free website hit counter

சிவராத்திரி இன்று மட்டுமா ?

குறிப்புக்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

அன்னை மகாசக்திக்கு ஒன்பது நாட்கள் நவராத்திரி என்றால் ஈசனுக்கு ஒருநாள் சிவராத்திரி. சிவம் என்ற சொல்லுக்குத் துன்பத்தை நீக்கி இன்பத்தை அளிப்பவர் என்று பொருள். முழு முதற்கடவுளான சிவபெருமான் வழிபாட்டிற்கு உரிய இரவுதான் சிவராத்திரி.

சிவராத்திரி என்ற சொல்லே மோக்ஷம் தருவது என பொருள் பெறும். சிவ வசீகரண மந்திரத்தை ருத்திர பூமியில் இந்தப் புண்ணிய நாளில் ஜெபம் செய்து தேவதா வஸ்யம் முதல் பல லாபங்களை அடையலாம். குருவான சிவபெருமான் இதற்கு அருளுவார் ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு திதி உண்டு.

ஈஸ்வரனுக்குரிய திதி இறுதி திதியான சதுர்த்தசி திதி ஆகும். சிவன் அழிக்கும் கடவுள். எல்லா உயிர்களும் தங்கள் வாழ்வின் இறுதியில் அவரையே அடைகின்றன என்பதால் இந்த இறுதி திதியை அவருக்கு ஒதுக்கினார்கள். அதில் மாசி மாதம் தேய்பிறையில் வரும் சதுர்த்தசி இரவே மகிமை மிக்க ‘மகா சிவராத்திரி' ஆகும்.

சிவராத்திரியன்று சிவவழிபாட்டில் ஈடுபட்டால் வாழ்வில் துன்பங்களை நீக்கி இன்பம் பெறலாம் என்பது ஐதீகம். ஒவ்வொரு தமிழ் வருடத்திலும் மாசிமாத தேய்பிறைக்காலத்தில் வரும் சதுர்த்தசி திதியே மகாசிவராத்திரி விரத தினமாக முன்னோர்களால் கடைபிடிக்கப்படுகிறது.

வற்றாத செல்வம் கிடைக்க அம்பிகைக்கு சிவன் அருவுருவில் (உத்பவம்) உபதேசம் செய்த ஆகம உபதேச புண்ணிய காலமான மகா சிவராத்திரி விரதம் கடை பிடிக்கும் போது புத்திசாலி குழந்தைகள் அமைவர். குபேரனிடம் இருப்பது போல் வற்றாத செல்வம் கிடைத்து நிலைக்கும். ஒரு வருடம் முழுவதும் சிவராத்திரி விரதம் கடைபிடித்தால் அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

 

மகா சிவராத்திரி. சிவராத்திரி என்ற உடனேயே நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது மாசி மாதத்தில் வருகின்ற சிவராத்திரி விரதமேயாகும். ஒவ்வொரு ஆண்டும் உத்தராயண சிசு ருதுவில் குளிர் காலத்தில், மாசி மாத கிருஷ்ண பட்ச சதுர்த்தியில் இரவு 14 நாழிகைக்கு மேல் 16 நாழிகைக்குட்பட்ட வேளை தான் மகா சிவராத்திரி எனப்படும்.

ஆனால் ஒவ்வொரு மாதமும் வருகின்ற கிருஷ்ணபட்ச சதுர்த்தசி நாள் அதாவது தேய்பிறை பதின்னான்காம் நாள் சிவனுக்குரிய ராத்திரி ஆகும். இவ்வாறு மாதமொரு சிவராத்திரி என்ற வகையில் ஒரு வருடத்தில் பன்னிரு சிவராத்திரிகள் வருகின்றன. இவை மாத சிவராத்திரிகள் என அழைக்கப்படுகின்றன. அந்நாளில் திருவாதிரை நட்சத்திரமும் கூடியிருந்தால் அது மிகச் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction