free website hit counter

4தமிழ்மீடியாவின் முக்கிய வாராந்த உலகச் செய்திகள்

உலகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கியூபாவில் ஹோட்டல் தீ விபத்தில் 27 பேர் பலி

வெள்ளிக்கிழமை கியூபாவின் தலைநகர் ஹவானாவில் உள்ள 96 அறைகள் கொண்ட சொகுசு ஹோட்டல் ஒன்றில் எரிவாயுக் கசிவு காரணமாக ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 27 பேர் பலியாகி உள்ளனர்.

சரட்டோகா என்ற இந்த ஹோட்டலில் ஏற்பட்ட வெடி விபத்தை அடுத்து ஏராளமானவர்கள் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதுடன் பொது மக்கள் அதிர்ச்சியுடன் தமது உறவினர்களைத் தேடி வருகின்றனர். 19 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழமையான இந்த ஹோட்டல் சமீப காலமாக புதுப்பிக்கப் படுவதற்கான கட்டுமானப் பணியில் இருந்து வந்தது.

கொல்லப் பட்டவர்களில் 4 சிறுவர்களும் ஒரு கர்ப்பிணிப் பெண்ணும் அடங்குகின்றனர்.

 


உக்ரைன் போரில் அணுவாயுதங்கள் பயன்படுத்த மாட்டோம்! : ரஷ்யா

2 ஆம் உலகப் போரில் நாஜிக்களைத் தோற்கடித்ததன் 77 ஆவது ஆண்டு நிறைவை நாளை மே 9 ஆம் திகதி ரஷ்யா கொண்டாடுகின்றது. இதற்கான இராணுவ அணிவகுப்பு ஒத்திகையை கடந்த சில நாட்களாக ரஷ்யா மாஸ்கோவில் மேற்கொண்டு வருகின்றது.

இந்நிலையில் உக்ரைன் மீதான தமது படையெடுப்பில், உக்ரைன் மீது அணுவாயுதங்களைப் பயன்படுத்தும் நோக்கம் எதுவுமில்லை என ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் அண்மையில் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்பு தொடங்கியதில் இருந்து பல சர்வதேச நாடுகள் ரஷ்யாவுக்குப் பொருளாதாரத் தடை விதிக்கத் தொடங்கின.

இதை அடுத்து ரஷ்யா அவ்வப்போது சர்வதேசத்துக்கு அணுவாயுத அச்சுறுத்தலை விடுத்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 


இன்று ஜி7 மாநாட்டில் காணொளி வாயிலாகப் பங்கேற்கும் உக்ரைன் அதிபர்


G7 அமைப்பு நாடுகளின் கூட்டம் காணொளி வாயிலாக இன்று மே 8 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகின்றது. இதில் கனடா, ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 7 உறுப்பு நாடுகளின் தலைவர்களுடன் ஐரோப்பிய யூனியனும் இணைந்து கொள்கின்றது.

இந்த காணொளி மாநாட்டில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலென்ஸ்கியும் கலந்து கொண்டு பேசவுள்ளார். உக்ரைன் போர் நிலமை, இதனால் உலகளாவிய அளவில் ஏற்பட்டு வரும் கடுமையான தாக்கங்கள் குறித்து இந்த காணொளியில் விரிவாகப் பேசப்படவுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் பைடெனுடன், உக்ரைன் அதிபர் பேசவும் இது ஒரு முக்கியமான சந்தர்ப்பம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்பட்ட வடகொரிய ஏவுகணை


ஒரு அணுவாயுத சோதனை அச்சுறுத்தலுக்கு வடகொரியா தயாராகி வருவதாக அமெரிக்கா அறிவித்து மூன்றே நாட்களில் தனது 2 ஆவது ஏவுகணை சோதனையையும் நடத்தி அதிர்ச்சியை அளித்துள்ளது வடகொரியா.

அதிலும் 2 ஆவது சோதனை நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றில் இருந்து ஏவப்பட்ட கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணை ஆகும். அமெரிக்காவின் மேலதிக பொருளாதாரத் தடைகள் அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஜனவரி முதற்கொண்டு சுமார் 15 ஆயுத சோதனைகளை வடகொரியா நிகழ்த்தியுள்ளது.

தென்கொரியாவின் புதிய அதிபராக யூன் சுக் யெயோல் பதவியேற்கவுள்ள நிலையில், தான் வடகொரியா மீது கடுமையான நிலைப்பாட்டைக் கடைப்பிடிப்பேன் என்றும் அமெரிக்காவுடனான உறவை மேலும் வலுப்படுத்துவேன் என்றும் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு வெளியாகி சில தினங்களுக்குள் வடகொரியா தன் மிக வலிமையான நீர்மூழ்கி ஏவுகணையைப் பரிசோதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 


ஆப்கானில் பெண்கள் முகத்தை மறைக்க தலிபான்கள் உத்தரவு!

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானின் ஆட்சியைத் தலிபான்கள் கைப்பற்றி இருந்தனர். இதைத் தொடர்ந்து உலக மக்கள் பெரிதும் கவலைப் பட்ட விடயங்களில் ஒன்று அங்கு மீண்டும் எந்தளவுக்குப் பெண்கள் உரிமைகள் ஒடுக்கப் படும் என்பது குறித்ததாகும்.

ஆரம்பத்தில் இயன்றவரை பெண்கள் உரிமைகள் பாதுகாக்கப்பட்டே வரும் எனத் தலிபான்கள் கூறி வந்தனர். ஆனால் தற்போது ஆப்கானில் பெண்கள் கட்டாயம் முகத்தை மறைக்க வேண்டும் என்றும் வெளியே செல்லும் போது முழு உடலையும் மறைக்கும் விதத்தில் பர்தா அணிவது அவசியம் என்றும் தலிபான்கள் கட்டளை பிறப்பித்துள்ளனர்.

பெண்கள் இக்கட்டளையை மீறினால் அவர்களது தந்தை அல்லது நெருங்கிய ஆண்கள் யாரும் கைது செய்யப் படுவர் அல்லது அரச உத்தியோகத்தில் இருந்து நீக்கப் படுவர் என்றும் கடுமையான உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction