free website hit counter

அவளும் அவளும் – பகுதி 7

கதைகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

“அட…!”
“யோகராசா..!” ஆச்சரியப்பட்டவளே அதை நீட்டித்தாள்.
எல்லோரது பார்வையும் தன்மீதிருப்பதை கவனித்தபடியே, வந்து நின்ற வண்டிலின் பின்னாலிருந்து சைக்கிளைத் தள்ளியபடியே முன்னே வந்தான் யோகராசா.

“அண்ணே…!” அன்பில் நெகிழ்ந்தாள் கமலம். அந்தக் குரலில் ஒரு ஏக்கமும் எதிர்பார்ப்பும் கூட இருந்தது. அவளைப் பார்த்துச் சிறு சிரிப்பில் பதில் சொன்னான். அவன் பார்வையில் ‘வந்திட்டன்’ என்ற வாசகம் வாழ்ந்தது.

வண்டிலை ஒட்டி வந்தவன், வண்டிலிருந்து குதித்து இறங்கி, வண்டிலின் தட்டியில் எருதுகளின் கயிற்றைகட்டினான். பின்னால் வந்து குத்துக்கட்டையை அவன் இறக்கவும்,யோகராசா அவ்விடத்திற்கு வரவும் சரியாக இருந்தது. எல்லோரது பார்வையும் இப்போது வண்டிலின் பக்கமாகவே இருந்தது.

“யோகராசா தொட்டில் கொண்டு வந்திருக்கிறான் போல…” பெண்கள் தங்களுக்குள் கிசுகிசுத்தார்கள்.

“கொஞ்சம் கெதியா வாங்கோவன்..”

வண்டிலின் அருகே நின்ற யோகராசா யாரையோ கூப்பிட்டான். அவன் அழைப்பிற்கு விரைந்து வந்தவர்கள் இளையவியும், சின்னக்குட்டியும்.

எல்லோருமாகச் சேர்ந்து தொட்டிலை இறக்கி தலைவாசலுக்குக் கொண்டு வந்தார்கள். கிணற்றடியிலிருந்து தோய்ந்து முடித்து தங்கம் வெளிப்பட்டாள்.

“ தாய் மாமன் பிள்ளைய தொட்டில்ல போட.. தொட்டிலோட வந்தாச்சு...” தங்கத்தைப் பார்த்து ஒருத்தி சொல்ல, எனக்குத் தெரியும் என்பதைப் போலத் தலையாட்டினாள். அதில் பெருமை பீறிட்டது. எல்லோரும் இப்போது தொட்டிலை ரசிக்கத் தொடங்கினார்கள்.

“ஆரு மாரிமுத்து ஆச்சாரியே செய்தது..?” அனுபவஸ்தி ஒருத்தி கேட்டாள்.

“ஓம்.”

“மனுசனட்ட செய்விச்சு வேண்டுறது கஷ்டம். ஆனா நல்ல வேலை..”

ரசித்துக் கொண்டிருந்தவர்களில் இளையவள் ஒருத்தி தொட்டிலை ஆட்டிப் பார்த்தாள்.

“வெறுந் தொட்டிலை ஆட்டதேயடி. பிள்ளைக்கு வயிறு வலிக்கும்…”

“இன்னம் பிள்ளையப் போடேல்லத்தானே..” பதிலில் சலித்தாள்.

எல்லாவற்றையும் ஓரமாக நின்று இரசித்தவாறு நின்றாள் கமலம். அவளருகே வந்த தங்கம், அவளது கைகளைப் பற்றி அழுத்தினாள். அதில் வார்த்தைகள் அழிந்து உணர்வுகள் மிக, மௌனத்தில் மகிழ்ச்சி பரிமாறிக் கொண்டார்கள்.

“சுடு தண்ணி அடுப்புக்குக் கிட்ட, வெள்ளப்பூடு சுட்டு வைச்சனான் சாப்பிட்டதே..?” மெதுவாக் கேட்டாள் தங்கம்.

இல்லை என்ற கமலத்தின் தலையசைப்புக்கு “ ஐயர் அம்மன் கோயில் பூசை முடிச்சுத்தான் வருவார். அதுவரைக்கும் வெறு வயித்தோட நிக்காத. ஆள்காட்டமல் போய் சாப்பிட்டு வா மச்சாள்…”

அவள் சொன்னதைச் செய்வதற்காகத் திரும்பியவளிடம் “ தொட்டில் பிடிச்சிருக்கே… ? “ பெருமிதமாய் கேட்டாள்.

“ஓ.. “

“பின்ன பிடிக்காமல் போகுமே. அண்ணையெல்லோ கொண்டு வந்தவர்” இனிய பாடலொன்று கேட்பது போன்று, காற்று மெலிதாக மரங்களைச் சலசலத்தது. தலைவாசலில் கூடியிருந்தவர்கள் கலகலத்து மகிழ்ந்தார்கள்.

“பிள்ளைக்கு மொட்டை வழிக்கேல்ல .இளையவிக்கு இன்டைக்கு வேல இல்லைப் போல..” தலைவாசலுக்கு பக்கமாகக் குந்தியிருந்த இளையவியப் பார்த்துக் தங்கம் கேட்க, சிரித்து தலையாட்டினான் இளையவி.

“ சின்னக்குட்டி! கிணத்தடியில துடக்கு உடுப்புக்கள் கிடக்கு. எடுத்துக் கொண்டு போ..” தங்கம் தான் எல்லாவற்றிலும் கவனமாக இருப்பதை உத்தரவுகளில் உணர்த்தினாள்.

“குசினியெல்லாம் மெழுகிப் போட்டன். புண்ணியதானம் முடிஞ்சதும் தேத்தண்ணி தாறன்..” எல்லோருக்குமான பதிலில், கணவன் யோகராசாவைக் கண்ணில் வைத்தாள். அம்மன் கோயில் மணி ஒலித்தது.

“அம்மாளாச்சியிட்ட வந்திட்டார் ஐயர். தீபங்காட்டின கையோட இங்கதான் வருவார்…” சொல்லியவாறு பரபரப்பாக வீட்டினுள்ளே சென்றாள்.

தலைவாசலுக்கு வந்த சின்னதம்பி, தொட்டிலைத் தொட்டுப்பார்த்தவாறே, “வீட்டுக்க கொண்டுபோவமே…” என யோகராசாவைப் பாத்துக் கேட்டார்.

“எந்த நேரமும் பிள்ளைய தொட்டிலுக்க வளர்த்தாம, ஏணையிலயும் கிடந்துக்கோ. அப்பதான் தலை நல்ல இலட்சணமா உருண்டு வரும். பெம்பிளப் பிள்ளையல்லோ..?” வயது கூடிய பெரியம்மா, பெண்பிள்ளை என்பதை அழுத்திச் சொன்னாள்.

“ சொன்னாப் போல மறந்திட்டன் பார்…” என எழுந்த யோகராசா, வேலியோரத்தில் நிறுத்தியிருந்த சைக்கிள் பக்கமாகச் சென்றான். திரும்பி வரும்போது, கையில் அழகாகச் செதுக்கப்பட்ட ஒரு தடியும், அதனோடு சேர்ந்த நூல்கயிறும் இருந்தது.

 

“ச்சா. மருமகளில சரியான அக்கறையாத்தான் இருக்கிறான் யோகராசா..” என்றவாறே, தடியைக் கையில் வாங்கிப்பார்த்த பெரியம்மா, “ஏணைய இங்க தலைவாசலில கட்டுங்கோ காற்றோட்டமா இருக்கும். தொட்டில வீட்டுக்குள் வையுங்க..” ஆலோசனையாகச் சொன்னாள். அது வரிதான் என்பதை மற்றவர்களும் ஆதரிக்கவே, தலைவாசல் குறுக்கு வளையில் ஏணைக் கயிற்றைப் பொருத்தினார்கள்.

“பிள்ளையத் தொட்டில்ல போடுற வரைக்கும் தொட்டில இங்க வையுங்க. பிறகு வீட்டுக்குள்ள கொண்டு போகலாம்..” பெரியம்மா மீண்டும் வழிமுறை சொன்னாள்.
வாசலில் ஐயர் வந்திறங்கினார்.

“ஐயா வந்திட்டார்…! ” குந்தியிருந்த சின்னதம்பி கவனம் திருப்பினான்.

சின்னதம்பியும் யோகராசாவும், ஐயரை பெரியவீட்டினுள் கூட்டிச் சென்றார்கள்.

மற்றவர்கள், தொட்டிலை, கைகளாலும், கதைகளாலும், அலங்கரித்த தொடங்கினார்கள். தங்கம் குட்டித் தலையணை, அதற்கான உறைகள் எல்லாவற்றையும் கொண்டு வந்து கொடுத்தாள்.

“ நீ தச்சனியோ…?” விடுப்புக் கேட்டாள் பெரியம்மா.

“ நானோ..ம்க்கும். ஆறு மாசத்துக்கு முந்தியே மச்சாள் எல்லாம் தைச்சு வைச்சிட்டாள்..” நக்கலும் நளினமுமாகத் தங்கம் பதில் தந்தாள். தலையணை உறைகளை எடுத்துப் பாரத்த மற்றொரு உறவுப் பெண், “நல்ல கை தையல்..” எனப் பாராட்டினாள்.

“மச்சாள் நல்ல பொறுமையா இருந்து தைப்பா. எனக்கு இதெல்லாம் சரி வராது..” சொல்லியபடியே திரும்பிய தங்கத்தை கைபிடித்து நிறுத்திய பெரியம்மா,
“எங்க கூறைச்சீலை.. தொட்டிலுக்குப் போடனுமெல்லே…” கேட்டாள்.

“என்ன தங்கம் தொட்டில் கூறை போட்ப் போறாளாமோ…?”

“ஏன் அவள் போடலாம்தானே..? பெடியன வைச்சிருக்கிறாள்தானே..” நியாயம் கற்பித்தாள் மற்றவள்.

“எங்கையடி தங்கம் உன்ர பெடியன்..? ”

“அவன் பள்ளிக் கூடம் போயிற்றான். சோதினையாம் அதனால மறிக்கேலாமல் போச்சு…”

“சரி சரி. நீ உள்ள போ.. தேடுவினம்..” “ அக்கறையாக அவளை வீட்டினுள் அனுப்பி வைத்தாள் பெரியம்மா.

வீட்டினுள் மந்திரங்களும், மணியொலியும் கேட்டன. கற்பூரமும், சாம்பிராணியும், புகையுடன் சேர்ந்து வெளிப்பரவின. சின்னதம்பி, வேட்டியும் வெறும் மேலுமாக, வெளியே வந்தார். கையிலிருந்த குடத்தினுள் மாவிலையைத் தோய்த்து, தெளித்தபடி சூழவும் நடந்தார்.

“எல்லா இடமும் தெளிச்சு முடிய கிணத்துக்குள்ள மிச்சத்த ஊத்தி விடு. ..”

“அண்ண எங்கட வீட்டையும் தெளிக்கோணும். கொஞ்சம் வையுங்க…” சொல்லியபடியே கையில் குழந்தையோடு வெளியே வந்தாள் தங்கம். கூடவே யோகராசா கூறைச் சேலைத்தட்டுடன் வந்தான்.

தலைவாசலில் தொட்டிலைச் சுற்றி உறவுகள் கூடின. தொட்டிலில் கூறைச்சீலையைப் போட்ட யோகராசா, பின் குழந்தையை வளர்த்தினான்.

“ மாமன் சங்கிலி போடேல்லையே…? ” பெரியம்மா குத்தினாள்.

“ ஏன் போடம..” கர்வமும் உரிமையுமாகத், தங்கம் சங்கிலியொன்றை யோகராசாவிடம் நீட்டினாள்.

“பஞ்சாயுதம்…” கமலத்தின் கண்களில் ஆச்சரியம். பெருமை பொங்க ரசித்தாள் தங்கம். அந்தப் பெருமைக்காக அவள் தனது கைவளையல்களில் ஒரு சோடியினைக் குறைத்துக் கொண்டாள்.

“பெரியம்மா! உங்கட கையால இந்த தொப்புள் கொடிய கட்டி விடுங்கோ….” கமலம் ‘தொப்புள் கொடி’ தொடுத்திருந்த கறுப்பு நூலை நீட்டினாள்.

“சரியா தகப்பனை உரிச்சு வைச்சுப் பிறந்திருக்கிறாள்…” என்றபடி தொப்புள் கொடி கட்டி, கறுத்தப்பொட்டினை இட்டாள் பெரியம்மா. பொட்டின் குளிர்ச்சியில் சிலிர்த்தாள் குழந்தை.

“பிள்ளைக்கு என்ன பெயர் வைச்சனியள்…? எங்களுக்குச் சொல்லேல்ல…” குறைப்பட்டாள் பெரியம்மா.

“அதுதானே பிள்ளையின்ர காதுக்குள்ள மட்டும் சொன்னாப் போதுமே…எங்களுக்கும் கேட்கோணும்..” ஒத்து ஊதினாள் இன்னொருத்தி.

“ராஜேஸ்வரி..!” என்றான் யோகராசா.

“எங்கட அம்மாளாச்சி அவள்..”

“வீட்டில என்னென்டு கூப்பிடப்போறியள்.. ராசமென்டோ..?”

சின்தம்பி ஆசையையும், அன்பையும் குழைத்து, “ எனக்கு அவள் ராசாத்தி..” என்றார்.

“ ஆரில்லையென்டது. அவள் ராசாத்திதான்…”

பெரியவர்களின் அருட்டல்களில் ராசாத்தி அழத் தொடங்கினாள். அவளை அள்ளியெடுத்து ஆற்றுப்படுத்திய கமலம் முற்றத்திற்கு வந்து நின்றாள்.
‘ராசம்’, ‘ராசக்கா’, ‘ராசாத்தி’, என இந்த முற்றத்தின் அழைப்புக்களுக்குரிய ராஜேஸ்வரி சூரிய வெளிச்சத்தில் கூசிய கண்களைச் சிமிட்டி வானம் பார்த்தாள்.

காற்றின் ஆடிய இலைகளின் அசைவிற்கு கண்களை உருட்டினாள். அவளது விழிகளின் திரையில் புதிய உலகமும் வாழ்வும் விரியத் தொடங்கியது.
வீட்டிற்குள் ராசத்துடன் போன கமலம் திருப்பி வருகையில், நித்திரையாகிப் போனாள்.

தலைவாசலில் இருந்தவர்கள் தேநீரில் சுவைத்திருந்தார்கள். சின்னக்குட்டியையும், இளையவியையும் அனுப்பி வைப்பதில் சின்னதம்பி அக்கறையானார்.

தலைவாசலில் கட்டியிருந்த ஏணைக்குள்  கமலம் வளர்த்த, பசியாறிய சுகத்தில் இமைமூடி இளைப்பாறினாள் ராசம்.

“பிள்ளை களைச்சுப் போயிட்டுது. நித்திரை கொள்ளட்டும். வாங்க நாங்க சமைப்பம்…” தங்கம் எல்லோரையும் தன் பக்கம் இழுத்துச் சென்றாள்.

தலைவாசல் திண்ணைக் குந்தில் சின்னத்தம்பியும், யோகராசாவும் தனித்துப் போக, மெல்லப் பேசத் தொடங்கினார்கள். ஏணைக்குள் கிடந்த ராசத்தின் அழகிய பிஞ்சுக்கால்கள், மொட்டின் இதழொன்று விரிந்தது போல் தெரிந்தது. அதனை ஆசையோடு அடிக்கடி பார்த்துக் கொண்ட சின்னதம்பி,
“ ராசாத்திக்கு நரி வெருட்டக் கனவு காணுகின்றாள்… ” குழந்தைத்தனத்துடன் கூறினார்.

தொங்கிய ஏணைச் சீலைக்குள் இருந்து சிறு பூவின் இதழ்போல வெளி நீண்ட ராசத்தின் கால்கள் அசைந்தன.

அசைந்த அந்த பிஞ்சுக் கால்கள் நிலத்தில் பதித்து, என்னருகே வருவது போன்று என்னுள் எழுந்தது கனவு. அது நனவான நாளில்  உயிர்ப்பும், உறவும் பெற்றேன். விறைத்துப் போயிருந்த உணர்வுகளும், எண்ணங்களும் எழுந்து விரியத் தொடங்கின. இறக்கை முளைத்துப் பறக்கத் தொடங்கின. எனக்கான ஒரு அடையாளத்தைத் தந்தவள் ராசம்.

அற்புதமனது அன்றையநாள்...


- தொடரும்

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction