அவனுக்கும் தெரியும். மனதை மத்தாப்பாக எண்ணி எரித்துவிடும் சூதுவாது படிக்காதவன் அவன்.

பிரதான வீதியில் சனங்களின் சத்தம் அதிகமாகக் கேட்டது. ஒலிபெருக்கி அறிவிப்பு பெருஞ்சத்தமாய் அலறியது. வாகனங்களின் இரைச்சலும், புகை மணமும், காற்றில் நிறைந்தது. இவையெல்லாம் இணைந்து, ஒரு பெருந்துயரத்தின் பாடலுக்குச் சுருதி சேர்த்தன. பிள்ளைகள் இருவரது முகத்திலும் அவசரம்.

செல்லாச்சி இரும்புக் கரியலுடன் திரும்பினாள். அவளுடன் இப்போது அவர்களின் வைரவன் வந்திருந்தது. வைரவன் நல்ல கறுப்பாகவும் உயரமாகவும் இருந்தான். வெளிநாட்டுக்குப் போன யாரோ ஒருவர் குட்டடியாக் கொடுத்த உயர் இனம். இப்போது பெரிதாகிவிட்டது. பார்பதற்கு ஓநாய் போலவுமிருந்தது.

செல்லாச்சி கொண்டு வந்த கரியர் நல்ல பெரிதாகவும் உறுதியாகவும் இருந்தது. வாங்கிப் பார்த்த சகோதரர்கள் திருப்தியை வெளிப்படுத்தினார்கள்.

“அந்த நாளையில ஒரே தரத்தில அஞ்சாறு குலை கட்டிப் போவன்..” பெருமை பேசினான் வேலன். யாரும் அதனை ரசிக்கவில்லை. அந்த மனநிலை எவருக்கும் இப்போதில்லை என்பது அவனுக்கும் புரிந்தது.

முகுந்தனின் சைக்கிளில் முன் பகுதி கைபிடியில் மட்டும் ஸ்டைலாக ஒரு சிறு கரியர் இருந்ததனால், பின்புறத்தில் வேலனின் பெரிய இரும்புக் கரியரைப் பொருத்தினார்கள். சைக்கிளின் தோற்றம் மாறியது. முகுந்தனால் அதை ரசிக்க முடியவில்லை. வேலன் திருப்திப்ட்டுக் கொண்டான்.

“சின்னத்தம்பி ஐயா!..” வேலனின் அழைப்பிற்கு முகுந்தன் கவனம் கொண்டான். அது அவனுக்கான அழைப்புத்தான்.
அவனை வேலன் அவ்வாறு அழைப்பதற்கு இருவேறு காரணங்கள். “உரிச்சுப்படைச்சு பேரன் சின்னதம்பியரப் போலவே வந்திருக்கிறான்…” என உறவுகள் முகுந்தனைக் கொண்டாடியது ஒரு காரணமென்றால், வேலனைப் போன்ற குடிமைகள், அவர்களைப் பெயர் சொல்லி அழைக்காத வழமை மற்றையது.

“ஒரு தலைகணிய இதுக்கு மேல வைச்சுக் கட்டிவிட்டா, அம்மாவுக்கு அண்டாது..”

முகுந்தன் தலைவாசலுக்குப் பின்னாலிருந்த அறையிலிருந்து ஒரு தலையணை எடுத்து வந்து கரியலில் கட்டினான்.

“அம்மாவுக்கு சீட் ரெடி..” என்றான் வேலன்.

ராசம் இப்போது இன்னும் இரண்டு பைகளைக் கொண்டு வந்தாள்.

“அம்மா....மா…” என அழுத்தினான் முகுந்தன். அதற்கான காரணம் ராசத்திற்குப் புரிந்தது.

“தம்பி பாறணைக்குச் சமைச்ச சாப்பாடு மிச்சமாக் கிடக்கு. இந்தக் கூடையில கொஞ்சம் எடுத்து வைச்சிருக்கிறன். வழியில ஆருக்கும் குடுக்கலாம். அநியாயம்தானே…? “ அடுத்து வரும் இருநாட்களுக்கு அதுதான் சாப்பாடு என்பது அவளுக்கும் அப்போது தெரிந்திருக்கவில்லை.

வேலனுக்கும் செல்லாச்சிக்கும் பெரும் வாக்குவாதம் நடந்தது. ராசம் செல்லாச்சியின் பக்கமே நின்றாள். இந்த நேரத்தில் இது வேறயா..? என எண்ணிக் கொண்ட பிள்ளைகள் தவிர்க்க முடியாத தொந்தரவாக உணர்ந்தார்கள்.
செல்லாச்சியின் விருப்பம் முடிவானது.

வசந்தனும், முகுந்தனும், சைக்கிள்களில் பைகளை ஏற்றினார்கள். கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. நடக்கலாம் என்ற நம்பிக்கையுடன் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.

செல்லாச்சி வேலனைச் சக்கரநாற்காலியோடு நகர்த்தினாள். அதன் பின்புறத்தில் கொழுவியிருந்த இரண்டு பைகளுடன் தண்ணிக் கானையும் சேர்த்துக் கொழுவினாள்.

போகலாம் என பிள்ளைகள் தயாரான போது, மாட்டுக் கொட்டில் பக்கமிருந்து, வந்த ராசம் ‘இலக்சுமி’ யுடனும், கன்றுடனும் வந்தாள்.

“அம்மா... இதென்னம்மா..?”

“வாயில்லாச் சீவன்கள். விட்டிட்டுப் போகேலுமே..? ”

“விட்டிட்டுப் போகேலுமே…?” இராசத்தின் கேள்வி பேரலையாய் எழுந்து வந்து, எல்லாவற்றையும் மூடியது. சூழல் இருண்டு சூனியமானது போலிருந்தது. அழுகைகளும், கதறல்களும், பெரும் ஒப்பாரியாகக் கேட்டது. அதையெல்லாம் மீறி, மீண்டும் மீண்டும் எதிரொலித்தது

“விட்டிட்டுப் போகேலுமே…?”

- தொடரும்

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction