free website hit counter

சாம்பிராணித் தூபமும் ஹோமப் பலனும் !

குறிப்புக்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சாம்பிராணி என்ற வார்த்தை கடினமான மனநிலை மனிதர்களைச் சுட்டும் சொல்லாடலாகவும் உள்ளது. ஆனால் நிறைபுகையும் நறுமணமும், நற்பலனும் தருவது சாம்பிராணி.

பாஸ்வெல்லியா செர்ராட்டா (Boswellia serrata) என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த சாம்பிராணி மரங்கள் என்று பொதுவாக அழைக்கப்படும் பிரங்கின்சென்ஸ் (Frankincense) என்ற மரம் வடிக்கும் பிசின், கல்போன்று கடினத்தன்மை கொண்ட சாம்பிராணியாக உருமாறுகிறது. இந்த மரப்பிசின், மெதுவாக இறுகி, ஒளிபுகும் தன்மையையும் எளிதில் எரியும் தன்மையையும் கொண்ட சாம்பிராணியாக உருமாறுகிறது.

நவம்பர் மாதம் முதல் ஜூலை வரையிலான காலங்களில் இம்மரங்களிலிருந்து பால் அதிகமாக வடியும். சாம்பிராணிக்கு குங்கிலியம், மரத்துவெள்ளை, வெள்ளைக்கீரை, குமஞ்சம், பறங்கிச்சாம்பிராணி என்று பல பெயர்கள் உண்டு. நறுமணமிக்க புகையைத் தன்னுள்ளே வைத்திருந்தாலும், எரித்தால் மட்டுமே புகையாய் அந்த நறுமணத்தைத் தரும்.

எல்லா மதத்தினரும் சாம்பிராணி தூபம் போடுவதை கடைபிடிக்கிறனர். வீட்டிலும் இருக்கும் சுமங்கலி பெண்கள், மங்கல நாட்களான செவ்வாய், வெள்ளி கிழமைகளில் காலை மாலை வேளையில், தெய்வம் படங்களுக்கு விளக்குஏற்றி , சாம்பிராணி தூபமிட்டால் அந்த வீட்டில் இருக்கும் பீடைகள், தரித்திரம் அகலும். லட்சுமி கடாட்சம் பொங்கும்.

சாம்பிராணி புகையே, அக்காலங்களில் அரசர்கள், பெரும்செல்வந்தர்கள் இருப்பிடங்களில், வாசனைப்புகையாகவும், கொடிய நச்சுக்களைப் போக்கக்கூடியவையாகவும் பயன்பட்டன. சமய சடங்குகளிலும் இவையே, இடம்பெற்றன.

முன்னோர் கூறியவை எல்லாம், சுத்த பட்டிக்காட்டுத்தனம் என்று சொல்லி, இன்று பல்வேறு வழிகளில், இயற்கையை விட்டு விலகி, நம் வாழ்க்கையை மாற்றி அமைத்துக் கொண்டோம். இயற்கை சாம்பிராணி எதற்கு என்ற மகத்துவம் அறியாமல், அதை விலக்கி, செயற்கையாக கிடைக்கும், சாம்பிராணி வில்லைகளை வாங்கி, நாமும் சாம்பிராணி புகையை வீடுகளில் போடுகிறோம்.

தூபக்கால் எனும் சாம்பிராணி காட்டும் பாத்திரத்தில், தேங்காய் ஓடுகளை எரித்து, அதில் நெருப்பை உண்டாக்கி, அதில் சுத்த சாம்பிராணியை பொடியாக்கி தூவினால் வீடுகள் தெய்வீக மணம் கமலும். சாம்பிராணி புகையை வீடுகளில் உள்ள பூஜையறையில் காட்டி விட்டு, பின்னர், வீடு முழுவதும், வரவேற்பறை, சமையலறை மற்றும் படுக்கையறை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும், சாம்பிராணி புகையை காட்டி வருவர்.

முன்னோர் செயலில் எதற்கும் ஒரு விளக்கம் இருக்கும், பெண்களின் கருப்பை சார்ந்த அனைத்து பாதிப்புகளையும் சரி செய்வதுடன், சாம்பிராணி புகையை சுவாசிக்க, அது உடலில் உள்ள இராஜ உறுப்புகள் அனைத்தையும் எந்த வியாதியும் அணுகாமல், காத்து வரும். மேலும், தலைக்கு சாம்பிராணி புகையை காட்டி வர, தலை முடி கருமையாக வளர்ந்து, நரைகள் இல்லாமல், ஆண்கள் பெண்கள் அனைவரும் நலமுடன் வாழ்ந்தனர்.

தற்போதைய ஆய்வுகளில், குங்கிலிய, சாம்பிராணி மரப் பிசின்களில் உள்ள வேதிப்பொருட்கள், புற்று வியாதிகளை சரியாக்கக்கூடிய, மருத்துவ தன்மை மிக்கவை என ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கின்றனர். இதையே நம் முன்னோர் அன்றே கூறி, வீடுகளில் வாரமிருமுறையும் சாம்பிராணி புகைக்கச் சொல்லி, அறிவுறுத்தி வந்தனர். சாம்பிராணி புகை நச்சுக்கிருமிகளை அழிக்கும் ஆற்றல் மிக்கது, எனவே, வீடுகளில் நாம் பயன்படுத்தும் எல்லா இடங்களிலும் சாம்பிராணி புகையிட்டு வர, கிருமிகள் விலகி விடும், வீட்டில் உள்ளவர்களுக்கும் எந்த பாதிப்புகளும் நேராது என்ற எண்ணத்திலேயே, வீடுகளில் சாம்பிராணி புகை இட்டனர். குங்கிலியத்திலும், சாம்பிராணியிலும் உள்ள வேதி அமிலங்கள், மனிதர் உடல் நலனைக் காக்க, பயனாகின்றன.

பொதுவாக அறிவியல் ரீதியாக சாம்பிராணி தூபம் போடுவதால், வீடு மட்டும் கடைகளில் எல்லா இடங்களிலும் உள்ள கெட்ட காற்றை அகற்றும். மேலும் விஷ ஜந்துகள் அண்டா விடாமல் வெளியேற்றும். சாம்பிராணி காட்டுவது என்பது நம் தொன்று தொட்டு இருக்கும் ஒரு வழக்கம்.

ஞாயிறு அன்று சாம்பிராணி அல்லது தூபம் காட்டினால் - ஆத்ம பலம், சகல செல்வாக்கு,புகழ் உயரும், ஈஸ்வர அருள் கிட்டும்.

திங்கள் அன்று சாம்பிராணி அல்லது தூபம் காட்டினால் தேக,மன ஆரோக்கியம்,மன அமைதி, அம்பாள் அருள் கிடைக்கும்.

செவ்வாய் அன்று சாம்பிராணி அல்லது தூபம் காட்டினால் எதிரிகளின் போட்டி,பொறாமை மற்றும் தீய-எதிர் மறை எண்ணங்களின் மூலம் உண்டான திருஷ்டி கழிதல், எதிரிகளின் தொல்லை நீங்குதல், முருகனின் அருள் ,கடன் நிவர்த்தி போன்ற பல நல்ல பலன்கள் கிட்டும்.

புதன் அன்று சாம்பிராணி அல்லது தூபம் காட்டினால் நம்பிக்கை துரோகம், சூழ்ச்சிகளில் இருந்து தப்புதல், நல்ல சிந்தனை வளர்ச்சி, வியாபார வெற்றி, சுதர்சனரின் அருள் கிட்டல் போன்ற பல நல்ல பலன்கள் கிட்டும்.

வியாழன் அன்று சாம்பிராணி அல்லது தூபம் காட்டினால் சகல சுப பலன்கள், பெரியோர்கள் குருமார்கள் ஆசி கிட்டுதல், அத்துடன் சித்தர்களின் மனம் குளிரும், முன்னேற்றங்கள் தொடரும் கிட்டும்.

வெள்ளி அன்று சாம்பிராணி அல்லது தூபம் காட்டினால் - லட்சுமி கடாட்சம், சகல காரிய சித்தி போன்ற பல நல்ல பலன்கள் கிடைக்கப் பெறும்.

சனி அன்று சாம்பிராணி அல்லது தூபம் காட்டினால் சோம்பல் நீங்குதல், சகல துன்பங்கள் நீங்கி சனி பகவான், பைரவர் போன்றோரின் அருள் கிட்டும். தொடர்ந்து சாம்பிராணித் தூபம் போட்டு வருவது ஒரு யாகம் நடத்துவதற்கு சமமானது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction