free website hit counter

நல்லூர் திருவிழா யாழ்ப்பாணத்தின் பண்பாட்டுக் கோலம்.

செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

யாழ்ப்பாணத்தின் கலை, கலாச்சாரத்தின் பண்பாட்டுக் கோலமாகத் திகழ்கிறது நல்லூர் கந்தசுவாமி கோவில் திருவிழா.

 

நல்லூர் கொடியேறிற்றாம்.." என்பது, சமய, மொழி, கலை கலாச்சாரத்தின் எழுச்சிக்கான அறிவிப்பு எனலாம். நல்லூர் பதி முருகனின் உற்சவமாக, ஒரு சமயத்தின் திருவிழாவாக அன்றி, இது யாழ்ப்பாணத்தின் பண்பாட்டுக் கோலமாகத் தொடரும் பராம்பரியம் ஆரம்பமாகிப் பலகாலம் ஆயிற்று. நல்லூர் திருவிழாவிற்கான விரத அனுட்டிப்புக்கள், நடைபஜனைகள்,காவடிகள், தாகசாந்திப் பந்தல்கள், என்பன ஆரம்பமாகிவிடும்.

 

யாழ்ப்பாணத்தின் கடைசி மன்னன் சங்கிலியனின் இராசதானியான நல்லூர் எனும் கூற்று, அந்த ஊருக்கான அரசியல் முக்கியத்துவத்தைக் கொடுத்தது என்றால் அதற்கு இணையான பாரம்பரிய முக்கியத்துவத்தைக் கொடுத்தது நல்லூர் கந்தசாமி கோவிலும், அதன் சூழலும் எனலாம். ஆன்மீக மரபு சார்ந்த நல்லை ஆதீனம், இலக்கிய மரபு சார்ந்த கம்பன் கழகம், என்பவற்றுடன் பல்வேறு சமூக அமைப்புக்களின் நிலைகளும் மையங்கொண்டிருந்தன. ஒரு காலத்தில் பல்வேறு விடுதலை அமைப்புக்களும், தங்கள் செயற்பாட்டு விளக்கப் பிரச்சாரங்களை நல்லூர் சூழலில் முன்னெடுத்திருந்தன. உள்நாட்டு யுத்தம் மிகுதியாக இருந்த வேளைகளில் கூட, நல்லூர் திருவிழா எனும் பாரம்பரியம் தொடர்ந்திருந்தது.

 

நல்லூர் திருவிழாவையொட்டி யாழ்ப்பாணத்தின் கலை மரபும் நீள்விரிகிறது. கதாப்பிரசங்கள், விலுப்பாட்டுக்கள், தவில் நாதஸ்வரக் கச்சேரிகள், மெல்லிசைக்குழுக்கள், மற்றும் பல கலை நிகழ்வுகள் என்பன நல்லூர் திருவிழாவையொட்டி யாழ் மாவட்டத்தின் பல்வேறு ஊர்களிலும் நிறுவப்படும் தாகசாந்தித் தண்ணீர்பந்தல்களில் மாலைநிகழ்வுகளாக நடைபெறும்.

நல்லூர் திருவிழாக் காலங்களில்  மக்கள் மன நிலையிலும் உற்சாகம் மிகும். 25நாள் திருவிழாவில் ஒரு சில தினங்களாவது நல்லூருக்குச் சென்று வந்துவிட வேண்டும் எனும் பெருவிருப்பம் இருக்கும். நல்லூரை நோக்கி நடைபயணமாக செல்லும் பஜனைக்குழுக்கள், விரதகாரர்கள், காவடிகள் என்பவர்களின் தாகந்தீர்க்கும் நோக்கில் அமைக்கப்பெறும் இவ்வாறான பந்தல்கள், ஊர்களின் ஒற்றுமை, ஒன்றுகூடல், மனமகிழ்வு என்பவற்றின் அடையாளங்களாகவும் இருந்தன. அதனால் பல்துறை கலைஞர்கள் வளர்ந்தார்கள்.

 

அரசியல் சமூகநிலை மாற்றங்களால், இவ்வாறான தாக சாந்திநிலையங்கள் அருகிவிட, அதனையொட்டி வளர்ந்த கலைஞர்களும் கலைகளும் கூட மறைந்து வருகின்றன. அது மட்டுமன்றி, நல்லூர் திருவிழாவினையொட்டி உருவாகும் சிறு வணிகங்கள், பல குடும்பங்களின் பொருள் ஆதாரங்களாக இருந்துள்ளன. இது நல்லூர் கோவில் வீதியை ஒட்டி மட்டுமன்றி யாழ்ப்பாணத்தின் பலபாகங்களுக்கும் பொருந்தும். இன்று இவையெல்லாவற்றிலும் பாரிய மாற்றங்கள்.

 

ஆனாலும் இந்த மாற்றங்கள் எதுவும் நல்லூரின் முக்கியத்துவத்தைக் குறைத்துவிடவில்லை. இன்றும் வடபகுதி வரும் தென்னிலங்கை அரச தலைவர்களோ, வெளிநாட்டுப் பிரமுகர்களோ, நல்லூர் கந்தசாமி கோவிலுக்குச் செல்வதை முக்கியமானதாக் கருதுகின்றார்கள். பிரமுகர்களுக்கான முக்கியத்துவப்படுத்தல்கள் ஏதுமின்றி நல்லூர் ஆலயத்தை நெறிப்படுத்தி வருகின்றனர், மாப்பான முதலியார் குடும்பத்தினர்.

 

இவை எல்லாவற்றையும் விஞ்சிய சக்தியொன்று நல்லூரில் நல்லாட்சி செய்கிறது. அந்தப் பெருஞ்சக்தியை ஞானத்தின் வழி உணர்ந்து கொண்ட அனுபூதியாளர்கள் பலரும் நல்லூரான் தேரடியில் திருநிலை கொண்டிருந்தார்கள் என்பது நல்லூரின் மகாத்மியம். யோகர் சுவாமிகள், கடையிற்சுவாமிகள், செல்லப்பா சுவாமிகள், நல்லை ஆதீன முதலாவது குருமகா சந்நிதானம், எனப் பல ஞானசீலர்கள் திருவடிபட்ட சித்தர்பூமியான அந்த மண்ணில், உளங்கடந்து ஒரு சில மணித்துளிகள் உட்கார்ந்திருத்தலே பெரும் பேறு என்பதனை உணர்ந்து கொண்டவர்கள், நல்லூரான் திருவடி நாடித் தேடி வர, யாழ்ப்பாணத்தின் பண்பாட்டுக் கோலமாக நல்லூரான் அருளாட்சி தொடர்கிறது....

     

 

- 4தமிழ்மீடியாவிற்காக: மலைநாடான்

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: