free website hit counter

4 தமிழ்மீடியாவின் முக்கிய வாராந்த உலகச் செய்திகள்!

உலகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

4 தமிழ்மீடியாவின் முக்கிய வாராந்த உலகச் செய்திகள்!

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு -

உக்ரைன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்பு போரில் சீனா ரஷ்யாவுக்கு நேரடியாக இதுவரை உதவாத போதும், அது ரஷ்ய ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. இதனை அடுத்து ஞாயிறு அமெரிக்க அதிபர் பைடென் மற்றும் சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் வீடியோ கால் மூலம் 2 மணித்தியாலம் கடுமையான விவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த விவாதத்தில், சீனா ரஷ்யாவுக்கு இராணுவ உதவி அளித்தால் அதன் மீது கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்க நேரிடும் என அதிபர் பைடெனும், பொருளாதாரத் தடைகள் போரை நிறுத்தாது, பேச்சுவார்த்தை ஒன்றே இதற்குத் தீர்வு என ஜின்பிங்கும் கருத்துத் தெரிவித்ததுடன் அமெரிக்கா வலுக்கட்டாயமாக சீனாவை இந்தப் போருக்குள் இழுத்து விட முயற்சிப்பதாகவும், அது ஒருபோதும் நிறைவேறாது என ஜின்பிங் காட்டமாகத் தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

கிட்டத்தட்ட 25 நாட்களாக நீடிக்கும் உக்ரைன் மீதான ரஷ்ய படை நடைவடிக்கையில் இதுவரை 115 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.


பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் பிரதமர் மீது நிறைவேற்றப் படவுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம் -

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி, அதிகரிக்கும் பண வீக்கம் போன்ற காரணங்களால் அந்நாட்டு எதிர்க்கட்சிகள் எதிர்வரும் மார்ச் 25 ஆம் திகதி கூடவுள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பிரதமர் இம்ரான் கான் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரவுள்ளன.

இந்நிலையில் அண்மையில் பாகிஸ்தானை விட இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை சிறந்தது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சமீபத்தில் தெரிவித்திருந்த கருத்தும் அந்நாட்டு மக்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் மீதான இன்றைய தாக்குதல் -

இன்று திங்கட்கிழமை அதிகாலை உக்ரைனில் உள்ள இரசாயன ஆலை மீது ரஷ்யா நடத்திய வான் வழித் தாக்குதலில் 2.5 கிலோ மீட்டர் தொலைவு வரை அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 25 நாட்களாக நீடிக்கும் உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலில் இதுவரை 900 இற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப் பட்டும் ஆயிரக் கணக்கானவர்கள் காயமடைந்தும் உள்ளனர்.

மேலும் இப்போரால் இதுவரை 1 கோடிக்கும் மேற்பட்ட பொது மக்கள் அகதிகளாக நாட்டை விட்டு வெளியேறி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ISS ஐச் சென்றடைந்த 3 ரஷ்ய விண்வெளி வீரர்கள் -

ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கிடையேயான யுத்தத்தின் மத்தியிலும், பூமிக்கு மேலேயுள்ள சர்வதேச நாடுகளின் கூட்டு விண்வெளி ஆய்வு நிலையமான ISS இற்கு 3 ரஷ்ய விண்வெளி வீரர்கள் அண்மையில் பயணித்துள்ளனர். உக்ரைன் நாட்டின் தேசியக் கொடியைப் பிரதிபலிக்கும் மஞ்சல் நிற உடையை இவர்கள் அணிந்திருந்தனர். எனினும், பூமியில் உக்ரைனில் நடைபெறும் யுத்தம் விண்வெளி ஆய்வில் ஒருபோதும் பாதிப்பை ஏற்படுத்தாது என அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.


நியூசிலாந்தில் மீன்பிடிப் படகு புயலில் சிக்கியதில் 4 பேர் பலி, ஒருவர் மாயம் -

நியூசிலாந்து கடற்கரையில் 10 பேருடன் புறப்பட்ட மீன்பிடிப் படகு புயலில் சிக்கி விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியானது போலிசாரால் உறுதி செய்யப் பட்டுள்ளது. இதில் ஒருவரைக் காணவில்லை. 5 பேர் ஹெலிகாப்டர்கள் மூலமாக பத்திரமாக மீட்கப் பட்டதுடன் எஞ்சியவர்களைத் தேடும் பணியும் முடுக்கி விடப் பட்டுள்ளது. நியூசிலாந்து வடக்கு கடற்கரையில் நோர்த் கேப் பகுதியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.


மியான்மார் இராணுவ முற்றுகையை இனவழிப்பாக பிரகடனப் படுத்துகிறது அமெரிக்கா -

இன்று திங்கட்கிழமை 2017 ஆமாண்டு இடம்பெற்ற மியான்மார் இராணுவ முற்றுகையை இனவழிப்பாக அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் அந்தோனி பிளிங்கென் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கின்றார். 2017 இராணுவ முற்றுகையின் போது மியான்மாரைச் சேர்ந்த
740 000 சிறுபான்மை றோஹிங்கியா அகதிகள் பங்களாதேஷில் அடைக்கலம் புகுந்தது உலகில் மிகப் பெரும் அதிகள் நெருக்கடியை பங்களாதேஷுக்கு ஏற்படுத்தியிருந்தது.


அமெரிக்காவில் கோவிட்-19 தொற்று வீதம் மீண்டும் அதிகரிக்கலாம்! - அந்தோனி ஃபௌசி -

அமெரிக்காவில் சமீப காலமாகக் குறைந்திருக்கும் கோவிட் தொற்று வீதம் மீண்டும் எதிர்பாராத விதமாக அதிகரிக்கலாம் என அதிபர் பைடெனின் மூத்த சுகாதார ஆலோசகரான அந்தோனி ஃபௌசி ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். ஆனால் அது ஒரு மிகப் பெரிய எழுச்சியாக இருக்க வாய்ப்பில்லை எனத் தான் நம்புவதாகவும் அந்தோனி ஃபௌசி கூறியுள்ளார்.

அண்மைக் காலமாக BA.2 ஒமிக்ரோன் துணை மாறுபாடு ஐரோப்பாவிலும், ஆசியாவிலும் குறிப்பாக ஹாங்கொங்கிலும் கோவிட் தொற்றுக்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை ஏற்படுத்தியிருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார். இந்த துணை மாறுபாடு தான் அமெரிக்காவின் புதிய கோவிட் தொற்றுக்களில் 30% வீதமாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அமெரிக்காவின் CDC எனப்படும் நோய்க் கட்டுப்பாட்டு அமைப்பானது, அமெரிக்க மக்கள் உள்ளரங்குகள் மற்றும் பொது மக்கள் கூடும் இடங்களில் இன்னமும் முகக் கவசம் பாவிக்க வேண்டிய தேவையிருப்பதாக அரசிடம் விவாதம் புரிந்து வருகின்றது.

அமெரிக்காவில் தற்போது கோவிட்-19 பெரும் தொற்றால் வைத்திய சாலையில் சேர்க்கப் படுபவர்கள் மற்றும் இறப்பவர்கள் வீதம் தொடர்ச்சியாகக் குறைந்தே வருகின்றது. மேலும் BA.2 மாறுபாடானது ஒமிக்ரோனை விட 50% வீதம் இலகுவாகப் பரவக் கூடியது என்ற போதும் அது ஏற்கனவே தடுப்பூசிகளால், அல்லது தொற்றால் ஏற்பட்ட நோய் எதிர்ப்புச் சக்தியினை விஞ்சவில்லை என்றும் ஃபௌசி உறுதிப் படுத்தியுள்ளார்.

 

வெற்றிகரமாகத் தனது முதல் பரிசோதனை விண்மீன் அகச்சிவப்புக் கதிர் புகைப்படத்தை ஒருங்கமைத்தது ஜேம்ஸ் வெப் தொலைக் காட்டி -

கடந்த வருடம் 2021 கிறிஸ்துமஸ் தினத்தில் பூமியில் இருந்து ஏவப் பட்டு தற்போது பூமிக்கு மேலே L1 என்ற ஆர்பிட்டரில் சூரியனைச் சுற்றி வந்து கொண்டிருக்கும் உலகின் மிகப் பெரிய விண் தொலைக் காட்டியும், முதல் அகச்சிவப்புக் கதிர் (Infrared Ray) தொலைக் காட்டியுமான ஜேம்ஸ் வெப் விண் தொலைக் காட்டி (JWST) விண்ணில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப் பட்ட பின்னர் தனது முதலாவது சோதனை புகைப் படத்தை கடந்த மார்ச் 16 ஆம் திகதி வெற்றிகரமாக எடுத்து ஒருங்கமைத்து பூமிக்கு அனுப்பியுள்ளது.

இதன் மூலம் JWST இன் தங்க முலாம் பூசப் பட்ட அதன் ஆடிகளும், வில்லைகளும், ஏனைய பாகங்களும் திறம்பட இயங்குவதை நாசா உறுதிப் படுத்தியுள்ளது. ஏற்கனவே JWST தொலைக் காட்டி விண்ணில் வெற்றிகரமாகத் தன்னை நிறுவிக் கொண்ட பின் பெப்ரவரி 11 ஆம் திகதி தன்னைத் தானே முதன் முறையாக செல்ஃபீ எடுத்தும் அனுப்பியிருந்தது.

இதன் பின் கடந்த மார்ச் 16 ஆம் திகதி இந்த JWST தொலைக் காட்டி தன்னில் அடங்கியிருக்கும் தங்க முலாம் பூசப் பட்டிருக்கும் ஆடிகள் மற்றும் வில்லை அதன் குவியம் போன்றவற்றின் செயற்பாடுகள் திருத்தமாக இடம்பெறுவதை உறுதிப் படுத்தும் 'Fine Phasing' என்ற நடவடிக்கைக்காக 2MASS J17554042+6551277 என்று விஞ்ஞான ரீதியாகப் பெயரிடப் பட்ட விண்மீனை நோக்கிப் படம் பிடித்தது. இந்த நட்சத்திரத்தில் இருந்து வரும் ஒளியை JWST இல் அடங்கியிருக்கும் அனைத்து தங்க ஆடிகளும் (Optics) பெற்று பின் NIR Cam என்ற கருவி மூலம் அந்த அகச்சிவப்புக் கதிர் படத்தின் துல்லியத்தை மிகவும் அதிகரிக்கும் விதத்தில் மையத்தில் ஒருங்கமைத்து குறித்த படத்தை (Infrared Image) உருவாக்கின.

இந்த முதல் விண்மீன் புகைப் படம் எமது இந்த செய்தித் தொகுப்பின் மேலே இருக்கும் முகப்பில் உங்களுக்குப் பிரசுரிக்கப் பட்டுள்ளது. மேலும் JWST இன் இந்த சாதனை குறித்த முக்கிய விபரங்கள் கீழே இருக்கும் YouTube வீடியோவிலும் ஆங்கிலத்தில் விளக்கப் படுகின்றது.

- 4 தமிழ்மீடியாவுக்காக நவன்

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction